Monday, December 7, 2009

பிறகென்ன நண்பனே என்கிறாய் நீ



எதிர் எதிராய் அமர்கிறோம்
வெளிர் ரோஜா ஆடைக்குள்ளிருந்து
வழிந்தவண்ணமாய் இருக்கிறது
உன் பேரழகு

அள்ளிக்கொள்ளும் ஆவலோடு
என் விரல்கள் தயார்நிலை
ராக்கெட்டுகள் ஆகின்றன

அள்ளி அள்ளிப் பருகி
தாகம் ஏற்றிக்கொள்ளும்
நிலையிலேயே கரைகின்றன
விழிகள்

எதுவுமே அறியாததுபோல
இருந்துவிட முடிவெடுத்து
வானவில்லாய் ஆக்கிக்கொள்கிறாய்
உன் ஆகாயத்தை

உணவு வருகிறது
உண்டுகொண்டுதான் இருக்கிறோம்
அத்துமீறும் பருவக்கசிவுகளை

ருசி உணரப்படவே இல்லை ஆனால்
நன்றாக இருக்கிறதல்லவா
என்று பாராட்டிக்கொள்கிறோம்
பரிமாறப்பட்ட உணவை

புறப்படும்போது
பிறகென்ன நண்பனே என்கிறாய் நீ
மீண்டும் சந்திப்போம் தோழி
என்று கை குலுக்குகிறோம்

குலுங்கிக் கொட்டி
நட்சத்திரங்களாய்க் கண்சிமிட்டுகின்றது
சொல்லப்படாத காதல்

நன்றி:  http://anbudanbuhari.blogspot.com/
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



No comments: