பாலைவன கப்பல் என்று சிறுவயதில் படித்ததுண்டு. எப்போதாவது எங்கவூர் நாகர்கோவிலில் கூடாரம் அமைத்து சர்க்கஸ் காட்டும் இடங்களில் பார்த்ததுண்டு, அவைகளோடு வந்து சர்க்கஸ் விளம்பர துண்டு பிரச்சார விநியோத்தின்போது அதன் பின்னாலே நடந்து நேரம்போகாமல் பார்த்ததும் மறக்க முடியாத நிகழ்வுகள்.
வளர்ந்ததும் வேலைநிமித்தம் ஆப்ரிக்காவிற்கு வந்ததும் பல வனவிலங்குகளை அதனதன் இருப்பிடத்திலேயே கண்டு வியந்ததுண்டு.
மேலும், ஆப்ரிக்காவின் முக்கிய நகரங்களில் 'கார்னிவல்' என்று அறியப்படுகின்ற ஆடம்பர உணவுவிடுதிகளில் ஆசைக்காக சென்று அதிக விலைகொடுத்து சமைத்த சில வனமாமிச (Game Meat) வகைகளை ஒருகை பார்த்ததும் ஒரு அரிய அனுபவம்தான்.
கென்யா நாட்டு தலைநகரம் நைரோபியில் உள்ள 'கார்னிவல்' உணவகம் பலவகையான வனமாமிசங்களுக்கு பெயர்போனது. அங்கு நான் சுவைத்தவையாவன: முதலை, நீயானை, வாட்டர்பக் எனப்படும் மான்வகையைச்சார்ந்த மிளா, காட்டு எருமை மற்றும் பறப்பனவற்றில் தீக்கோழி போன்றவையாகும்.
இந்த உணவகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் முதலிலேயே பணம் செலுத்திவிட்டு நமக்கான உணவுமேஜை முன்பதிவு செய்துவிட்டு குறித்த சமயத்தில் அதில்போய் அமர்ந்ததும் மேஜையில் ஒரு கொடி (அந்த உணவகத்தின் கொடி) வைக்கப்படும். அதன்பின்னர் விளப்பம் ஆரம்பமாகும். ஆஜானுபாகுவான சமையல்காரர்கள் சமைத்த, பொதுவாக சுட்டுசமைத்ததை அப்படியே சூடுபறக்க பெரிய குத்துக்கரண்டியால் முழுத்தொடை போன்ற பாகங்களை கொண்டுவந்து நாம் இருக்கும் மேஜையில்வைத்தே தட்டையில் வைக்கும் அளவில் வெட்டிவிளம்புவார்கள். இப்படியாக ஓன்று முடிய ஓன்று வந்துகொண்டே இருக்கும். இதுபோதும், இனிமேல் இறங்காது என்ற நிலைக்கு நாம் வந்ததும் மேஜையில் ஏற்றிவைத்த கொடியை இறக்கிவைத்துவிட வேண்டும். இது இந்த உணவகங்களில் ஒரு சம்பிரதாயமாகவே கடைபிடிக்கப் படுகிறது. வித்தியாசமான உள்ளம் கொள்ளைபோகும் நிகழ்ச்சியாக இருக்கும்.
நான் அங்கு சென்றிந்தபோது ஒட்டக இறைச்சி பரிமாறப்படவில்லை. எனக்கும் அதன் நினைவே இல்லை.
ஒட்டகத்தை சில வருடங்களுக்கு முன்னர் கம்பாலாவில் விக்டோரியா ஏரிக்கரையில் அமைக்கப்பட்ட ரிசார்ட் பீச் ஒன்றில் மழலையரை கவருவதற்காக கொண்டுவந்தனர். அதில் கட்டணம் வசூலித்து சவாரி செய்யும் வசதியும் செய்பட்டிருந்தது. அப்போது மீண்டும் அந்த பாலைவனக் கப்பலை மரங்கள் அடர்ந்த கரையை முட்டியபடி தண்ணீர் தளும்பும் எரிக்கரையோரம் காணக்கிடைத்ததில் எல்லோரோடு நானும் மகிழ்வு கொண்டது நினைவுக்கூறத்தக்கது.
மேலும் கம்பாலாவில் சோமாலிய நாடு பிரஜைகள் வசிக்கும் பகுதியில் எப்போதாவது ஒட்டகம் கொண்டுவரப்பட்டு இறைச்சிக்காக அறுத்து விற்பனை செய்யப்படுவதையும் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அதன் இறைச்சியை இதுவரையிலும் புசித்ததில்லை. அனுமதிக்கப்பட்டது என்றாலும் தேவையாக இருக்கவில்லை.
குரங்கின் மாமிசத்தை காங்கோவில் சர்வசாதாரணமாக சந்தையிலும் விற்கிறார்கள். ஒருமுறை நான் கிசங்கானி எனும் ஊருக்கு தரைமார்கமாக பயணிக்கும்போது உணவுண்ட விடுதியில் பரிமாறப்பட இருந்தது. அதுபற்றிய சுவையான செய்தியை எனது 'காங்கோ பயணக்குறிப்பு' கட்டுரையில் பதிகிறேன்.
இப்போது ஊடகங்களில் அடிபடும் ஒட்டக செய்தியைப் பார்க்கப் பார்க்க படிக்கப் படிக்க அனுமதிக்கப்பட்ட அதன் இறைச்சியையும் சுவைக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.
ஊடகத்தின் தாக்கம் அளவிடமுடியாத ஒன்றுதான். ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
No comments:
Post a Comment