Monday, August 15, 2016

ரஹ்மத் பதிப்பகம்: நிறைவேறிய கனவு


இஸ்லாம் தொடர்பான தரமான தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டுவருவதில் முக்கியமானது ரஹ்மத் பதிப்பகம். இந்தப் பதிப்பகத்தின் மேலாளர் இ.எம். உஸ்மானுடன் பேசினோம்:

“சென்னை ரஹ்மத் அறக்கட்டளையால் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பதிப்பகம்தான் ரஹ்மத் பதிப்பகம். இதன் நிறுவனர் எம்.ஏ. முஸ்தஃபா அவர்கள். மயிலாப்பூரிலும் சிங்கப்பூரிலும் எங்களுக்குக் கிளைகள் இருக்கின்றன. அரபி மூல நூல்களான புகாரி, முஸ்லீம், திர்மிதி, அபூதாவூத். தப்சீர் இப்னு கஸீர், நபி மொழிகள் முதலான பல்வேறு முக்கியமான புத்தகங்களை அழகான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறோம். அரபி மொழியும் தமிழும் அறிந்த பெரும் அறிஞர் குழுவின் 20 ஆண்டுகள் உழைப்பில் ரஹ்மத் பதிப்பகம் கொண்டுவந்த மொழிபெயர்ப்புகள் நிறைய. இந்தப் புத்தகங்கள் வந்த பிறகு மக்களுக்குப் பெரிய விழிப்புணர்வே கிடைத்ததுபோல் இருக்கிறது. அதற்கு முன்பு அரபி மொழியறிந்தவர்கள் சொல்வதிலிருந்து மக்கள் பல விஷயங்களை ஒவ்வொரு விதமாகப் புரிந்துவைத்திருந்தார்கள். நாங்கள் கொண்டுவந்த அதிகாரபூர்வமான புத்தகங்களைப் பார்த்துவிட்டு அரபி மூலத்தில் சொல்லப்பட்டதைத் தெளிவாகத் தமிழிலும் மக்கள் உள்வாங்கிக் கொண்டனர்.


இன்று தமிழ்நாட்டின் எல்லா பள்ளிவாசல்களிலும் எல்லா இயக்கங்களின் அலுவலகங்களிலும் எங்கள் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பு நூல்கள் இடம்பிடித்திருக்கின்றன. அது மட்டுமல்லாமல் அமெரிக்கா, நைஜீரியா, இங்கிலாந்து போன்று தமிழ் மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நம் நூல்கள் போய்ச்சேருகின்றன. முஸ்லிம்கள் மட்டுமல்ல, மாற்று மதச் சகோதரர்களும் இஸ்லாம் மீதும் நபிகளார் மீதும் ஆர்வம் கொண்டு எங்கள் புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள்.

‘சிங்கப்பூரில் தமிழ் முஸ்லீம்கள்’ என்ற மிக முக்கியமான, விரிவான வரலாற்று நூலை வெளியிட்டிருக்கிறோம். கவி. கா.மு. ஷெரீபின் எல்லாப் புத்தகங்களையும் கொண்டுவந்திருக்கிறோம்.

இஸ்லாம் தொடர்பான நூல்கள் தவிர முக்கியமான பல நூல்களும் நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். கால்டுவெல் பற்றிய புத்தகம், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரையின் ‘கையருகே நிலா’, மலைச்சாமி ஐ.ஏ.எஸ் வாழ்க்கை வரலாறு போன்றவை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. மலேசியத் தமிழ்க் கவிஞர்கள் பற்றிய புத்தகமும் மிக முக்கியமான ஒன்று.

சமயம் சார்ந்த நூல்கள், தமிழ் சார்ந்த நூல்கள் என்று எங்கள் பயணத்தில் எதிர்காலத்தில் இன்னும் பல திட்டங்கள் வைத்திருக்கிறோம். சமய வேறுபாடு இல்லாமல் ஆதரவு தரும் வாசகர்களின் ஒத்துழைப்போடு எங்கள் கனவுகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்.”

- கேட்டு எழுதியவர்: ஆசை
நன்றி : http://tamil.thehindu.com/

No comments: