Wednesday, August 31, 2016

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (2)

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை"  (2) 

1942 ஆம் வருடம் ஒரு நாள் மதியம் கடையில் நான் கைக்குட்டையில் எம்பிராய்டரி செய்து கொண்டிருந்தேன். நான் எம்பிராய்டரி செய்த கைக்குட்டைகள், பின்னிய உல்லன் தொப்பி போன்றவற்றை விற்றால் கிடைக்கும் பணம் எனக்குறியது. கடைக்கு வரும் ஏழை மாணவியர்களுக்கு அந்தப் பணத்தில் புத்தகம் அல்லது நோட்டு வாங்கிக் கொடுத்து விடுவேன்.

அப்போது ஒரு இந்திய வாலிபர் கடைக்கு வந்து ஒரு நோட்டும், ஒரு பேனாவும் வாங்கினார். நான் விற்பனை செய்து விட்டு மீண்டும் எம்பிராய்டரி வேலையில் மூழ்கினேன். பக்கத்துக் கடை பெண்மணி என்னிடம் வந்து சிரித்துக் கொண்டே, "நீ விரைவில் ஒரு இந்தியரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்" எனக் கூறினார். நான் கோபத்துடன் "என்ன உளறுகிறீர்கள்?" என்றேன்.

"நான் சொல்வது உண்மை தான். அந்த இளைஞர் உன் கடையில் நோட்டு வாங்கும்பொழுது கடைக்கு சற்று தள்ளி நான்கு இந்தியர்கள் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர். அந்த இளைஞர் வந்ததும் ஐவரும் இப்ராஹீம் (என்பவரின்) கடைக்குச் சென்று விட்டார்கள். அதனால் தான் சொல்கிறேன், அவர்கள் உன்னை பெண் கேட்கத்தான் வந்திருந்தார்கள் என நினைக்கின்றேன்" என்று அந்த பக்கத்து கடைப் பெண்மணி கூறிவிட்டு சென்றார்.


சற்று நேரம் கழித்து என் தம்பி வந்து, "நான் கடையை கவனித்துக் கொள்கிறேன், தாத்தா பாட்டி உன்னை வீட்டுக்கு வரச் சொன்னார்கள், வரவேற்பறையில் நிறைய இந்தியர்கள் அமர்ந்திருக்கிறார்கள், உன்னை பெண் கேட்கிறார்கள் என நினைக்கின்றேன்" என்று கூறியதைக் கேட்டு நான் வீட்டுக்குச் செல்ல மறுத்தேன்.

நானும் தம்பியும் பேசிக்கொண்டிருக்கையில் மாமா வந்து என்னிடம், "நீ வீட்டுக்குப் போம்மா, நான் கடையில் இருக்கிறேன்" என்று சொன்னதும் நான் உடனே வீட்டுக்குப் புறப்பட்டேன். நான் என் மாமாவின் மேல் மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பேன். எனவே மறுபேச்சு பேசாமல் கிளம்பி விட்டேன்.

வீட்டுக்கு வந்து நேராக சமையலறைக்குள் புகுந்தேன். எனது பாட்டி அங்கு வந்து உட்கார்ந்தார்கள். என்னையும் உட்காரச் சொன்னார்கள். நான் மிகவும் பயத்துடன் பாட்டியின் பக்கத்தில் அமர்ந்தேன்.


பாட்டி என் கைகளைப் பற்றிக்கொண்டு, "இந்த வாலிபர் இந்தியர். ஹைஃபோங் (Haiphong) இல் இருந்து வந்திருக்கிறார். இப்ராஹீம் மூலமாக உன்னை பெண் கேட்டு வந்திருக்கிறார். நல்ல பையனாகத் தெரிகிறது. எங்களுக்குப் பிடித்திருக்கிறது" என்றார்கள்.

நான் அழுதுகொண்டே, "நான் இப்பொழுது தானே படிப்பை முடித்தேன், இரு வருடங்கள் அவகாசம் தாருங்கள்" என்றேன். எனது அம்மாவும் திருமணத்திற்கு சம்மதிக்கச் சொன்னார்கள். எனது தாத்தா என்னருகே வந்து, "நீ வளர்ந்து விட்டாய். எனக்கும், பாட்டிக்கும் வயதாகி விட்டது. உனக்கு திருமணம் செய்து விட்டால் நாங்கள் நிம்மதியாக இருப்போம்" என்றார்கள்.

நான் அழுது கொண்டே இருந்தேன். சம்மதம் தெரிவிக்கவில்லை.

தாத்தா மீண்டும் வரவேற்பறைக்கு வந்து வந்திருந்தவர்களை வழியனுப்பி வைத்தார்கள். எனக்கு சந்தோஷமாக இருந்தது. இத்துடன் இவ்விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்று நினைத்தேன்.

இரவு உணவு உண்ட பின் பாட்டி என்னை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றார்கள். அங்கு என் அம்மாவும், மாமியும் இருந்தார்கள். மூவரும் என்னை திருமணத்திற்கு சம்மதிக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள்.

அந்த நேரத்தில் தாத்தாவும், மாமாவும் உள்ளே நுழைந்தார்கள். மாமாவின் பேச்சை நான் தட்டியதே இல்லை. (அவர் மீது அவ்வளவு மரியாதை எனக்கு.)

மாமா என்னிடம், "நீ தாத்தா, பாட்டியின் பேச்சைக் கேட்டு நடந்தால் நானும், மாமியும் மிக்க மகிழ்ச்சியடைவோம். சைகோனில் இருந்து பல இடங்களில் இருந்தும் உன்னைப் பெண் கேட்டு வந்தார்கள் ஆனால் நாங்கள் சம்மதிக்கவில்லை. ஏனெனில், நீ படித்துக் கொண்டிருந்தாய். சிறிய பெண்ணாக குடும்பத்தினரின் அன்பான அரவணைப்பில் வாழ்ந்து கொண்டிருந்தாய். இந்தப் பையனைப் பார்த்தால் ரொம்ப நல்லவராகத் தெரிகிறார். உனக்கும் 18 வயதாகிவிட்டது. நீ சம்மதித்தால் நாங்கள் பெருமகிழ்ச்சியடைவோம். நீ எங்களைப் பிரிந்து சென்றால் எங்களுக்கு உன் நினைவாகத்த்தான் இருக்கும். இருந்தாலும் எங்கள் கடமையை நாங்கள் நிறைவேற்ற வேண்டுமல்லவா?" என்று மாமா கூறியதைக் கேட்டதும் நான் மெளனமாக இருந்தேன். மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி!

மாப்பிள்ளை வீட்டாரிடம் இன்னும் பதில் கூறாததால் மறுநாள் அவர்கள் மீண்டும் வந்தார்கள். (ஏற்கனவே பக்கத்துக்கடை உரிமையாளர் இப்ரா ஹீம், "மாப்பிள்ளை ரொம்ப நல்ல குணமுடையவர்" என்று பரிந்துரை செய்திருந்தார்.) அவர்களுடன் ஹஜ்ரத் இஸ்மாயீல் என்பவரும் வந்திருந்தார். இவர் பெண் கேட்டு வந்த வாலிபரின் உறவினர். என் வீட்டினர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் அடுத்த வாரம் நிச்சயதார்த்தம், செப்டம்பர் 26 ஆம் தேதி திருமணம் என முடிவு செய்யப்பட்டது.

அப்பொழுது என் வருங்காலக் கணவருக்கு 28 வயது. எனக்கு 18 வயது. மணமகனின் பிறந்த நாள் 15-08-1915, மணமகளான என் பிறந்த நாள் 18-08-1925

திருமணம் இறையருளால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வந்து சிறப்பித்தார்கள். தாத்தா, பாட்டி, அம்மா, மாமா, மாமி அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம். வந்திருந்த அனைவரும் மணமக்களை வாழ்த்திவிட்டு விடை பெற்றார்கள். எனது தம்பிமார்கள் மூவரும், மாமாவின் மகள்கள் இருவரும் என்னருகிலேயெ நின்று கொண்டிருந்தார்கள்.

திருமணம் முடித்து நாங்கள் 10 நாட்கள் பெந்த்ரே (Bentre) வில் இருந்தோம். மிக்க மகிழ்ச்சியான நாட்கள் அவை. வீட்டில் அனைவருக்கும் என் கணவரை ரொம்பப்பிடித்து விட்டது. என் கணவர் நற்குணம் மிக்கவர். அவரைக் கணவராக அடைந்தது நான் செய்த பாக்கியம். அல்ஹம்துலில்லாஹ்.


எங்களுடன் சைகோனுக்கு தாத்தா, பாட்டி, மாமா, மாமா பெண், பெரியத்தா ஆகியோர் வந்தனர். சைகோனில் இருந்து என் கணவர் வசித்த ஊரான ஹைஃபோங் (Haiphong) க்கு ரயிலில் செல்ல வேண்டும். 6-10-1942 இரவு ரயிலில் புறப்பட்டு 8-10-1942 மதியம் 3 மணியளவில் ஹனோய்(Hanoi)க்கு வந்து சேர்ந்தோம். (ஹனோய் அப்போது வட வியட்நாமின் தலைநகர். சைகோன், பெந்த்ரே இரண்டுமே தென் வியட்நாமில் இருந்தன.)

என் அன்புக்கணவரின் நண்பர்கள் எங்களை வரவேற்க வந்திருந்தனர். R.அப்துல் அஜீஸ் என் கணவரின் பிஸ்னஸ் பார்ட்னர். எங்களை அழைத்துச்செல்ல காரில் வந்திருந்தார். அவர் என்னிடம் மலர்க்கொத்தை அளித்து வாழ்துக் கூறினார். நான் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு நன்றி சொன்னேன்.

அனைவரும் காரில் ஏறினோம். மூன்று கார்கள். இரு கார்களில் என் கணவரது நண்பர்கள். மற்றொரு காரில் தாத்தா முன் சீட்டிலும், பாட்டி நான், என் கணவர், மாமா பெண் நால்வரும் பின் சீட்டிலும் அமர்ந்தோம்.

பாட்டி என் கரத்தை பற்றிக்கொண்டு "ஹைஃபோங் (Haiphong) இவ்வளவு தொலைவில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை" எனக்கூறி அழுதார்கள். நானும் அழுதேன். என் கணவர் என் கரத்தைப் பற்றி "அழாதே" என ஆறுதல் கூறினார்கள்.

என் பிறந்த வீட்டில் இருந்த பத்து நாட்களில் என் கணவர் என்னிடம் மட்டற்ற காதலுடன், மாசற்ற அன்புடன் பழகியதால் எனக்கு அவ்வளவாக கவலையோ, பயமோ ஏற்படவில்லை.

என் பிறந்த வீட்டினர் ஐவரும் 15 நாட்கள் ஹைஃபோனில் எங்களுடன் தங்கியிருந்தனர். என் கணவர் மிகவும் மகிழ்வுற்றார். அவர்களை மிகவும் நல்ல முறையில் உபசரித்தார்.. தேவைகளை பூர்த்தி செய்தார். என்னிடம் மிகப் பிரியமாக இருந்தார். அதைக் கண்ட பாட்டி மிகவும் சந்தோஷமடைந்தார்கள்.

21-10-1942 அன்று என் பிறந்த வீட்டினர் ஐவரும் ஊருக்குத் திரும்பினார்கள். நான் அவர்களை வழியனுப்பும்போது பிரிவுத் துயரில் கண்ணீர் வடித்தேன். அதிகம் அழுதேன். என் மாமாவின் 5 வயதுப் பெண் குழந்தை என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு காரில் ஏற மறுத்தது. அழுதுகொண்டே அவர்களுக்கு விடை கொடுத்தேன்.

அடுத்து என் அன்புக் கணவருடன் இனிதே இல்லறம்.

தொடர்ச்சிக்கு   கீழுள்ள   "Next"   ஐ "கிளிக்"   செய்யவும்

www.nidur.info

"ஹனோய்" Hanoi யின் மேலதிக புகைப்படங்களுக்கு Google மூலம் தேடிப்பாருங்கள்.


ஹைஃபோங் Haiphong    நகரின்  மேலதிக புகைப்படங்களுக்கு Google மூலம் தேடிப்பாருங்கள்.





"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (12)

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (11)

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (10)

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (9)

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (8)

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (7)

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (6)

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (5)

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (4)

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (3)

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (2)

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (1)

No comments: