Friday, August 12, 2016

பகுத்தறிவு - மனிதன் - மார்க்கம் - இறைவன்

பகுத்தறிவு - மனிதன் - மார்க்கம் - இறைவன்

எனக்கு இந்த உலகம் மிகவும் இன்புற்றிருக்க வேண்டும். குற்றங்கள் இல்லாத பூமியாய் இது மலரவேண்டும். எங்கும் அமைதியும் அன்புமே பொங்கவேண்டும். காதலில், பாசத்தில், சகோதரத்தில், நட்பில் மகிழ்ந்து குலாவித் திரியவேண்டும். வன்முறையே இல்லாத நாட்களே மண்ணில் வேண்டும். காண்போரையெல்லாம் நெருக்கமான உறவுகளாய் ஆக்கிக் கட்டித் தழுவ வேண்டும்.

நண்பர் ஒருவர் என்னிடம் தன் வலைத்தள முகப்பில் இடுவதற்கு சில வரிகள் கேட்டிருந்தார். ஒரு பாடலைச் சுட்டிக்காட்டி அதுபோல் இருந்தால் நலம் என்றார். அவருக்காக நான் எழுதிய வரிகள் இதோ:

புத்தம் புதிதாகப் பிறக்க வேண்டும்
நித்தம் விடிவானில் பறக்க வேண்டும்
செத்த விலங்கோடும் அன்பு வேண்டும்
சித்தம் கலையாத பண்பு வேண்டும்
புத்தம் மறவாத புனிதம் வேண்டும்
ரத்தம் பழகாத மனிதம் வேண்டும்
சத்தம் வெல்லாத அமைதி வேண்டும்
யுத்தம் இல்லாத பூமி வேண்டும்

இப்படியே ஆசைப்பட்டால் மட்டும் இது சாத்தியமாகிவிடுமா? இதை எப்படி அடைவது?


இதை அடைய மனிதனுக்கு சில குணங்கள் அழுத்தமாக இருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தேன். அந்த குணங்களைச் சுருக்கிச் சுருக்கி மூன்றாக்கினேன். அதிசயமாய் அது வள்ளுவனோடு ஒத்துப் போனது.

அன்பு அறம் அறிவு

இந்த மூன்றும் ஒரு சிறு பிசிரும் இல்லாமல் மனிதர்கள் அனைவரிடத்தும் இருந்தால் எப்படி வாழ்க்கை இருக்கும் என்று கனவு கண்டுபார்த்தேன். கனவை விட்டு என்னால் வெளியில் வரவே முடியவில்லை.

என்றால் இந்த மூன்றையும் மனிதர்களிடத்தில் பதிப்பதற்கு என்ன தேவை என்று சிந்தித்தேன்.

கவிதைகள் எழுதினால் எல்லோரும் இப்படி மாறிவிடுவார்களா? ம்ம்ம் முட்டாள்தனம், ரசித்துவிட்டு அவரவர் வழியில்தான் பயணப்படுவார்கள்.

பெரும் புரட்சி செய்தால் சரியாகிவிடுமா என்று சிந்தித்தேன். சரியாகும் ஆனால் சரியாகாது என்பதையும் புரிந்துகொண்டேன்.

நல்லவன் கெட்டவன் படித்தவன் படிக்காதவன் பண்புடையவன் பண்பில்லாதவன் அன்புள்ளவன் அன்பே இல்லாதவன் இப்படி எல்லோரையும் இந்த அன்பு அறம் அறிவு கொண்டு வாழ், எக்காரணம் கொண்டும் மாறாதே என்று எப்படித்தான் சொல்வது? சொல்வதுமட்டும் போதுமா எப்படி அவர்களை அப்படியே அந்த வழியில் நடக்கச் செய்வது? அது மிக மிக முக்கியமல்லவா?

பிறந்த குழந்தையிடமிருந்து அறம் போதிக்கப்பட்டால் எப்படி? அவன் அன்பே இல்லாதவனாய் இருந்தாலும் சரி, அறிவே இல்லாதவனாய் இருந்தாலும் சரி, அறம் வழுவாதவனாய் இருந்துவிட்டால் போதுமே. யாரிடமும் எந்த வம்புக்கும் போகாமல் நேர்மையாக ஒழுக்கமாக வாழ்ந்துவிடுவானே? அப்படி வாழ்ந்தால் போதுமே? எல்லோரும் எந்த ஒரு இன்னலும் இல்லாமல் இன்புற்றிருக்கலாமே?

என்றால் இந்த அன்பு அறிவு இரண்டும் இரண்டாம் பட்சம்தான். அறம் அறம் அறம் அதுதான் அமைதிக்கும் வன்முறையற்ற உலகுக்கும் ஒரே வழி. கண்டுகொண்டேன்.

அறம் என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும், ஊருக்கு ஊர் மாறுபடும். என்றால் பொதுவான ஒரு அறம் அது முழுமையாக எல்லா உயிர்களுக்கும் சுகம் தரக்கூடிய அறமே வேண்டும். அதிலும் ஒரு தெளிவு கிடைத்தது.

அறம் என்றால் என்ன என்று பலருக்கும் குழப்பம் இருக்கிறது. அதை கொஞ்சம் எளிமையாய்ப் பார்த்துவிடுவோம்.

அறம் என்றால் நல்லது
அறம் என்றால் நியாயமானது
அறம் என்றால் ஒழுக்கமானது

இப்படிச் சொன்னாலும் போதாது. இன்னும் எளிமையாகச் சொல்லலாம்.

லஞ்சம் வாங்கினால் அங்கே அறம் இல்லை
ஊழல் செய்தால் அங்கே அறம் இல்லை
களவு செய்தால் அங்கே அறம் இல்லை
போறாமை பட்டால் அங்கே அறம் இல்லை
பாகுபாடு காட்டினால் அங்கே அறம் இல்லை

இப்படியாய் கெட்ட விசயங்கள் அத்தனையையும் பட்டியல் இடுங்கள். அவையெல்லாம் அறம் இல்லாததால்மட்டுமே நிகழ்கின்றன. அறம் வழுவாது இருந்தால் இவை எதுவுமே நிகழாது.

என்றால் அறத்தை வலியுறுத்துவது எத்தனை கடினமானது? அதைக் கவிதை கொண்டு சாதித்துவிடமுடியுமா, கட்டுரைகொண்டு சாதித்துவிடமுடியுமா, சட்டம் கொண்டுதான் சாதித்துவிடமுடியுமா?

சட்டம் கொண்டு சாதித்துவிட முடியும் என்று பிழையாக எண்ணுவர். சட்டத்தின் ஓட்டைகளைத் தேடும் அறமற்றவனை அவர்கள் மறந்திருப்பார்கள்.

சட்டம் துட்டுக்கு வளையும் அறமற்ற செயலை அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.

மருத்துவனும் அறமற்று இருக்கிறான் காவலனும் அறமற்று இருக்கிறான் ஆட்சியாளம் அறமற்று இருக்கிறான். நாம் எங்கே நலமாக வாழப்போகிறோம்.

பெண்களை அடிமைப்படுத்துவது, குழந்தைகளைக் கொத்தடிமைகளாய் வைத்திருப்பது, பெற்றோரை தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிவது பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பது.... இப்படியே ஏராளம் ஏராளம். அதை எல்லோருமே அறிவீர்கள்தானே?

இதெல்லாம் தீர்ந்து உலகம் சுத்தமானதாய் வாழத் தகுந்ததாய் ஆக வேண்டும் என்றால் நமக்கெல்லாம் என்ன வேண்டும்.

அறம்

அறம்

அறம் ஒன்றே வேண்டும்!

அறத்தின் அவசியத்தைக் கண்டுவிட்டோம்.

பரிசுத்தமான அறம் ஒன்றே
எந்த ஒரு சுயநலமுமே
கலக்கமுடியாத
ஒர் அற்புதச் செலயாக
இருக்க முடியும்

இனி வேறொரு திசையிலிருந்து வருவோம்.

இறைவன் இருக்கின்றானா? இல்லையா?

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியவன் இறைவன்.

எப்படி?

இறைவன் மனித எண்ணங்களில் தோன்றக் காரணம் மிகவும் எளிமையானது.

பயம்!

கண்ணெதிரே இருந்தவன் அசைவுகளற்றுப் போனான், மூச்சுவிடாமல் போனான், எத்தனை எழுப்பியும் அவன் எழுந்துகொள்ளவே இல்லை. ஒரு நாள் இந்த உறக்கத்திலிருந்து எழுவான் என்று காத்திருந்ததெல்லாம் காற்றில் காணாமல் போனது. அவன் எழவே இல்லை.

ஏன் என்ற கேள்வி பயத்தைத்தான் தந்தது.

அப்படி இறந்தவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு சக்தியாய் ஆகிவிட்டார்கள் என்று நினைத்தான்.

பின் நல்லவர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் மரணமடைவதை அந்த ஊரே ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் மரணிக்காமல் இருக்கமுடியுமா?

அப்படி இறந்த நல்லவர்களைப் புதைத்த இடத்தை தொட்டுத் தொட்டு முத்தமிட்டார்கள், கண்ணீர் வடித்தார்கள். அவர்களை எல்லாம் தெய்வங்கள் ஆக்கினார்கள்.

இப்படியே சிந்தித்துக்கொள்ளுங்கள்.

இந்த எண்ணங்கள் பழக்கங்கள் ஏகப்பட்ட மாற்றங்களை அடைந்து அடைந்து ஏதோ ஒரு சக்தி நமக்கு மேல் இருக்கிறது எனபதை மட்டும் உறுதியாக நம்பத் தொடங்கிவிட்டனர்.

அந்த சக்திதான் அனைத்துக்கும் காரணம் என்று சொல்ல தத்துவ ஞானிகள் தாரளமாய் காலங்கள் தோறும் வந்தனர்.

அவரவர் கற்பனைக்கு ஏற்ப இறைவனுக்கு பல வர்ணனைகளைக் காலங்காலமாய் கொடுத்துக் கொடுத்து பின் சரிசெய்து அடித்துத் திருத்தி சிறந்த கருத்தை முதன்மைப் படித்தி என்று அது வளர்ந்துவிட்டது.

ஓர் இயற்கையான நிகழ்வாக அதுவும் நிகழ்ந்துவிட்டது. இறைவன் தோன்றிவிட்டான்.

அந்த இறைவனிடம் மக்கள் பலவற்றையும் எதிர்பார்த்தார்கள். அவற்றுள் முக்கியமானவையாக இருந்தது இரண்டு விடயங்கள். அவன் அவற்றைத் தந்தானோ தரவில்லையோ ஆனால் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

ஒன்று - அன்பு
இரண்டு - கருணை

மறுக்காத அன்பிருந்தால்
நாம் பாதுகாப்பாய் அரவணைப்பில்
சுகமாக இருக்கலாம்
நிறைவான கருணை இருந்தால்
நாம் வேண்டுவதெல்லாம் கிடைக்கும்
வாழ்க்கை இன்பமாக இருக்கும்

இவற்றை நிரந்தரமாய் தர மண்ணில் மனிதர்களுக்கு யாருமே இல்லை. ஆனால் இறைவன் நிரந்தரமாய்த் தருகிறான் என்று மனிதர்கள் நம்பினார்கள். ஏனென்றால் அவன் தான் மகா சக்தியாயிற்றே!

சரி இறைவன் தருவதெல்லாம் இருக்கட்டும். ஆனால் இறைவன் மகா சக்தி என்று நம்பப்படுவதால் அவன் எதையும் செய்யக் கூடியவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதால் அவனிடம் அளப்பரிய பயம் இருந்தது. அதுதான் இங்கே முக்கியமான விடயம்.

இறைவனிடம் பயம்!

இறைவன் மறைவிடங்களை எல்லாம் காணக்கூடியவன். அவனிடம் நாம் எதையும் மறைகக் முடியாது.

இறைவன் நின்று கொள்வான். சும்மா விட்டுவிடமாட்டான்.

இப்படியாய் பயம் பயம் பயம்!

இந்த பயம் யாராலும் ஊட்டப்படவில்லை, அது இயல்பாகவே மனிதர்களிடம் இருந்தது.

அறம் அறம் என்று புலம்பினேன் முதல் அத்தியாயத்தில்
பின் பயம் பயம் என்று உறுதியாய்ச் சொன்னேன் இரண்டாம் அத்தியாயத்தில்

இனி இரண்டையும் தொடர்பு படுத்திப் பார்த்துவிடலாமல்லவா?

அறத்தை எவனுக்கும் வெறுமனே போதித்துவிடமுடியாது, அப்படியே போதித்தாலும் அதை அவனை ஏற்கச் செய்ய முடியாது.

ஒவ்வொருவன் வீட்டிற்கும் சென்று சட்டத்தால் ஒன்றும் கிழித்துவிடமும் முடியாது. தெரியாமல் அவன் நாட்டையே விற்றும்விடுவான்.

ஆனால் அவனது பயத்தைப் பயன்படுத்திக்கொண்டால்?

அவன் பயத்தை ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கான மூலதனமாக்கிக்கொண்டால்?

மனித நேயத்தை மூச்சாய் எண்ணிய
சிந்தனையில் சிறந்து விளங்கிய
இயல்பாகவே அறத்தோடு பிறந்த
பெரும் ஞானிகள்
சுயநலமே இல்லாதவர்கள்
மனித குலம் சிறப்பாக வாழ வழி தேடித்தேடி
அவர்களும் இறைவனிடமே வந்து நின்றனர்

சிறந்த அறத்தை முயன்று முயன்று வகுத்தனர்
வகுத்த அறத்தை இறைவனின் பயத்தைப் பயன்படுத்தி
நடைமுறைக்குக் கொண்டுவந்தனர்

சரி இப்படி ஒரு ஆராய்ச்சியை நாம் செய்தாகிவிட்டது.

இனி இறைவன் இருக்கிறானா இல்லையா என்பது அவரவர் நம்பிக்கை சார்ந்தது.

மார்க்கம் இறைவனால்தான் அருளப்பட்டதா என்பதும் அவரவர் நம்பிக்கை சார்ந்தது.

இறைவனின் மீது பயம் உள்ளவர்கள் இறைவன் அருளியதாய்க் கூறப்படும் அறக் கட்டளைகளை அப்படியே கேட்டு நடப்பார்கள்.

நடந்தால், வீடு ஊர் நாடு உலகம் எல்லாம் நலம்பெரும் சுகம்பெரும். ஏனெனில் அங்கே அரங்கேறப் போவது அப்பழுக்கில்லாத அறம்... அறம்... அறம்.

அறம் அருமையான வாழ்வுதரும்!

சரி இதுவரை பகுத்தறிவுவாதிகளும் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு சிக்கலில்லாத ஆய்வைக் கொடுத்தாகிவிட்டது.

இனி இதையெல்லாம் தாண்டி எப்படித்தான் இத்தனை கேடுகளும் நடக்கின்றன என்பதுதான் முக்கியமான கேள்வி!

தொன்று தொட்டே அறம் மெல்ல மெல்ல வளர்ந்து வந்திருக்கின்றன. ஆரம்பத்தில் சிலவாக வகுக்கப்பட்ட அறம் முழுமைபெற்றதாய் ஆக பல காலங்கள் ஆகிவிட்டன.

இப்போது உங்கள் கேள்விகள் சிலவற்றையும் பார்த்துவிடுவோம்!

>>>>கோத்ராவில் மனிதன்
எரிந்த போது காக்க ராமனும் வரவில்லை

குஜராத்தில் மக்கள் கொல்லப்பட்ட போது
காக்க அல்லாவும் இல்லை

ஒரிஷாவில் பாதிரியாரும்
அவரின் குழந்தைகளும் உயீரோடு
எரிந்த போது அவர் குரலை ஏசுவும்
கேக்கல<<<<

ராமன் மீது பயம் இருந்திருக்கவேண்டும்.
அல்லாஹ்மீது பயம் இருந்திருக்க வேண்டும்
ஏசு மீது பயம் இருந்திருக்க வேண்டும்

அது இல்லாமல் போனதுதான் இதற்கான காரணங்கள். அதுமட்டுமல்ல சொல்லித் தந்த அறத்தைச் சரியாக விளங்கிக்கொள்ளாமல் கண்டவனும் சொன்னதைக் கேட்டு அறிவிலிகளாய் இருந்ததுதான் காரணம்.

கொஞ்சம் சிந்தியுங்கள். புரியும்.

அறம் வகுத்தாகிவிட்டது.
அதைச் செயல்படுத்த இறைவன் பயம் வேண்டும்.

ஆனால் வகுத்த அறம் பிழையாகப் புரிந்துகொள்ளப்படுகிறது
இறைவன்மீதான பயமும் போய்விடுகிறது.

இறைவனைக்கொண்டு மனிதர்கள்தாம் அறம் பேணி நடக்க வேண்டும். தவிர இறைவன் வரவே மாட்டான்.

இதற்குத்தான் இஸ்லாம் அருமையாக ஒன்றைச் சொல்லி இதற்கான பதிலைக் கொடுத்துவிடுகிறது.

அதுதான் மறுமைநாள்!

உலகம் அழிந்ததும், இறந்தவர்கள் எல்லோருமே இறைவனால் எழுப்பப்படுவீர்கள். அவன் உங்களைக் கேள்விகள் கேட்பான். அவனுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் மறந்துவிடாதீர்கள். பொய் சொல்ல முடியாது. எதையும் மறைக்க முடியாது. தண்டனை உண்டு. நரக நெருப்பு காத்திருக்கிறது.

மற்றபடி இறைவன் வாழும் காலத்தில் எதையுமே செய்யமாட்டானா? என்றால் அவன் சுத்த வேஸ்ட் என்று கடவுள் மறுப்பாளர்கள் சொல்லிவிடுவார்கள்.

அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்.

மனித எண்ணங்கள்தாம் இங்கே இறைவன்.

எண்ணங்களுக்கு எத்தனை வலிமை உண்டு. ஒருவன் எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஒரு பல்பையே உடைத்தான் என்றுகூட கேள்விப்பட்டிருக்கிறேன்.

எண்ணங்களை
வானத்தில் முடிச்சுப்போடு
அந்த மேகத்தையேனும்
தொட்டுவிடலாம்
என்பது நான் பதினாறு வயதில் எழுதிய கவிதை

அப்துல் கலாம் சொல்வார். கனவுகாணுங்கள் என்று. கனவு காணுங்கள் என்றால் என்னபொருள். உங்கள் எண்ணங்களில் தெளிவாகத் திட்டமிடுங்கள். அந்த எண்ணங்கள் அதை நிறைவேற்றித்தரும்.

தீவிரமான எண்ணங்களுக்கு முன் எதுவுமே நிற்காது.

எண்ணமே வாழ்வு.

இஸ்லாத்தில் இதை துவா செய்தல் என்பார்கள். அதாவது எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று இறைவனிடம் கேளுங்கள் என்பார்கள்.

இறைவனிடம் கேட்கும்போது அறமற்றதைக் கேட்க முடியுமா? முடியாதல்லவா?

இறைவன் கூட்டுப் பிரார்த்தனை செய்யும்போது சில உயிர்களையே காப்பாற்றித் தருகிறான். ஆனால் இங்கே அவன் எண்ணங்களாய் இருக்கிறான்.

வலிமையான எண்ணங்கள் இறைவனின் அருள் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள்.

மற்றபடி ஆட்டுக்குட்டியைக் காப்பாற்ற ஐம்பது கிலோ மீட்டர் தூரத்திலிருந்து ஓடிவரும் எம் ஜி யாரைப் போலவா இறைவன் வருவான்?

அதை இப்படிச் சொல்வார்கள், இறைவன் தான் உங்களை அனுப்பி வைத்திருகிறான் என்று.

எல்லாம் நம்பிக்கை சார்ந்தது.

இறைவனை நம்பாதவர்கள் எண்ணங்களை நம்பாமல் இருக்க முடியுமா?

ஆகவே, இங்கே அறம் ஒழுக்கமான வாழ்வு தருகிறது
எண்ணங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருகிறது

இவற்றை வகுத்துக்கொடுத்த இறைவனை அல்லது மனிதர்களை புகழாமல் இருக்க முடியுமா?

அதுதான் ஏ ஆர் ரகுமான் ஹாலிவுட்டில் சொன்ன எல்லாப் புகழும் இறைவனுக்கே

>>>
சாதாரன மனிதன் மனதில் எழும் கேள்வி

தன்னையே முற்று முழுதாய் நம்பும்
மனிதனை கூட கடவுள் காப்பாத்த
மாட்டார? என்பதுதானே<<<

தனி மனிதனை மட்டுமல்ல இந்த உலகையே காப்பான் இறைவன். ஆனால் அதற்கு நீங்கள் எல்லோரும் ஒன்றாய் அவன் சொன்னதைக் கேட்டிருக்க வேண்டும்.

இந்த உலகமே அறவழியில் செல்ல வேண்டும். அதற்கு இறைவன்மீதான பயம் காரணமாக இருக்க வேண்டும். வேண்டுதல்களால் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி வாழ்வை அமைத்துக்கொண்டிருக்க வேண்டும்.

சரியாக கட்டப்படாத ஒரு கோபுரம் விழும்போது இறைவன் சொல்வது இதைத்தான். மனிதா நீ ஏன் அறவழியில் அந்த கோபுரத்தைக் கட்டவில்லை. அதற்கான பொருப்பு உன்னுடையதே.

இது நம்பிக்கையாளர்களுக்கு.

நம்பாதவர்களுக்கு? உங்களுக்கே தெரியுமே? பகுத்தறிகிறேன் என்கிறீர்களே?

அறமற்றவர்களை அழிக்காமல் வளரவிட்டால் என்னாகும்?

>>>குஜராத்தில் அடைகளை கழைந்து
அவன் இஸ்லாமியனா பாரு என்ற
கேவலமான மனநிலை மதவெறிதானே<<<

இல்லை அது மார்க்கவெறி அல்ல, மார்க்கத்தைத் தவறவிட்ட வெறி. நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.

மார்க்கம் அறத்தைத் தவிர வேறு எதையுமே போதிக்கவில்லை. குர்-ஆனைக் கையில் எடுங்கள் பக்கம் பக்கமாய் வாசியுங்கள்.

ஒரு சிறு மூடநம்பிக்கை இருந்தால்கூட சொல்லுங்கள். அது சொல்வதெல்லாம் அறம் அறம் அறம் ஒன்றே.

எதையும் அடியாழம் வரை சென்று விமரிசிக்கும் ஜெயமோகன் குர் ஆன் பற்றி இப்படிச் சொல்கிறார்:

>>>குர் ஆன் என்ன சொல்கிறது என்ற வினாவுக்கு என் எளிய வாசிப்பறிவை கொண்டு ‘அறத்தின் மாற்றமின்மையை, முழு முதலான நிரந்தர மதிப்பீடுகளை’ என்று சொல்வேன். அவை ஒரு தளத்திலும் சிந்தித்து பெறப் பட்டவை அல்ல. விவாதித்து நிறுவப் பட்டவையும் அல்ல. விண்ணிலும், மண்ணிலும் நிரம்பியுள்ள பிரபஞ்ச ரகஸியம் ஒரு மனித மனத்தை வந்தடையும் கணங்கள் மூலம் பெறப் பட்டவை. குர் ஆன் ஒரு வாள் போல. பெரும் கருணையால் நிரப்பப் பட்ட நீதிமானின் கையில் உள்ள வாள். ‘மனிதர்களே நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களைச் சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில் உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர் தாம்….’ [அல் ஹுஜுராத் 13] என அது மீண்டும் மீண்டும் மானுட சமத்துவத்தின் குரலையே முழங்குகிறது.<<<

அறத்தை ஒரு கூர்வாள் போல கூர்மையாகப் போதிக்கிறது இஸ்லாம். வேறு என்னதான் இந்த மானுடத்துக்குச் செய்யவேண்டும் சொல்லுங்களேன்?

>>>மதம் மனிதனை பக்குவப்படுத்துவதற்கு
பதிலாய் பாழ்ப்படுத்தியதை
உணர்ந்த போது
எனக்கு மதத்தோடு சேர்ந்து
கடவுளும் அருவருத்து போனது<<<<

அசைக்கமுடியாத அறத்தையும் தந்து இறைவன் மீது கொண்ட பயத்தையே அதற்கான பாதுகாப்பாகவும் தந்த மார்க்கமா பாழ்படுத்தியது?

நன்றாக சிந்தியுங்கள்!

கெட்டவர்கள் எல்லோரும் ஒன்று சேர்கிறார்கள். நல்லவர்கள் விலகியே இருக்கிறார்கள்.

அறமற்றவனை யார் தண்டிப்பது? இறைவனா?

இறைவன் தான் என்ன செய்யவேண்டுமென்று வகுத்துக்கொடுத்துவிட்டானே? பிறகு யார் செய்யவேண்டும்? மனிதன் தானே?

மார்க்கம் என்றால் அறம் - அதையா நீங்கள் வெறுக்கிறீர்கள்
இறைவன் என்றால் பயம் - அந்த பயமற்றுப் போனபின் இறைவன் யார்?

இறைவா இறைவா என்று சொல்லிப் பாருங்கள், இறைவன் மெல்ல மெல்ல உள்ளத்தில் நிறையத் தொடங்குவான்.

நிறைந்தால், கவலைகளை அவனிடம் கொடுத்துவிட்டு நீங்கள் நிம்மதியாய் உறங்கலாம்.

அந்த நம்பிக்கையா அருவருக்கத் தக்கது?

அந்த நம்பிக்கையை எளிதில் ஊட்டிவிடமுடியாது. தானே வந்திருக்க வேண்டும். சிறுவயதிலேயே உருவாகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிம்மதி என்பது பெரிய கேள்விக்குறிதான்.

இறைவனிடன் மன்றாடிக் கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கை என்ன தரும்? எண்ணங்களை குவிக்கும் ஆற்றலைத் தரும். தருமா தராதா?

இறைவன் என்ன பாவம் செய்தான் மார்க்கம் என்ன பாவம் செய்தது. செய்வதெல்லாம் மனிதன் பழிமட்டும் வாய்திறக்காதவற்றின் மீதா?

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை

இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்

ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்

அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்

தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்

அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்
தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன்
தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்

இனி கடவுள் மறுப்பாளருக்கு ஒரு செய்தி.

கடவுளை நீங்கள் வெறுக்கிறீர்கள். சரி வெறுத்துவிட்டுப் போங்கள். ஆனால் அறத்தை நீங்கள் வெறுக்கிறீர்களா?

இந்த உலகில் அறம் சிறந்து விளங்கினால் அனைத்துத் தொல்லைகளும் தீரும் என்பதை ஏற்கிறீர்களா இல்லையா?

உங்கள் கடவுள் மறுப்புக்கு அடிப்படையே கடவுள் இருந்தும் ஏன் இந்த அவலங்கள் என்பதுதானே?

கடவுளை நிங்கள் ஏற்கவே வேண்டாம், ஆனால் அறத்தை வேண்டாம் என்று சொல்லமுடியவே முடியாது.

என்றால் இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்திடமும் அறத்தை எப்படி வளர்ப்பீர்கள்?

அப்படியான அறம் என்பது தீர்க்க தரிசனக் கண்களோடு பார்க்கப் பட்டதாய் இருக்கவேண்டும்.  அந்த அறம் என்பது எக்காலும் சரியானதாய் இருக்க வேண்டும். இன்று ஒரு சட்டம் நாளை ஒரு சட்டம் என்று மாறிவிடக் கூடாது.

என்றால் தெளிந்த நல்லறிவுள்ளவர் வகுத்துத் தந்த அறமே நமக்குச் சிறந்து.

இங்கே என் நிலைப்பாட்டைச் சொல்லவேண்டும். முகம்மது நபி என்று ஒரு மகான் பிறக்கிறார். அவரின் இஸ்லாத்தை பெர்னாட்சா போன்ற வெளிநாட்டு அறிஞர்கள் மட்டுமல்ல அறிஞர் அண்ணா போன்ற உள்நாட்டு அறிஞர்களும் போற்றுகிறார்கள். ஏன்? ஏனெனில் அவர் வகுத்துத் தந்தது அத்தனைக் காத்திரமானதாய் இருக்கிறது.

நான் அவருக்கு ரசிகன் ஆகிறேன். அட இவர் சொல்வதைக் கேட்டால், இந்த உலகம் அப்படியே உருப்படுமே.

என்றால் தீயன செய்யும் புழுக்களை என்ன செய்வது? அதற்கும் அவரே தீர்வு தருகிறார். கடுமையான தண்டனை.

கடுமையான தண்டனையை மட்டுமா தருகிறார். இனி யாரும் அப்படி தீயவர்களாய் ஆகிவிடக் கூடாது என்று ஒவ்வொன்றாய் அறிமுகம் செய்கிறார்.

1. தொழுகை

தொழுகை என்பது மனதை ஒரு நிலைப்படுத்துவது. அதில் இருப்பதெல்லாம் அப்படியே யோகாவை ஒத்ததாய் இருக்கும். நாள் ஒன்றில் ஐந்து வேளை அதைச் செய்யும்போது. மனது அறத்தோடு மட்டுமே வாழப் பழக்கப்படுத்தப்படுகிறது

அதுமட்டுமா உடல் ஆரோக்கியத்துக்கு இது மிக அவசியமானதாக இருக்கிறது. நிறைய பேசலாம் இதுபற்றி தனியே.

(இதுபற்றி தெளிவாக முன்பு எழுதி இருக்கிறேன். அதை விரைவில் இடுகிறேன்)

2. நோன்பு

பசியை உணரச் செய்வது. அறச் சிந்தனையை தூண்டச் செய்வது. குர் ஆனை - அதாவது அற நூலை வாசிக்கச் செய்வது. உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது. மேலும் அறத்தைவிட்டு மனிதன் நழுவிப் போகாமல் அவனைக் காக்க இதுவும் பயன்படுகிறது.

வேண்டாம் என்று சொல்வீர்களா?

3. ஈகை

உங்களுக்கு பசியில் வாடுவோருக்கு உணவளிக்க விருப்பம் இல்லையா? இஸ்லாம் அப்படி உணவளிக்க கட்டாயப் படுத்துகிறது. இதைச் செய்வதில் உங்களுக்கு ஏதும் குறையுளதோ? வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்களா?

4. கலிமா என்பார்கள். அதாவது அறத்தை வலியுறுத்த அடிப்படையான தேவை என்னவோ அவை இதில் கொள்கையாகச் சொல்லப்பட்டிருக்கும். பிறகொருநாள் விபரமாகக் காணலாம். ஆனால் அறத்தை வலியுறுத்தவே இதுவும்

5. ஹஜ் என்னும் புனித யாத்திரை. மனிதர்களுக்க்கு இறைவன் மீது இயல்பாகவே பயம் இருக்கிறது. ஆனால் பல இறைவன்களின் மீது பயம் வந்தால் என்னாகும்? ஒவ்வொரு இறைவனும் என்ன சொல்கிறான் என்று தெரியவேண்டும். ஒட்டுமொத்தமான எல்லோருக்கும் பொதுவான ஒரு அறவழியை வகுத்துக் கொடுத்தால், இது எங்க சாமிக்குப் பிடிக்காது என்று ஒருவன் வந்து சொல்லிவிடுவான். சொல்லுவானா மாட்டானா? பிறகு எப்படி அறம் வாழும்? அடிதடிதான் வளரும்.

ஆகவே பலகடவுள்களை அழித்து ஒரே கடவுள் அவரும் உருவமே இல்லாதவர் என்று நிறுவிய தளமே புனிததளமாகப் பார்க்கப்படுகிறது. அங்கே வரும்தோறும் சென்று வந்தால் மேலும் மனம் உறுதிபடுகிறது.

ஆக, இதுவும் அறம் காத்து உலகை அழிவிலிருந்து காப்பாற்றத்தான். வேண்டாம் என்று சொல்லப் போகிறீர்களா?

6. மேலே இஸ்லாத்தின் ஐந்து கடமைகளையும் கூறிவிட்டேன். இனி சில பழக்கங்களைப் பற்றியும் சொல்லப்போகிறேன்.

மனித மனம் ஒரு குரங்கு. அது தாவத் தொடங்கிவிடும். ஆகவே பிறந்த குழந்தைகளின் காதுகளிலேயே அறத்தை ஓதிவிடுகிறது இஸ்லாம்

7. நீங்கள் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை விரும்புகிறீர்களா? இனம், மொழி, சாதி, ஏழை பணக்காரன் என்ற எந்த ஏற்றத்தாழ்வுகளையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதைத்தானே கடவுள் மறுப்பாளர்களே நீங்கள் விரும்புகிறீர்கள். அதை எல்லோரையும் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறது இஸ்லாம்

8. கல்வியின் அவசியத்தை தொடர்ந்து போதித்த வண்ணம் இருக்கிறது இஸ்லாம். அதை வேண்டாம் என்று சொல்வீர்களா?

9. மூடப்பழக்கங்கள் அத்தனையையும் குழிதோண்டிப் புதைக்கிறது இஸ்லாம். அதைத்தானே நேசிக்கிறீர்கள் நீங்கள்.

10. திருமண வீட்டிற்குச் செல்லாவிட்டால் பரவாயில்லை, செத்தவன் வீடு செல்லாமல் இருந்துவிடாதே என்கிறது இஸ்லாம். அது மட்டுமல்ல, துக்கத்தில் இருப்பவனை முதலில் கவனி என்கிறது. நோய்வாய் பட்டிருப்பவரையும் முதியவர்களையும் அவசியம் சென்று பார் ஆறுதல் சொல் என்கிறது இஸ்லாம்.

இன்னும் ஏராளம் இருக்கிறது. நான் இங்கே சொல்ல வருவது என்னவென்றால். கடவுளை நீங்கள் வெறுக்கிறீர்கள். வெறுத்துக்கொள்ளுங்கள். குர்-ஆனில் சொல்லப்பட்டிருக்கும் அல்லது இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கும் அறங்களை மறுக்கிறீர்களா?

நான் முகம்மது நபி அவர்களின் தீவிர ரசிகன். எனக்கு அவர் பாதை தெளிவாகத் தெரிகிறது. அவர் பயணம் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே நான் அவரின் தீவிர ரசிகன் ஆனேன்.

அப்படியான ஒரு ரசிகர்தான் பெர்னாட்சா. அப்படியான ஒரு ரசிகர்தான் அறிஞர் அண்ணா.

இவர்களெல்லாம் கடவுள் மறுப்பாளர்கள்தாம்.

அறம் என்பதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். தாய் சொல்லலாம், தகப்பன் சொல்லலாம், மாமா சொல்லலாம், மனைவி சொல்லலாம்.

தாய் சொல்வதை தகப்பன் மாற்றிச் சொல்லலாம். தகப்பன் சொல்வதைத் தாய் மறுத்துச் சொல்லலாம்.

மாமாவந்து முற்றிலும் வேறு ஒரு புதியதைச் சொல்லலாம்.

இவர்கள் சொல்வதிலெல்லாம் ஏதும் பிழையில்லை. ஏனெனில் அவர்கள் நம் நன்மை கருதியே சொல்கிறார்கள்.

ஆனாலும் இவர்கள் சொல்வதெல்லாம் குழப்பம் தராமல் ஒரே மாதிரியாய் இருந்தால் அதையே நானும் என் பிள்ளைகளுக்குத் தெளிவாய் சொல்வேன் அல்லவா?

ஒரு வீட்டுக்குள்ளேயே இப்படி நாலு கருத்துக்கள். ஒரு தெருவில் எத்தனை கருத்துக்கள் இருக்கும். ஓர் ஊரில் எத்தனை கருத்துக்கள் இருக்கும். இந்த  உலகில் எத்தனை லட்சம் கருத்துக்கள் இருக்கும். அவற்றுக்குள் வேற்றுமை இருக்கும்? இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்லித் தந்தால், நாம் யார் சொல்வதைப் பின்பற்றுவது.

அம்மா இப்படிச் சொன்னார் ஆனால் அப்பா அப்படிச் சொன்னார். நான் இப்படியும் அப்படியும் இருக்கப் போகிறேன் என்று ஒருவன் தீர்மானிக்கலாம். அல்லது அப்பா அம்மாவே மாற்றிச் சொல்கிறார்கள். அந்த இரண்டையுமே நான் ஏற்க வேண்டும் என்றும் நினைக்கலாம்.

ஆகவே அறம் சொல்வோர் ஏதேனும் ஒரு மூலத்தை அடிப்படையாகக் கொண்டு சொல்லவேண்டும் அல்லவா?

அப்படியான அறம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? அப்படியான அறங்கங்களை வகுத்துத் தந்தவைதான் மார்க்கங்கள்.

தாயும் தந்தையும் அதையே பின் தொடர்வார்கள். அவர்களும் தெளிவாக பிள்ளைகளுக்கு எதைப் பிந்தொடரவேண்டும் என்றும் சொல்வார்கள்.

ஆகவேதான் புதிது புதிதாக சாமியார்கள் முளைத்து புதிது புதிதாக எதையேனும் சொல்லி, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி விடக்கூடாதென்று இறைவனுக்கு இணையில்லை. எல்லாமே அவனுக்குக் கீழேதான் என்று ஒரு கருத்து இஸ்லாத்தில் முன்வைக்கப்படுகிறது.

தாயையும் தந்தையையும் இஸ்லாம் பெரிதும் மதித்துப் பாராட்டச் சொல்கிறது. அவர்களுக்குச் சேவை செய்யச் சொல்கிறது.  ஆனால் அந்தத் தாய்க்கும் தந்தைக்குமே பாடம் சொல்லியும் தருகிறது.

இதில் ஏதும் பிழையுள்ளதா?

ஏனெனில் நிகழ்த்த வேண்டியது உலக மொத்தத்துக்கும் பொதுவான ஓர் அறம். அதற்குத் தடையாக இருப்பவற்றை சரிசெய்தால் மட்டுமே அது நிறைவேற முடியும்.

நிறைவேறிநாள் மானுடம் செழிக்கும். மக்கள் இன்புற்று வாழ்வர்.

வேறென்ன பெரிய சுண்டைக்காய் நோக்கம், சொல்லுங்கள்?

>>>யார் என்ன சொன்னாலும் அப்படியே ஏற்க வேண்டும் என்பதில்லை நமக்கென்று சுய அறிவு இருக்கிறது ஆயிரம் பேர் ஆலோசனைக்கு பிறகும் உறுதியான முடிவை இறுதி செய்வது நாம்தான்<<<

அறிவே இல்லாதவர்களுக்கு என்ன வழி வைத்திருக்கிறீர்கள்.

நீங்கள் உங்களைப் பற்றிமட்டுமே நினைக்கிறீர்கள். முகம்மதுநபி அவர்கள் அவரைப் பற்றி மட்டுமே நினைத்திருந்தால், அத்தனை அரும்பாடு அவர் பட்டிருக்கமாட்டார்.

உங்களை விடுங்கள். என்னையும் விடுங்கள். நம்போன்றவர்களையும் விடுங்கள்.

ஊரில் சில கட்சிகள் ஆட்சிக்கு வருவதும், காமராஜர் போன்றோர் தோற்றுத் தொலைவதும், ஊழல் நிரம்பி வழிவதற்கும் என்ன காரணம்?

மக்களின் அறியாமை. மக்கள் மிகுந்த அறியாமையில் இருக்கிறார்கள். உங்களுக்குக் கிடைத்திருக்கும் அறிவை இறைவன் எல்லோருக்கும் கொடுக்கவில்லை. இறைவன் என்று சொல்லும் இடத்தில் நீங்கள் இயற்கை என்று இட்டுக்கொள்ளுங்கள் ;-)

அதாவது உங்களுக்குக் கொடுத்திருக்கும் அறிவை இயற்கை எல்லோருக்கும் கொடுக்கவில்லையே என்கிறேன்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் எப்படி அகிம்சை வழியில் வன்முறையற்று மாறும்.

ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறீர்களா? அல்லது உங்களுக்கு நீங்கள் மட்டுமே முக்கியம் என்று விலகிக்கொள்ளப் போகிறீர்களா?

உங்கள் உள்ளத்தில் இருக்கும் மனித நேயம் உங்களை அப்படி விலகிப் போக ஒருநாளும் சம்மதிக்காது என்று என் அறிவு சொல்கிறது.

உங்களுக்குக் கடவுள் வேண்டாம். சரி வேண்டாம்!
உங்களுக்கு மார்க்கம் வேண்டாம். சரி வேண்டாம்!

உங்களுக்கு அறம் வேண்டாம். இல்லை இல்லை அறம் வேண்டும். இந்த உலகம் முழுவதும் அறம் நிறைந்திருக்க வேண்டும். உண்மைதானே? இதில் மாற்றுக்கருத்து இல்லைதானே?

இனி நீங்களே ஒரு திட்டம் வகுத்துத் தாருங்கள். உலகம் முழுவதையும் எப்படி அமைதிப் படுத்துவது? எப்படி நல்வழி நடக்கச் செய்வது? எப்படி இணக்கமாக வாழ வைப்பது. எப்படி காதலும் கலைகளும் என்று இன்புற்று வாழ வைப்பது.

இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் நீங்களே தகப்பன் என்று நினைத்து ஒரு திட்டத்தைக் கூறுங்கள்.

இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும்
தகப்பனாக தாயாக
நபிபெருமானார் வந்தார்
என்றுதான் நான் நம்புகின்றேன்

>>>நீங்கள் இஸ்லாம் சார்ந்த உங்கள்
தெளிவை மட்டுமே முன் வைக்கிறீர்கள்
நான் மொத்தமா மதம் சார்ந்த அத்தனை
மதங்களின் அவலத்தையும்
சொல்கிறேன்<<<<

மார்க்கங்களில் வந்து சேரும் கழிவுகளை அழிக்க வேண்டிய கட்டாயத்தில் துரதிர்ஷ்டவசமாக நாம் தான் இருக்கிறோம்.

தங்கத்தில் படியும் தூசுகள்
தங்கத்தையே புதைத்துவிடும்.
ஆனால் மீண்டும் தோண்டி எடுத்தால்
தங்கம் புதியதாய் ஒளிவிடும்

எனக்கு பெரியாரை ஒரு விடயத்தில் மிகவும் பிடிக்கும். அவர் மூடநம்பிக்கைகள் அனைத்தையும் குழியில் கொட்டி மூடினார்.

இஸ்லாத்தில் மூடநம்பிக்கையே இல்லை. அப்படி எது சேர்ந்தாலும் அதற்கு எதிராக நான் குரல் எழுப்பிக்கொண்டேதான் இருக்கிறேன். அதனால் நான் ஒரு இஸ்லாமியனே இல்லை என்று சொல்வோரும் உண்டு ;-) நான் கவலையா படப் போகிறேன்?

என்ன சொல்ல வருகிறேன் என்றால், நாம் அறம் காக்க வேண்டும், மூட நம்பிக்கைகளை நம் மார்க்கங்களிலிருந்து முற்று முழுதாக அழிக்க வேண்டும்.


>>>நான் தொட்டால் தீட்டாகி விடுமானல்
அதை தொடுவதையே நான் தீட்டாக
நினைக்கிறேன்<<<

நிச்சயமாக நினைக்கிறேன். தீண்டாமையை எந்த மார்க்கமும் போதித்திருக்க வழியே இல்லை. எங்கோ தவறு இருக்கிறது. அதை அங்கே இருப்பவர்கள்தான் சரி செய்ய வேண்டும். மீண்டும் தங்கத்தையே தோண்டி எடுத்து புதுப்பிக்க வேண்டும்.

>>>நீ என்ன என்னை ஒதுக்குவது
நானே உன்னை தூக்கி போட்டு
சுத்தமாகிறேன்
என்றூ நினைப்பது
என்ன தவறு?<<<

தவறே இல்லை. சொல்லப்போனால் அப்படிச் செய்யாவிட்டால்தான் தவறு. ஆனால் நாம் எதை தூக்கிப் போடுகிறோம் என்பதில் தெளிவு வேண்டும். அறத்தை ஏற்றுக்கொள்கிறோம் தீண்டாமை, பாகுபாடு, ஏற்றத் தாழ்வு எல்லாவற்றையும் தூக்கிப் போடுகிறோம்.

இஸ்லாத்தில் இந்த எதுவுமே இல்லை என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? இல்லாவிட்டால் அது பற்றி ஒரு கவிஞனாக நான் ஒரு வரியும் உயர்த்திப் பேசவே மாட்டேன்

>>>குழந்தை பருவம் முதலே
இந்த சமுக அவலத்தை பாத்து
வெறுத்து நான் இப்படி இருக்க கூடாது
என்ற தெளிவுதான்<<<<

அதுதான் உங்கள் உள்மனதில் அழுத்தமாக இருக்கும் அறம். அதைத்தான் நானும் செய்தேன், இன்றும் செய்கிறேன்

-அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.in/2016/08/blog-post.html

No comments: