Wednesday, August 5, 2020

என்ன பங்கு..?என்ன விகிதம்..?


உனக்கென்ன பங்கு
எனக்கென்ன விகிதம்?
உணர்ந்தவன் உலகத்தின் ஞானி!
தனக்கென வாழ்பவன்
தாய்தந்தை வித்தில்
திளைத்தவன்! மிருகத்தின் தீனி!
( உனக்...)

தந்தைக்கும் முப்பாட்டன்
முதல்மனிதர் முதல்மனுஷி
தாகத்தின் தணிப்புகளால்
சரித்திரத்தை ஆரம்பித்தார்!

தந்தைதந்தார் தாய்பெற்றார்
தனியேதான் நான்உதித்தேன்!
வந்தவழித் தடப்பற்றி
வரலாற்றை எழுதிவைத்தேன்!

நான்தொட்டேன் துணைஏற்றாள்
நல்லதொடக்க நடைமுறைதான்!
ஏன்சிலர்க்குத் தடையானது
இத்தொடரும் முற்றானது?
( உனக்...)

அடர்காட்டுக் குள்ளேயும்
அடிப்பூமி வெறிபிடிக்க
மடிவிரித்துக் காத்திருக்க
விதைபுதைந்தது! மரம்எழுந்தது!

பறவையினம் குடியேற
பலநிலங்கள் பாதைவிட
வரவேற்று இசைவானது
வளமங்கே பிறப்பானது!
( உனக்...)

வண்டொன்று மலர்தொட்டது
வண்ணப்பூச் சுகப்பட்டது!
மகரந்தம் இடம்விட்டது
மறுமலரில் தடம்போட்டது!

மிருகங்கள் கழிந்ததுதான்
மீண்டுமொரு வரவானது!
பருவங்கள் நகர்ந்ததுதான்
பசுமைகளின் திறப்பானது!
( உனக்...)

பங்கென்னத் தனிக்கணக்கு
பகிர்வென்ன ஒரு விகிதம்?
அங்கென்ன இங்கென்ன
அளவீடு? மதிப்பீடு?

சமத்துவமே தொடராகும்
சமபங்கே நடப்பாகும்!
தமதென்றால் வீங்கிவிடும்
தாங்காது வீழ்ந்துவிடும்!
( உனக்...)

No comments: