Friday, December 11, 2009

ஹஜ் என்ற புனிதப் பயணம் ஏன்?


Bismillah hir-Rahman nir-Raheem





இஸ்லாமில் உடல தூய்மை மனத் தூய்மை இரண்டும் மிக முக்கியமானது.

ஒவ்வொரு நாளும் ஐந்து முறை தொழுவதால் உடல் உறுதியும் அதனால் தூய்மையும் மன உறுதியும் அதனால் தூய்மையும் ஆகிறது.

அதிகாலை கண்விழிக்கும் முன்பே தொழுகை தொடங்கிவிடுகிறது. சூரியன் எழுகின்ற சமயத்துத் தொழுகை இது. அந்தத் தொழுகைக்குச் செல்லும்மும் குளித்துவிட வேண்டும். அதிகாலை எழுவதாலும் அப்போதே குளித்து முடித்துவிடுவதாலும் சூரிய உதய நேர ஓசோனை முழுவதும் உள்ளிழுத்துக்கொள்ள முடிகிறது. அதிகாலை எழும் நல்ல பழக்கம் வருகிறது. உடலுக்கும் மனதுக்கும் ஒரு கட்டுப்பாடு வருகிறது.

இஸ்லாமிய தொழுகை என்பது யோகாவில் பல நிலைகளைப் போன்றது. நெற்றி தரையில் படியும் படியும் கால்கள் பின்னால் மடித்துவைக்கப்பட்ட நிலையிலும் பலமுறை எழுந்து குனிந்து அமர்ந்து விழுந்து என்று இருப்பதால் உடலின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. உடல் வளையும் தன்மை கொண்டதாய் ஆகிறது. இதனால் ஆயுளும் கூடுகிறது.

மனம் தொழுகையின்போது தியானத்தில் இருக்கும். இறைவனைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் இருப்பதற்காக பழக்கப்படும். அப்படி ஒன்றையே மனதில் நிலை நிறுத்தும் தியானத்தால், கவலைகள் அழிகின்றன. மன உறுதி பெறுகுகிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மனம் முழுமையான நம்பிக்கையைப் பெறுவதால், வாழ்வின் சுமைகள் பெரிதாகத் தெரிவதில்லை. அடுத்தவர்களுக்கு உதவவேண்டும் என்ற அன்பு கருணை ஈவு இரக்கம் என்ற உயர்ந்த மனம் வளர்கிறது.

அதிகாலை நாம் கேட்கும் பாடலோ படிக்கும் பாடமோ நம் மனதைவிட்டு எளிதில் நீங்குவதில்லை. ஆகவே அதிகாலையிலேயே தொழுதுவிட்டால், தீய எண்ணங்கள் மனதில் தோன்றாது. இந்த நிலை மெல்ல மெல்ல பலவீனம் அடைவதற்குள் அடுத்த தொழுகை வந்துவிடும்.

அது உச்சி வேளையில் இருக்கும். அதுவும் அதைத் தொடர்ந்த மற்ற தொழுகைகளும் தரும் தாக்கம் குறுகிய காலமே நீடிக்கும் என்பதாலும், மனச் சிதறல்கள் அதிகம் உள்ள பொழுதுகள் இவை என்பதாலும் அடுத்தடுத்த தொழுகைகள் விரைவில் வந்துவிடும்.

குத்துமதிப்பாக அதிகாலை நாலரை மணிக்கு முதல் தொழுகையும், மதியம் பதினொன்னரை மணிக்கு இரண்டாம் தொழுகையும், பின்மதியம் இரண்டரை மணிக்கு மூன்றாம் தொழுகையும், முன் மாலை ஐந்து மணிக்கு நான்காம் தொழுகையும் பின்மாலை ஆறரை மணிக்கு நாளின் இறுதித் தொழுகையான ஐந்தாம் தொழுகையும் இருக்கும்.

சரியான தொழுகை நேரம் இடத்துக்கு இடம் நாட்டுக்கு நாடு மாறும். அதை முன்கூட்டியே சொல்லிவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல் பாங்கு என்ற அழைப்பின் மூலமாகவும் தொழுகை நேரத்தை அவ்வப்போது அறிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு முறை தொழுகைக்குச் செல்லும்போதும் உடலைத் தூய்மைப் படுத்த வேண்டும். மனதைத் தொழுகைக்காகத் தயார் செய்யவேண்டும். அதன்வழியே மனத்தூய்மைக்கு ஏற்றதாய் மனம் மாற்றிக்கொள்ளப்படும்.

இந்தத் தொழுகையை தனித்தனியே தொழலாம் என்றாலும் பள்ளிவாசல் போய் நாலுபேரோடு தொழுவதையே இஸ்லாம் விரும்புகிறது. இதன்மூலம் உறவு வளர்ப்பையும் சகோதரத்துவத்தையும் மனிதர்கள் பெறவேண்டும் என்று விரும்புகிறது.

மற்ற தினங்களில் அப்படி சேர்ந்து தொழுகிறார்களோ இல்லையோ ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமையும் கட்டாயம் உச்சி நேர இரண்டாம் தொழுகையின்போது பள்ளிவாசலில் அல்லது ஒரு பொது இடத்தில் ஒன்றாய்க் கூடி ஜும்மா என்ற சிறப்புத் தொழுகையோடு தொழவேண்டும்.

இந்தத் தொழுகைக்கு குறைந்தது நாற்பதுபேர்களாகவது சேர்ந்திருக்க வேண்டும் என்ற கட்டாயத்தையும் இஸ்லாம் வைத்திருக்கிறது. அந்த சிறப்புத் தொழுகையின்போது இமாம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை குத்பா என்ற பெயரில் வழங்குவார். நல்வழி செல்ல மனிதர்கள் அறிந்துகொள்ளவேண்டிய அனைத்தும் ஓர் உரையாக நிகழ்த்தப்படும்.

இதன் மூலமாக ஊரில் உள்ள அனைவரும் சந்திக்கவும் ஒன்றுகூடவும் உறவு வளர்க்கவும் சகோதரத்துவம் கொள்ளவும் உடல் காக்கவும் மன உறுதி பெறவும் வழி அமைகிறது.

ஹஜ் என்பதும் இதே போல உலக மக்கள் அனைவரும் ஒன்றாய் ஓரிடத்தில் வந்து தொழுவதே ஆகும். அதைத் தவிர மற்றதெல்லாம் சம்பிரதாயங்களும் சடங்குகளும் மட்டுமே.

ஹஜ் செல்லும்போது சில நிபந்தனைகள் உண்டு. உடல் தூய்மை மனத் தூய்மை காக்கும் செயலின் உச்சமாக இது மதிக்கப்படுகிறது. ஆகவே ஹஜ் செய்ய முடிவு செய்தவர் நல்லதையே நினைத்து நல்லவராகவே வாழவேண்டும். ஹஜ் செல்லும்முன் ஒழுக்கத்தை ஒழுங்காகக் கடைபிடிப்பவராய்த் தன்னைப் பழக்கிக்கொள்ள வேண்டும்.

ஹஜ் சென்று திரும்பியதும் அந்த நினைவிலேயே, தவறுகளுக்கு அஞ்சி நடந்து, உடல், உள்ளம், ஊர், உலகம் அத்தனையும் தூய்மையாய் மலர வாழவேண்டும்.

இதன்மூலம் பரிசுத்தமான அமைதியான நிறைவான குற்றங்கள் அற்ற ஓர் உலக சமுதாயம் உருவாக இஸ்லாம் வழிவகுக்கிறது. அதற்கான கட்டுப்பாடுதான் ஒவ்வொரு நாள் தொழுகையிலும் மெல்ல மெல்ல வளர்க்கப்படுகிறது.

ஆகவேதான் ஐந்து கடமைகளில் முதல் கடமை தொழுகை இறுதிக் கடமை ஹஜ்.

அன்புடன் புகாரி


---------------------------------------------------------------------------------------------------------------




No comments: