வெற்றி_பெற_வாருங்கள் !
அபு ஹாஷிமா
கால் போன போக்கில்
போய் கொண்டிருந்தேன்.
வழியெல்லாம்
சத்தங்கள்
வழிமறித்து
ஆயிரம் கதைகளை
சொல்லிக் கொண்டே
கூட நடந்தன .
கட்டியவன்
கதை முடிந்துபோன
வேதனையைச் சொல்லி
பேதையொருத்தி
ஒப்பாரி வைத்தாள்.
சோத்துக்கே வழியில்லாமல்
வீடங்கிக் கிடக்கும்
சோதனையை எண்ணி
தோழனொருவன்
துயரம் கொண்டான்.
நோய்களில் விழுந்தவர்களின்
வலிகளும்
பாய்களில் கிடப்பவர்களின்
முனகலும்
காதில் அறைந்தன.
பசியோடும்
நோயோடும்
அழுதவர்களின்
குரல்களை
கொன்றுவிட்டு
மனுதர்ம சாம்ராஜ்ய
மாளிகைக்கு
அஸ்திவாரமிட
தங்கவஸ்திரம் அணிந்து வந்த
பித்தனின்
மாபாதக பொய்களை
சகல பரிவாரங்களும்
வேதமாய் ஓதிக் கொண்டிருந்தன.
ஏழைகளின்
குடல் பொசுங்கும்
வாசனைகளை விரட்ட
நெய்யும் கோமியமும்
தீ வளர்க்கப்பட்ட
குண்டங்களில்
கொட்டிக் கொண்டிருக்க
பறித்து வைக்கப்பட்ட
நிலத்தில் மலராத பூக்கள்
தங்கள் கெடு விதியை
நொந்து வாடிக் கொண்டிருந்தன.
சூரியன் கவிழ்ந்து
இருள் கவ்விய பொழுதில்
ஆரவாரப் பேய்களின்
ஆட்டம் முடிந்து
கூச்சல்கள்
ஓய்ந்து போயிருந்தன .
சாத்தானின் தீங்கை விட்டும்
இறைக் காவல் தேடியவனாக
அடர்ந்த இருட்டுக்குள்
அச்சமின்றி
மெளனமாக
நடந்து கொண்டிருந்தேன்.
தூரத்தே மின்னிய
ஒளிக்கீற்றொன்று
விடியல் வரும் எனும்
நம்பிக்கையைத் தர
நடையிலும் வேகம் வந்தது !
வரும் பாதையெங்கும்
வெளிச்சத்தைத் தூவும்
வெள்ளாடை ஒன்றை
அணிந்தபடி
ஹவ்ளில் கவ்ஸரில்
ஒலு எடுத்து வந்த
பிலாலின்
" வெற்றிபெற வாருங்கள் "
என்ற பாங்கோசை
எட்டு திக்கிலிருந்தும்
இதமாய்
காற்றில் மிதந்து வந்து
பூமியின் இருட்டை
மெல்ல மெல்ல விரட்டியது.
அதிகாலை நேரத்தின்
முதல் தொழுகைக்காக
ஜன்னத்துல் ஃபிர்தெளஸ்
அத்தர் வாசனையோடு
பள்ளிவாசலை நோக்கி
எனக்கு முன்னால் விரைந்து
நடந்து கொண்டிருந்தார்
மாமன்னர் பாபர் !
No comments:
Post a Comment