·
அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்காக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அதிபருக்காக போட்டியிடும் ஜோ பிடென் தன் துணை அதிபராக இவரைத் தேர்வு செய்துள்ளது மிகவும் சாமர்த்தியமான முடிவாக பார்க்கப்படுகிறது.
நிறவெறிக்கு எதிராக அமெரிக்க மக்கள் குரல் எழுப்பியுள்ள தருணத்தில் கருப்பின தந்தைக்கும் இந்திய தாய்க்கும் பிறந்த கமலா ஹாரிஸின் தேர்வால் பெருவாரியான இந்திய கருப்பின மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள் ஜனநாயகக் கட்சிக்கு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க முதல் செனட் உறுப்பினராக தேர்வாகி சமூக நீதி, நிற இன பாகுபாடுகள் ஒழிப்பு, மனித உரிமைகள் போன்றவற்றில் உரத்த குரல் எழுப்பி வரும் கமலா ஹாரிஸ் தன் தாய் தந்தை வம்சாவளி தொடர்புகளை மதித்து போற்றி வருவது வரவேற்கத்தக்கதாகும்.
டிரம்ப் அமெரிக்க இந்தியர் இடையே ஆதரவு திரட்ட பிரதமர் மோடியின் ஆதரவுடன் ஹுஸ்டனில் நடத்தப்பட்ட "ஹவுடி மோடி" நிகழ்ச்சியை கமலா புறக்கணித்ததும், காஷ்மீர் சட்டத்தை ரத்து செய்ததை கண்டித்ததும், அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு குரல் எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதே நிலைப்பாடு எடுத்த அமெரிக்க இந்திய வம்சாவழி மக்களவை உறுப்பினர் பிரமிளா ஜெயபால் கலந்துகொண்ட அமெரிக்க வெளிவிவகார நிலைக்குழு உறுப்பினர்கள் சந்திப்பை கடைசி நேரத்தில் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரத்து செய்ததையும் கமலா ஹாரிஸ் கடுமையாக கண்டித்துள்ளார்.
இன்றைய பாஜக அரசின் பல்வேறு செயல்பாடுகளை அங்கீகரிக்காத காரணத்தால் பாஜகவின் முன்னணி தலைவர்களும், பெரும் சவடால் ஊடகங்களும் இவரை வாழ்த்துவதை புறக்கணித்துள்ளது காணமுடிகிறது.
ராம் மாதவ் மற்றும் சில சிறிய தலைவர்கள் ஒப்புக்கு வாழ்த்தி இருப்பது கமலா ஹாரிஸின் நியமனத்தால் இவர்கள் கவலை அடைந்து இருப்பதை உணர்த்துகிறது.
அமெரிக்க அதிபராக ஜோ பிடென் மற்றும் கமலா தேர்வாகும் நிலையில் தம் திறமையான செயல்பாடுகளால் கமலா ஹாரிஸ் அரசின் முக்கிய முடிவுகளில் அதிகமான பங்கெடுப்பார் என்பதை எதிர்பார்க்கலாம்.
அமெரிக்க ஜனநாயக கட்சியின் கொள்கை முடிவுகள் எவ்வாறு இருந்தாலும் வரக்கூடிய செயல்பாடுகளில் அதிகமாக மனித உரிமை பாதுகாப்பு, உலக அமைதி, சமூக நீதி போன்றவற்றில் கமலா ஹாரிஸ் தாக்கம் இருக்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.
நம் ஆட்சியாளரும் ஊடகங்களும் புறக்கணிப்பதால் அவரின் வெற்றி வாய்ப்பு பாதிப்படையாது.
அமெரிக்க தேர்தலில் வெற்றி வாகை சூட கமலா ஹாரிஸ் என்கிற கமலா தேவி அம்மாவை வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment