சூஃபியின் வண்ணத்துப்பூச்சிகள்
அவரது புல்லாங்குழலின் துளைகளிலிருந்தே
தோன்றிப் பறந்தன
லைலாவின் ஈர இமைகளில்
நீருறுஞ்சிய உணர்கொம்புகளால்
மஜ்னூனின் தூரத்தையளந்து
பாட்டமாய்ப் பறந்தன
அவன் வெறும் பாதச்சுவடுகளில் அமர்ந்து
பாலையெங்கும் சுட்டுத்தீயும்
பிதற்றலைக் கேட்டன
காற்று ஏதோ அந்தரங்கத்தைக்கூறி
வெள்ளைநிற வண்ணத்துப்பூச்சியொன்றை
தனியே அழைத்துவருகிறது
அடக்க ஸ்தலத்தின் மினாராவை சுற்றிப்பறந்து
அறபு எழுத்துகள் பொறித்த தூணில்
‘அலிஃபில்’ அமர்ந்தெழுந்த வண்ணத்துப்பூச்சி
‘ஹேயில்’ அமர்ந்தெழுந்தது
‘மீமில்’ அமர்ந்தெழுந்தது
‘சுப்ஹானல்லாஹ்வின்’ மீது அமர்ந்த பின்னர்
திரும்பிப் பறநதுசெல்லத் தோன்றாதபடி
‘நுக்தாவாய்ச்’ சமைந்தது
--
அலிஃப், ஹே, மீம், : அறபு எழுத்துகள்
நுக்தா : புள்ளி
சுப்ஹானல்லாஹ் : அல்லாஹ் தூயவன்
( காலச்சுவடு ஜனவரி - 2019 )
No comments:
Post a Comment