பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட பெருநாள் வாழ்த்து செய்தி எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. காரணம், வெறுமனே வாழ்த்து செய்தியாக மட்டும் அது இல்லாமல், பிரிட்டிஷ் முஸ்லிம்கள் கொரானா அவசரக்காலத்தில் நாட்டிற்கு செய்த பணிகளை பட்டியலிட்டு இருந்தார். நாட்டிற்காக அளப்பரிய தியாகங்களை பிரிட்டிஷ் இஸ்லாமிய சமூகம் செய்துள்ளதாகவும், இந்த பணியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது உழைத்ததற்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார் இங்கிலாந்து பிரதமர்.
முஸ்லிம் பெண்களில் ஒரு சாரார் அணியும் நிகாப் உடையினை, 'போஸ்ட் பாக்ஸ்' என ஒருமுறை கிண்டல் செய்த வலதுசாரியான போரிஸ் ஜான்சனிடம் இருந்து இவ்வளவு விலாவாரியான நன்றி அறிக்கையை நான் எதிர்பார்க்கவில்லை என்பதே என்னுடைய வியப்பிற்கு காரணம். ஒட்டுமொத்த வலதுசாரி ஆதரவாளர்களின் வசைமாரியை இந்த ஒரு பதிவில் வாங்கிக்கட்டி கொண்டார் போரிஸ். உண்மையில், பிரித்தானிய இஸ்லாமிய சமூகம், போரிஸ் ஜான்சன் சொன்னது போல, கொரானா காலத்தில் மேற்கொண்ட நலப்பணிகள் இன்றியமையாதவை.
நாடு முழுக்க இருக்கும் சுமார் 194 இஸ்லாமிய அமைப்புகள், 'முஸ்லிம் தொண்டு நிறுவனம் (Muslim Charities Forum)' என்ற ஒற்றை குடையின் கீழ் ஒன்று சேர்ந்தார்கள். பின்னர் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து செயல்பாட்டினை தொடங்கினார்கள். தங்கள் செயல்திட்டத்திற்கு 'அண்டை வீட்டார் நலம் பேணுவோம்' என்று பெயர் வைத்தார்கள். பெயருக்கு ஏற்றார் போல தங்கள் அண்டை வீட்டினர் கொரோனா பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் செய்வர்.
இதுமட்டுமல்லாமல் அரசிற்கு தேவையான தன்னார்வ வேலைகளையும் இவர்கள் செய்வர். பிரித்தானிய முஸ்லிம் சமூகத்தின் இத்தகைய கட்டுக்கோப்பான செயல்பாடுகள் ஏனைய மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டதோடு மட்டுமல்லாமல், பல்வேறு ஊடகங்களும் இந்த பணிகளை கவர் செய்தன. இதன் பிரதிபலிப்பே போரிஸ் ஜான்சனின் அறிக்கை.
அற்புதமான இஸ்லாமிய அறிஞர்களால் சூழப்பட்டுள்ள பிரிட்டிஷ் முஸ்லிம் சமுதாயம் தங்கள் பணிகளுக்காக பாராட்டப்படுவது இது முதல் முறையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வொன்றில், அறக்கொடைகள் வழங்குவதில் பிரிட்டிஷ் முஸ்லிம் சமுதாயம் முதல் இடத்திலும், நாத்திகர்கள் கடைசி இடத்திலும் இருப்பது தெரிய வந்தது. கடைசியாக எடுக்கப்பட்ட பிரிட்டிஷ் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, பிரித்தானிய முஸ்லிம் மக்கட்தொகை இரு மடங்கு அதிகரித்திருக்கிறது.
இங்கிலாந்து சமூகம் நாத்திகத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் நிலையில் அதனை எதிர்க்கொண்டு இஸ்லாம் மட்டுமே தொடர்ந்து வளர்ந்து வருவதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பிரபல 'டெய்லி மெயில்' ஊடகம் ஒருபடி மேலே போய், முஸ்லிம்களின் இறைநம்பிக்கையில் ரிச்சர்ட் டாகின்ஸ் போன்றவர்களால் எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என செய்தி வெளியிட்டது இங்கே குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment