.
சோம்பேறித்தனம் என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எச்சரித்த மிக மோசமான பண்பாகும். இப்பண்பின் காரணமாகவே ஓர் அடியான் வணக்கவழிபாடுகளை விட்டும் தூரமாகி விடுகின்றான். அவனுடைய நேரங்களும் வீணடிக்கப்படுகின்றன. மற்றும், இன்மை மறுமை வாழ்க்கை நஷ்டத்திற்குரியதாக ஆகிவிடுகின்றது.
இச்சோம்பேறித்தனமானது நயவஞ்சகர்களின் பண்புகளில் ஒன்றாகும். இதனைப் பின்வருமாறு அல்லாஹுத்தஆலா பிரஸ்தாபிக்கின்றான்:
“அவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால், சோம்பேறிகளாக எழுந்து நிற்பார்கள்”. (அந்நிஸா: 142)
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “நயவஞ்சகத்தன்மையானது எவ்வித சந்தேகத்திற்கிடமின்றி வணக்கவழிபாட்டில் சோம்பேறித்தன்மையை உண்டாக்கிவிடுகின்றது”.
மேலும், வஹ்ப் இப்னு முனப்பிஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:”நயவஞ்சகனுக்கு மூன்று பண்புகள் உள்ளன:
தனிமையில் இருக்கும் போது சோம்பேறித்தனத்துடன் இருப்பான்.
தன்னுடன் ஒருவர் இருக்கும் போது உட்சாகத்துடன் இருப்பான்.
மனிதர்களின் புகழ்ச்சியில் ஆர்வம் உள்ளவனாக இருப்பான்”.
நபியாவர்கள் கூறினார்கள்: “நயவஞ்சகக்காரர்கள் மீது மிகப்பாரமான தொழுகைகள் இஷாத் தொழுகையும் பஜ்ர் தொழுகையுமாகும். மக்கள் அவை இரண்டிலும் இருக்கும் நலவுகளை அறிவார்களென்றால் அவ்விரண்டையும் தவண்டு சென்றாவது அடைவார்கள்”. (ஸஹீஹுல் ஜாமிஉ)
உண்மையில், சோம்பேறித்தனம் குடிகொண்டிருக்கும் ஒரு சமுகம் எப்பொழுதும் தோல்வியைத் தழுவக்கூடியதாகவே இருக்கும். அச்சமுகத்தில் வீணடிப்பும் பின்னடைவும் பரவலாகக் காணப்படும்.
எம்முன்னோர்கள், ஒருவர் தன்னைக் குறித்து தான் ஒரு சோம்பேறியாக இருக்கிறேன் என்று கூறுவதை வெறுத்துள்ளார்கள். அத்தகையவர்களில் ஒருவராக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைக் இனங்காட்டலாம்.
உண்மையில் சோம்பேறித்தனமானது நோய்கள் பல உண்டாவதற்குக் காரணமாக அமைகிறது. நபித்தோழர்களில் சிலர் நபியவர்களிடத்தில் சமுகம் தந்து நடந்து செல்வதின் மூலம் தமக்கு உண்டாகும் நோயைப் பற்றி முறையிட்டனர். அப்போது நபியவர்கள் அத்தோழர்களை நோக்கி நடந்து செல்லும் போது எட்டுக்களை வேகமாக வைக்குமாறு பணித்தார்கள். இச்செய்தி நாம் மேற்கூறிய அம்சத்திற்கு வலுச் சேர்க்கின்றது.
சோம்பேறித்தனம் உண்டாவதற்கான காரணங்கள்
உலமாப்பெருந்தகைகள் சோம்பேறித்தனம் எதனால் உண்டாகின்றது என்பது பற்றி விளக்கமளித்துள்ளனர். அந்தவிதத்தில்: நயவஞ்சகத்தன்மை குடிகொள்ளல், அதிகமாகத் தூங்குதல், அதிகமான உண்ணுதல் பருகுதல், பிறர் மீது தங்கியிருத்தல், சுத்தத்தை கடைபிடிக்காமல் இருத்தல் என்று பல காரணங்களை பட்டியல் படுத்திக் கொண்டு சென்றுள்ளனர்.
சோம்பேறித்தனத்திற்கான பரிகாரங்கள்
சோம்பேறித்தனத்தை நீக்குவதற்கு மார்க்க அடிப்படையில் சில பரிகாரங்களை உங்கள் பார்வைக்குத் தருகின்றோம்.
1. சோம்பேறித்தனத்தை விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடல்.
நபியவர்களைப் பொருத்தளவில் அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் சோம்பேறித்தனத்திலிருந்து பாதுகாப்புத் தேடியிருக்கின்றார்கள். அந்த அடிப்படையில், அவர்கள் பாதுகாப்புத் தேடிய சில பாதுகாவல் வரிகளை இங்கு பதிய வைக்கின்றேன்.
أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ . رَبِّ إنِّي أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِا اليَوم وَخَيْرَ مَا بَعْدَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِا اليَوم وَشَرِّ مَا بَعْدَهُ . رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ والهَرمِ وَسُوءِ الْكِبَرِ وفِتنَةِ الدُّنيا. رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ.
பொருள்: நாங்கள் காலைப்பொழுதை அடைந்தோம். மேலும், ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்குரியதாக காலைப்பொழுதில் ஆகிவிட்டது. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறுயாரும் இல்லை. அவன் தனித்தவன், இணைதுணையற்றவன். அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது, மேலும் அவனுக்கே புகழனைத்தும் உரியன. அவனே அனைத்து வஸ்துக்கள் மீதும் ஆற்றல் படைத்தவன். என்னுடைய இரட்சகனே! நிச்சயமாக நான் இந்த நாளில் உள்ள நலவை உன்னிடத்தில் கேட்கின்றேன்
. மேலும், இதற்குப் பிறகுள்ளதின் நலவையும் கேட்கின்றேன். இந்த நாளின் கெடுதியில் இருந்தும் உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும், இதற்குப் பிறகுள்ள தீங்கில் இருந்தும் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய இரட்சகனே! உன்னைக் கொண்டு சோம்பேறித்தனம், முதுமைப்பருவம், பெருமையின் தீங்கு, உலகத்தின் குழப்பம் ஆகியவற்றிலிருந்தும் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய இரட்சகனே! உன்னைக் கொண்டு நரகில் இருக்கும் வேதனையில் இருந்தும் கப்ரில் இருக்கும் வேதனையில் இருந்தும் பாதுகாப்புத் தேடுகின்றேன். (முஸ்லிம்)
அதேபோன்று புகாரி முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் நபியவர்கள் அதிகமாக சோம்பேறித்தனத்தில் இருந்தும் பாதுகாவல் தேடுவார்கள் என்று ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளார்கள். புகாரியில் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பில்:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ
என்று பதிவாகியுள்ளது.
பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் துக்கம் துயரம், இயலாமை, சோம்பேறித்தனம், உலோபித்தனம், கோலைத்தனம், கடன் சுமை, மனிதர்களின் மிகைப்பு ஆகியவற்றில் இருந்தும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன்.
2. அல்லாஹ்விடத்தில் சோம்பேறித்தனத்தை இல்லாமல் செய்வதற்கு உதவி தேடல்.
நபியவர்கள் முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கிப் பின்வருமாறு பணித்தார்கள்: “முஆதே! அல்லாஹ் மீது சத்தியமாக நிச்சயமாக நான் உன்னை நேசிக்கின்றேன்” என்று இரு விடுத்தங்கள் கூறினார்கள். பிறகு, “முஆதே! ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நீ தவறாமல் கூறிவர இந்த துஆவை வஸிய்யத்தாக உனக்கு உபதேசிக்கின்றேன்”
اللهُمّ أعِنِّي عَلى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
பொருள்: அல்லாஹ்வே! உன்னை ஞாபகிப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னுடைய வணக்க வழிபாட்ட அழகிய முறையில் நிறைவேற்றுவதற்கும் எனக்கு நீ உதவிபுரிவாயாக! (அபூதாவுத்)
3. இரவைக்குத் தூங்கச் செல்லும் போது ஆயதுல் குர்ஷியை ஓதிக் கொள்ளல்.
நபியவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தூங்கும் போது அவரது பிடறிப் பகுதியில் ஷைத்தான் மூன்று முடிச்சுக்களை இடுகிறான். அம்முடிச்சுக்களின் மீது அவன் அடித்தவனாக: உனக்கு இரவு இன்னும் நீளமாக உள்ளது எனவே, நீ உறங்குவாயாக! என்று கூறுவான். அவ்வாறு அவர் தூக்கத்தில் இருந்து விழித்து, அல்லாஹ்வை ஞாபகப்படுத்தினால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடும்.
மேலும், அவர் வுழூச் செய்தால் மற்றொரு முடிச்சும் அவிழ்ந்துவிடும். இன்னும், அவர் தொழுதால் எஞ்சிய முடிச்சும் அவிழ்ந்துவிடும். அப்போது அவர் உற்சாகமானவராகவும் நல்லுள்ளம் படைத்தவராகவும் காலைப்பொழுதை அடைவார். மாறாக, மேற்கூறப்பட்ட செயல்களை மேற்கொள்ளாதவர் தீய உள்ளம் படைத்தவராகவும் சோம்பேறியாகவும் காலைப் பொழுதை அடைவார்”. (புகாரி, முஸ்லிம்)
4. சோம்பேறிகளை விட்டும் தூரமாக இருந்தல்.
சோம்பேறிகள் மற்றும் நேரத்தை வீணடிக்கக்கூடியவர்களை விட்டும் நாம் எப்போதும் தூரமாக இருக்க வேண்டும். ஏனெனில், நபியவர்கள் நவின்றார்கள்: “மனிதன் தன்னுடைய நண்பனின் மார்க்கத்தில் இருக்கின்றான். எனவே, உங்களில் ஒருவர் யாருடன் கூடிப்பழகுவது என்பதைத் தீர்மானித்துக் கொள்ளட்டும்!” (அஹ்மத்)
5. நேரத்தை வீணாக்கக்கூடிய சாதனங்களைப் புறக்கணித்தல்.
மனிதனது பொன்னான நேரத்தை வீணடிக்கக்கூடிய சாதனங்கள் விடயத்தில் நாம் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அந்தவிதத்தில்:
1. கைபேசிகளில் விளையாட்டு, சினிமா, கழியாட்டம் போன்றவற்றோடு தொடர்புடைய மென்பொருட்களை தரவிறக்கம் செய்து அதில் காலத்தைக் கழித்தல்.
2. தொலைகாட்சி, கணனி போன்றவற்றில் ‘Games’ விளையாடுதல்,
3. காட்டூன் பார்ப்பதில் பொழுதைப் போக்கல்.
4. பார்த்தல் ஊடகங்களில் வெளியூர் விளையாட்டுக்களை கண்டு கழித்தல்.
5. சமுக இணைய தளங்களில் முழுநேரத்தையும் கழித்தல்.
என்று பட்டியல் படுத்திக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் சரிவர நிர்வகிக்கத் தவறும் பட்சத்தில் எம்சமுகம் பாரிய ஒரு பின்னடைவுக்கு முகம் கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.
6. மேலெண்ணங்களைத் தவிர்த்தல்.
அதிகமாக மேலெண்ணம் கொள்வது சோம்பேறித்தனத்தை வரவழைக்கும். இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “அதிகமான மேலெண்ணம் கொள்வது, வணக்கவழிபாடுகளை நிறைவேற்றுவதை விட்டும் சோம்பேறித்தனமாக நடந்து கொள்வதற்கும், பாவமன்னிப்பை வேண்டுமென்று பிற்போடுவதற்கும் வழிவகுக்கின்றது”. (பத்ஹுல் பாரி)
7. சிகிச்சை செய்தல்
சில சமயங்களில் சோம்பேறித்தனமானது ஒருவரின் உடலில் காணப்படும் நோயின் காரணமாகவும் ஏற்படலாம். எனவே, இத்தகைய சந்தர்ப்பத்தில் அது தொடர்பான வைத்தியரை நாடி உரிய சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
8. சுத்தமாக இருத்தல்
நாம் எப்போதும் எம் உடம்பைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குளித்தல், மனம் பூசல் போன்ற செயற்பாடுகளை தினமும் மேற்கொள்வதின் மூலம் இப்பண்பை எம்மைவிட்டும் விலாசமற்றுச் செய்துவிடலாம். அதிலும் குறிப்பாக, மனம் பூசுதல் என்பது எப்போதும் எம் உடம்பிற்கு உட்சாகத்தைத் தருகின்றது.
இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “நல்ல வாசனையானது உயிருக்கு உணவாக இருப்பதினால் அதனை நாம் பரிமாறிக் கொள்ள வேண்டும்”. (ஸாதுல் மஆத்)
மேலும், நபியவர்களைப் பொருத்தளவில் அவர்களிடத்தில் வாசனைகளில் ஒன்று கொடுக்கப்பட்டால் அதனை மறுக்க மாட்டார்கள். (புகாரி)
இன்னும், நபியவர்கள் கூறினார்கள்: “எவரிடத்தில் வாசனைகளில் ஒன்று கொடுக்கப்படுகிறதோ, அவர் அதனை மறுக்க வேண்டாம். நிச்சயமாக அது வாசனையில் சிறந்ததாகவும், சுமப்பதற்குப் பாரமற்றதாகவும் இருக்கின்றது”. (முஸ்லிம்)
சோம்பேறித்தனம் என்ற இத்தீய பண்பை போக்கிவிட நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். நாம் மேலே குறிப்பிட்ட பரிகாரங்களை சிறந்த ஆளோசனைகளாக எடுத்து செயற்படுவதற்கு அல்லாஹ் எம்மனைவருக்கும் நல்லருள் புரிவானாக!
No comments:
Post a Comment