Thursday, January 10, 2019

"கேட்பதெல்லாம் பாதியை..... அல்லது பாதியின் அரைப்பகுதியை

Musthafa Qasimiமுஸ்தஃபா_காசிமி


"கேட்பதெல்லாம் பாதியை.....
அல்லது
பாதியின் அரைப்பகுதியை

அரைப் பகுதியின் மீதியை....
மீதியில் எஞ்சுவதை...
அல்லது
தீர்ந்துபோனதின் தடத்தை...
இருந்தது என்பதன் நினைவை."

கவிஞர் Anar Issath Rehana எழுதிய இக்கவிதையை வாசித்தபோது
எனக்கு பாலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வேஷின் கவிதை நினைவுக்கு வந்தது.

"என் ஒரு பகுதி என்னிடம் உள்ளது.

என் மறு பகுதி உன்னிடம் உள்ளது.

என் ஒரு பகுதி என் மறு பகுதிக்கு ஆசைப்படுகிறது.

தரமாட்டாயா?." என்கிறார்.


பெண்ணும் மண்ணும் ஒருமித்த தன்மையுடையது தானே!

தர்வேஷை வாசிக்கும் போது
கவிஞர் பெண்ணைக் கேட்கிறாரா... மண்ணைக் கேட்கிறாரா? என்ற மயக்கம் இயல்பாகவே வந்து விடும்.
..

ஃகாத்தா ஸம்மான் எழுதிய கவிதையோ
'பாதி' யின் மறுபக்கத்தைக் காட்டுகிறது.

"இடி போல்
என்னைப் பிழந்து விட்டாய்
இரு துண்டாய்
ஒரு பாதி நேசிக்கிறது
மறுபாதி துன்புற்றுக்
கொண்டிருக்கிறது
உன்னை நேசிக்கும் முதல் பாதிக்காக.
..

"மனித அழகில் பாதி
அவன் நாவில் இருக்கிறது..."

"கண்ணின் அழகில் பாதி
பார்க்கும் விதத்தில் இருக்கிறது..."

"பலவீனக்கண்ணியை அறிந்து பலவீனத்தை ஒப்புக்கொள்ளவும் செய்வது தீர்வின் ஒரு பாதி."

என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும்

‏إذا تعلمت التجاهل . .
فقد إجتزت نصف مشاكل الحياة !!
"முட்டாளாக நடிக்கக்
கற்றுக் கொண்டால்..
வாழ்வின் பாதி கஷ்டங்களைக்
கடந்து விடுவாய்!!" என்ற கலீல் ஜிப்ரானின் போதனையைத் தான்
'முழுமை' யாக விரும்புவோர் பின்பற்றியாக வேண்டும்.
..

ஒரு ஆன்மிக குரு தன் சீடர்களுக்கு பாடம் புகட்டிக்கொண்டிருந்தார். எந்த விசயத்திலும் உள்ள நிறையையும் நிறைவையும் காண பழகிக் கொள்ள வேண்டும் என்றார்.

உதாரணத்துக்கு, ஒரு மண் பானையை எடுத்து வரச் சொல்லி அதில் பாதி அளவு நீரை ஊற்றச் சொன்னார். ஒரு சீடர் செய்தான்.

"இப்போ இந்த பானை பாதியளவு நிறைந்திருக்கிறது என்று எடுத்துக்கணும்" என்றார் குரு .

ஒரு சீடர், திடீரென்று அந்தப் பானையிலிருந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டு, "இப்போ வெறுமையா இருக்குதே? என்றார்.

உடனே குரு , இல்லையே இப்போ அந்த பானை வெறுமையால் நிறைந்திருக்கிறது பார் என்றார்.

'பாதி' குறித்த பரிதவிப்பை இவ்விதமாக தணிக்கும் முயற்சிகள் நடக்கத் தான் செய்கின்றன.
..

"ஒரே தடவையில் மனிதன் மரணிப்பதில்லை.

பகுதி பகுதியாகத்தான் மரணிக்கிறான்.
நண்பன் பயணிக்கும் போதெல்லாம் ஒரு பகுதி மரணிக்கிறான்.

காதலன் ஏமாற்றும் போதெல்லாம் ஒரு பகுதி மரணிக்கிறான்.

ஒவ்வொரு கனவு கொல்லப்படும் போதும் ஒரு பகுதி மரணிக்கிறான்.

எல்லாப் பகுதியையும் மரணிக்கச் செய்வதற்காகவே பெரிய மரணம் வருகிறது.

சுமந்து கொண்டு போகிறது." என்பார் ஜிப்ரான்.

பகுதி பகுதியான ஒரு இழப்பு, உயிர்களை எவ்விதம் பரிதவிக்க வைத்து விடுகிறது!?
..

"அந்தலூசிய (ஸ்பெயின்)
கார்டோபா நகரில் மட்டும்
170 பெண்கள்
கூஃபா எழுத்தமைப்பில்
குர்ஆனை எழுதி வந்தார்கள்.

அந்தலூசியா முழுக்க,
கிழக்கில் சீனாவிலிருந்து
மேற்கில் பிரான்ஸின்
மலைத்தொடர்கள் வரை
அப்படி இருந்தவர்கள் எத்தனையோ பேர்!

அதே காலகட்டத்தில்
ஐரோப்பிய பகுதி முழுக்க
பெண்கள் கல்வி கற்க,
புனித நூலைத் தொட
தடை விதிக்கப் பட்டிருந்தது."

மாதவிடாய் சர்ச்சைகளால்
இன்றளவிலும் பெண்கள் முடக்கப்படும் சூழலில் இச்செய்தி கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
..
كن سعيدًا في هذه اللحظة،
فهذه اللحظة جزء من حياتك
"இந்த நொடியில்
மகிழ்ச்சியாக இரு!
இந்த நொடியும்
உன் வாழ்வின் பாகம்!" என்பார்
உமர் ஃகய்யாம்.

"தோல்வி, வெற்றிக்கு எதிரானதல்ல;
அதன் ஒரு பகுதி..." எனத் தேற்றிக் கொள்கிறான் ஒரு தோல்வியாளன்.

எனினும் 'முழுமை'க் கான போராட்டத்தில் இறைவனின் கேள்வியொன்றும் இணைந்து கொள்ளவே செய்கிறது:

اَفَتُؤْمِنُوْنَ بِبَعْضِ الْكِتٰبِ وَتَكْفُرُوْنَ بِبَعْضٍ‌

"(அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் ஒரு பகுதியை நம்பி மற்றொரு பகுதியை மறுக்கிறீர்களா?" (அல்குர்ஆன் : 2:85)

#முஸ்தஃபா_காசிமி

Musthafa Qasimiமுஸ்தஃபா_காசிமி

#கீழைத்தேய_உலா- 2

முந்திய பதிவை வாசிக்க...

https://m.facebook.com/story.php?story_fbid=2331106713785696&id=100006591696071

No comments: