Thursday, December 17, 2009

. தற்போதைய இளம் சந்ததி இலக்கியத்தில் கொண்டுள்ள நாட்டம் திருப்திகரமாக உள்ளதா?

தற்போதைய இளம் சந்ததி மட்டும் அல்ல, முதியவர்களும் திருப்திதருபவர்களாய் இல்லை. அள்ளி அள்ளிக் கொட்டினாலும் தமிழ்த்தாய்க்குத் திருப்தி வரப்போவதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், தரமான இலக்கியம் படைக்க வேண்டியவர்களெல்லாம் வியாபார இலக்கியம் படைப்பதில் மும்முரமாகிப் போனார்களே அதுதான் இக்காலத்தின் மிகப் பெரிய நஷ்டம்.

உயர்ந்த இலக்கியங்களைப் படைக்க வேண்டிய கரங்கள் சில்லறைகளை எண்ணிக் கொண்டுதான் சிவந்துபோகின்றனவே தவிர உலகத்தரத்தில் எழுதி எழுதி அல்ல.

இந்நிலையில் இளைய தலைமுறையினரைப் பற்றிய கவலை மேலும் அதிகரிப்பது சரியானதுதான். வார்த்தைக்கொரு வார்த்தை என்று ஆங்கிலம் கலந்ததைத் தாண்டி இன்று பத்து ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு தமிழ்ச்சொல் என்று பேசும் இழிநிலை வந்துவிட்டது.

இதற்கான பொறுப்பை நம் தமிழ்ப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், பண்ணலை வானொலிகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பெற்றோர்கள் என்று எல்லோரும் சமமாகப் பிரித்துக்கொண்டார்கள். இதில் ஒருவருக்கு ஒருவர் போட்டிவேறு.

பெற்றோர்கள் மனதுவைத்தால்தான் இந்தக் கேவலமான நிலை மாறும். தமிழ் வாழும். தமிழனின் அடையாளம் காக்கப்படும். தமிழ்க் கலாசாரத்தின் பொருள் புரியும்.

ஆயினும் நானொன்று சொல்வேன். எந்தச் சூழலிலும் தமிழ்மட்டும் செத்துப் போய்விடாது. அதுதான் தமிழின் தனிச்சிறப்பு. ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக அடக்கப்ப்ட்டுக் கிடந்தாலும், வீரியமாய் வெளிவந்ததல்லவா நம் அமுதத் தமிழ்.
Label: நேர்காணல் - கவிஞர் புகாரி
http://anbudanbuhari.blogspot.com

No comments: