Mohamed Rafee நாகூர் ரூமி:
ஷெய்க் உதுமான் என்று ஒரு இறைநேசர் இருந்தார். அவர் காய்கறிகளை வைத்து ஒருவித சூப் மாதிரி செய்து விற்று வந்தார். அவரிடம் வருபவர்கள் சில சமயங்களில் செல்லாக் காசுகளையும் கொடுப்பார்கள். அது செல்லாக்காசு என்று தெரிந்தும் அவர் அதைப் பெற்றுக்கொண்டு சூப் கொடுப்பார். அவர் செல்லாக் காசைப் பரிசோதிப்பதில்லை என்ற செய்தி பரவி பலர் அவரிடம் செல்லாக்காசைக் கொடுத்து சூப் பெற்றுச் சென்றனர். நாளாக நாளாக அவரிடம் செல்லாக்காசுகள் அதிகமாக சேர்ந்துவிட்டன. அவருடைய இறுதிக்கணம் நெருங்கியது. உயிர் பிரியப்போகிறது என்று உணர்ந்துகொண்டவுடன் அவர் இறைவனிடம் இப்படிப் பிரார்த்தனை செய்தார்:
”இறைவா, மக்கள் கொடுத்த செல்லாக் காசுகளையும் செல்லும் காசுகளையும் நான் எவ்வித தயக்கமும் இன்றி பெற்றுக்கொண்டு என்னிடமிருந்ததைக் கொடுத்து அவர்களின் பசி போக்க உதவினேன். இது செல்லும் காசு, இது செல்லாக்காசு என்று, இது நேர்மையானது, இது தீவிரம் குறைந்தது என்று வித்தியாசம் ஏதும் பார்க்கவில்லை. அவர்கள் கொடுத்தது செல்லாக்காசு என்று தெரிந்தும் மனப்பூர்வமாக, எந்தவித குறையும் சொல்லாமல் பெற்றுக்கொண்டேன்.
”இறைவா, அதுபோல என் இறைவணக்கங்களில் உளப்பூர்வமானதும், மனம் ஒட்டாமல் நான் செய்த வணக்கங்களும் இருக்கும். நான் செல்லாக் காசுகளை ஏற்றுக்கொண்டதுபோல, நீயும் என் நேர்மையற்ற வணக்கங்களையும் ஏற்றுக்கொள்வாயாக, எதையும் மறுத்துவிடாதே” என்று பிரார்த்தித்தார்.
இந்த பொருள் பொதிந்த அழகான வரலாற்றுக்குறிப்பை டெல்லியில் அடக்கமாகியிருக்கும் ஞானி ஹஸ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா அவர்கள் தனது பேச்சினூடே ஒரு சீடருக்குச் சொல்கிறார்கள்.
அதைப்படித்தபோது என்னைப் பற்றி அவர்கள் பேசியிருப்பதாக உணர்ந்தேன். என்னைப் போலவே பலருடைய இறைவணக்கங்களும் குறையுள்ளதாக இருக்கலாம். அவர்களுக்கும் உதவட்டும் என்று இந்த நிகழ்ச்சியை அனுப்புகிறேன்.
ஹஸ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா அவர்கள் சொன்ன இந்த கதை எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுத்தது. அதே சமயம், அடுத்தவர்கள் என்னிடம் தவறு செய்யும்போது, தங்கள் செயல்கள் என்னும் செல்லாக்காசுகளைக் கொடுக்கும்போது நானும் அவற்றை எந்தவிதக் குறையும் சொல்லாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தியையும் இது எனக்குச் சொன்னது. நம் குழுவில் உள்ள பலருக்கு, அல்லது அனைவருக்கும், இது உதவியாக இருக்கலாம் என்று தோன்றியது. அதனால் இதை இப்போது பதிவிடுகிறேன்.
அன்புடன்
நாகூர் ரூமி
No comments:
Post a Comment