Friday, August 14, 2020

எக்ஸ்கவேட்டர் (excavator):

 Sabeer Ahmed


கட்டுமானப் பணிகளுக்கான எந்திரங்களின் வகையில் இவர் முக்கியமானவர். ஒரு நாளைக்கு 20-30 பேர் செய்யும் வேலையை இவர் ஒருத்தர் தன்னந்தனியாக வேர்க்காமல் விறுவிறுக்காமல் செய்து முடித்துவிடுவார்.


Excavator என்பது ஒரு காரணப் பெயர். எக்ஸ்கவேஷன் என்னும் ஆங்கிலப் பதத்திற்கு 'அகல்தல்' என்பது பொருள். இதைத் தமிழில் தோண்டுதல் என்றும் மொழி பெயர்க்கலாம். தோண்டும் வேலை செய்வதால் இவரைத் தோண்டுவான் என்னும் அர்த்தத்தில் எக்ஸ்கவேட்டர் என்று அழைப்பர். வயதான மெஷின்களைத்தான் எக்ஸ்க்வேட்டர் என்றும்; புதிய, இளம் எந்திரத்தை எக்ஸ்கவேட்டன் என்று மரியாதைக் குறைவாகவெல்லாம் அழைக்க அனுமதி இல்லை.


இருப்பினும் இந்த இயந்திரத்தை பொக்லைன் என்று சொன்னால்தான் துட்டுக்காக ஓட்டுப்போடும் பழக்கம் உள்ள சனநாயக மனிதர்களுக்கு விளங்கும். "அது ஏனுங்கோ அப்டி?"என்று குழம்புபவர்களுக்காக மட்டுமே அடுத்த பத்தி. ஏனைய சனங்கள் அடுத்த பத்தியை ஸ்கிப் செய்துவிட்டு தொடர்ந்து வாசிக்கலாம்.


முதன்முதலில் மண்கோதும் எந்திரத்தை வடிவமைத்து சாதித்தது பொக்லைன் என்னும் நிறுவனம். அது முதல் மண்கோதும் எந்திரங்களைக் கேட்டர்பில்லர், கொமாட்ஸு, வோல்வோ, ஹிட்டாச்சி, ஹ்யுண்டாய் போன்ற நிறுவனங்கள் உருவாக்கினாலும் பார்க்கிற பயபுள்ளைக "டேய் பொக்லைண்டா" என்றே கூவி வருகின்றனர்.


தேவைக்காக உருவாக்கப் படுபவையே எந்திரங்கள். அந்த வகையில் மண் தோண்டுவதற்காக கையைப் போல ஒரு உபகரணம் செய்து அதற்கு பூம்(boom)என்று பெயர் சூட்டி, மணிக்கட்டுக்குக் கீழ்க்கையை “பக்கெட்(bucket)” என்றாக்கி, அதை முழங்கையோடு இணைக்க “ஸ்டிக்(stick)” என்றொரு தொடுப்பையும் செய்து, இந்தக் கை, தொடுப்பு மற்றும் மேற்கை மூன்றையும் ப்பின்(pin) என்றழக்கைப்படும் உருளைகளைக் கொண்டு இணைத்து கோதும் சாதனம் செய்தாயிற்று.


ஒவ்வொன்றையும் தேவைக்கேற்ப ஆட்டி அசைக்க ஹைட்ராலிக் ஜாக்(hydraulic jack) களைப் பொறுத்தி இயந்திரத்தின் தோள்பட்டையில் இணைத்தாயிற்று. இதை இயக்க கன்ட்ரோல் லீவர்ஸ்(control levers) அல்லது ஜாய் ஸ்டிக்ஸ்(jot sticks), கட்டுப்பாட்டுடன் முடுக்க கன்ட்ரோல் வால்வ்(control valve), பாதுகாப்பிற்கு ஹோல்டிங்(holding) மற்றும் சேஃடி வால்வுகள்(safety valves) அமைத்தாயிற்று. இவை யாவற்றிற்கும் அழுத்தம் கடத்தவும் உராய்வின் உஷ்ணம் உலோகத்தைத் தேய்க்காதிருக்கவும் குறைந்த பிசுபிசுப்புடைய (viscosity) ஹைட்ராலிக் எண்ணெயும் (hydraulic oil) இந்த எண்ணெய்க்கு அழுத்தம் தர ஒரு ஹைட்ராலிக் பம்ப்(hydraulic pump). இந்தப் பம்ப்பைச் சுழற்ற ஒரு எஞ்ஜின்(engine). அவ்ளோவ்தான்.


ஒரே இடத்திலிருந்து 360 டிகிரியும் சுழன்று வேலை பார்த்தால் கீழேயிருந்து மேலே போகும் ஹைட்ராலிக் பைப்கள் பிசுக்குப்பிடித்த பைத்தியக்காரப் பெண்ணின் சடைபோல பிண்ணி விடாதா? அதனால் ச்சாஸிஸ்க்கும்(chassis) இம்ப்ளிமென்ட்ஸுக்கும்(implements) இடையே நடுவுல ஸ்வைவல்(swivel) என்றொரு சாதனம் இருக்கும். இதுவும் ஒன்னும் சீனத்தி வித்தை அல்ல. நம்ம ஊர் மீனவர் ஒருவர் சொல்லக் கேட்டதுண்டு.


“என்னத்துக்கு வலையை பொத்திக்கிட்டு நடு சாமத்ல கடலுக்குப் போய்க்கிட்டு வலை வீசி மீன் பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படனும்? ரெண்டு வையாறு(wire) ஒரு பாம்பு(bomb) கடல்ல வீசி, டமார்ன்டு வெடிச்சி, மீனெல்லாம் செத்து. அப்டியே அரிச்சிக்கிட்டு வந்துடலாம்”


என்னும் நம்மூரு அட்டு ட்டெக்னிக்தான்.


இரண்டு உருளைகள் ஒன்றுக்குள் ஒன்று ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டின்படி பொறுத்தப்பட்டிருக்கும். வேலை செய்யும்போது ச்சாஸிஸை நிலைநிறுத்தி பூம் மட்டும் சுழலும்போதெல்லாம் இந்த உருளைகள் ஒன்றுக்குள் ஒன்று சுழன்று ப்ரெஸ்ஸெரைக் கடத்தும். அதுவும், நான் அனுப்பிய சாமானை எங்கூட்டுக்கும் சபீர் அனுப்பியதை அவர் பேரனுக்கும் அபு இபு அனுப்பியதை இபுறாகீமுக்கும் சரியாக, மிகச்சரியாகக் கடத்திவிடுவது ஸ்வைவல்தான்.


ஒரே இடத்தில நின்று வேலை செய்தால் பூமியில பொத்தல் விழுந்துடாது? அதனால நகருனும்ல?. நகருவதற்காக இரண்டு பல்லு சக்கரங்களும்(sprocket) இரண்டு ஐட்லர்களும்(idler) ஆக நாலு பக்கமும் ரெண்டு ரெண்டா பொருத்தியிருப்பார்கள். இவற்றை முறையாகவும் கொத்தாகவும் சுழற்ற ட்ராக்(track) பொறுத்தி மேலும் ஸ்திரமான நகர்தலுக்காக 80 செமி அல்லது 60 செமீட்டர்ல ஷூஸ்(shoes) போட்டு உட்டுடுவாங்க. மேலும், இரெண்டு பக்கமும் உருளைகளும்(track & carrier rollers) அவற்றைக் காவந்து பண்ண கார்ட்களும்(roller guards) பொருத்தியிருக்கும்


இந்த எந்திரத்தில் 6 ஸிலின்டர் எஞ்ஜின் பொறுத்தியிருப்பதால் ஓங்கி அடிச்சா ஒன்றர ட்டன் எடைக்கே அந்தரத்ல பறப்பதைப் பார்த்த நமக்கு 10லேர்ந்து 32 ட்டன் வெயிட்ல அடிச்சா எப்படி இருக்கும்! செவுளு மட்டுமா பேர்ந்து போகும்?


எஞ்ஜின் மாடல்கள் 3116 மற்றும் 3306 பரவலாகப் பொறுத்தப்பட்டிருக்கும்


(வேணாம்….)


ஏழு மீட்டர்லேர்ந்து 22 மீட்டர் வரையும் கையை உட்டுத் துலாவி மண்ணை வாரி இறைக்கும். தர்ஹாக்களுக்கு முன்னால் பயன்படுத்தக் கூடாது என்று ஃபத்வா இருக்கிறது.


(வேணாம்… வேணாம்…)


3,500லேர்ந்து 4,000 பி எஸ் ஐ ஹைட்ராலிக் ப்ரெஸ்ஸர்ல சந்தோஷமா வேலை செய்யும்.


(வேணாம். அழுதுடுவேன்)


சரி இதற்குமேல் ட்டெக்னிக்கலாப் போனா அழுதுடுவீங்க என்பதால்…வேணாம். ஜாலியா சில விஷயங்களை டிஸ்கஸ் பண்ணிடுவோம்.


இதை இயக்கும் ஆபரேட்டர்களுக்கு மாசம் 50,000 ரூவாக்கு மேலே சம்பளம் கிடைக்கிறது; பழுது பார்த்து சேனாத்தி பண்ற மெக்கானிக்குகள் நாலைந்து நட்டு போல்ட்களை முடுக்கிவிட்டுட்டு 60,000 வரை வாங்குறாங்க. இப்படி ஒர் 10, 20 பேர்களை வைத்து அதிகபட்ச வேலை வாங்கும் கங்காணிகளுக்கு 1 லட்சமும் இவுகளில் 4, 5 பேர்களை வழிநடத்துபவருக்கு 2 லட்சம் வரை சம்பளமும் கொடுத்து துணை நிர்வாகி என்று பதவியும் கொடுப்பார்கள். இதே ரூட்ல நூல் புடிச்ச மாதிரி வந்தால் பணிமனை நிர்வாகி என்னும் இடத்துக்கு வந்த இயந்திரங்களைவிட இரும்பாகிப் போன மனுஷங்களோடு மல்லுக்கட்டலாம். ஆனால், நம்ம மக்களில் பெரும்பாலோர் ஐ ட்டி, கம்ப்யூட்டர் சையன்ஸ், எம் பி ஏ என்று கூட்டம் கூட்டமாப் படிக்கிறாங்களே தவிர நம்ம வழியிலே வர ஒரு மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கோ (ட்ரஸ்ல க்ரீஸ் பட்டுடுமாம்), எலெக்ட்ரானிக்ஸோ(பிள்ளைக்கு ஷாக் அடிச்சிட்டா), இன்ஸ்ட்ருமென்டேஷனோ(அப்டீன்னா? பேங்க் படிப்பா?) படிச்சிட்டு வர ஆர்வம் காட்டுவதில்லை.


தவிர,


“நம்ம பயலுக்கு ஒரு விசா ஏற்பாடு பண்ணுங்களேன்”,


“என்ன காக்கா படிச்சிருக்கான்?”,


“படிப்பு ஏறல தம்பி, ஆனா, எந்த வேலை கொடுத்தாலும் செய்வான்”


என்கிற பாரம்பரியம் மிக்க உரையாடல்களின் விளைவாக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் ஹெல்ப்பர்கள் என்னும் பணியில் நாய் படாத பாடு படுவது கட்டுமானம் மற்றும் இந்தத் துறையிலும்தான் அதிகம்.


கடுமையாக உழைக்க மன உறுதியும் நேர்மையான வழியில் சீக்கிரம் பணக்காரனாக ஆசையும் இருக்கிறதா? மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கோ, எலெக்ட்ரானிக்ஸோ, இன்ஸ்ட்ருமென்டேஷனோ படிச்சிட்டு இந்த லைன்ல வாங்க. உழைப்புக்கு அங்கீகாரமும் வெகுமதியும் கண்டிப்பாகக் கிடைக்கும்.


பி.கு.: நானோ ட்டெக்னாலஜி அசுர வளர்ச்சி கண்டு வரும் இக்காலத்தில் ஒரு மைக்ரோ எக்ஸவேட்டர் செய்து, எப்போதும் மூக்கை நோண்டிக் கொண்டிருக்கும் அந்த க்ளர்க்கிடம் கொடுத்து, அருகிலேயே “டேஞ்சர், டீப் எக்ஸ்கவேஷன்” என்று மைக்ரோ போர்டும் வைக்கும் நாள் ‘ஒளி வருட’ தூரத்தில் இல்லை.


-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


http://adirainirubar.blogspot.com/2014/03/1.html?m=1

No comments: