Sunday, February 4, 2018
ஒன்ஸ் அப்பான் எ டைம் .... / Abu Haashima
ஒன்ஸ் அப்பான் எ டைம் ....
அதாவது கொஞ்ச காலத்துக்கு முன்னாலே...
குமரி மாவட்டம் அப்படின்னு ஒண்ணு தமிழ் நாட்டிலே இருக்கு.
" வஞ்சி நாடதனில் நன்செய்
நாடெனச் செந்தமிழ் வழங்கும்
தேயம் ஒன்றுளது - அதன்
அந்தமில் பெருவளம் அறியார் யாரே "
அப்படின்னு மனோன்மணியம் சுந்தரனார் புகழ்ந்து பாடிய செழிப்பான நாடு நாஞ்சில் நாடு.
" பண்ணைப் பழுத்த பழ நாடு - சுற்றிப்
பார்த்திட கண்கள் குளிரும் நாடு " என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் பாடியிருக்காரு.
நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் இந்த மாவட்டம் நீர்வளம் , நில வளம் , மலைவளம், கடல் வளம் என எல்லா வளமும் பெற்று எழிலோடு இலங்கும்
செழுமை நிறைந்த பூமி !
ஆனி ஆடிச் சாரல் இந்த மண்ணுக்கே உரித்தான முத்தான வான் முத்து.
வாழையில் எத்தனை
வகை உண்டு என்பதை இங்கேதான் கேட்க வேண்டும்.
தென்னையும் நெல்லும் தேயிலையும் கூட விளையும் நிலம்.
தேக்கும் ஈட்டியும் கரு மருதும்
விளைந்த காடு.
உலக்கை அருவியும் திற்பரப்பும்
வருடம் முழுவதும் வெள்ளமாய்
வாரி விழுந்து சந்தோசம்தரும் குளுமை .
சுற்றிலும் கடல்...
என்னென்ன மீன்கள்.
அப்பப்பா ...
அத்தனையும் அளவில்லா சுவைகள்...! தேனும் தினைமாவும் தரும்
காணி இன மக்கள் வாழும் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைப்பகுதி .
பெரியாறும் சிற்றாறும் ஓடிக்கொண்டிருக்கும் அன்றைய
பக்றுளி ஆறு ஓடிய பசுமை பெரு நிலம். மாதம் மும்மாரி மட்டுமா ?
மாதந்தோறும் மாரிக்காலம்தானே..
1971 ம் ஆண்டு ஒரு வெயில் காலத்தில் சென்னை சூடு தாங்காமல் சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்கு அரசுப் பேருந்தில் வந்து கொண்டிருந்தேன்.
அப்போ சொகுசுப்பயணம் எல்லாம் இல்லை. சாதாப்பயணம்தான்.
அது ஒரு 16 மணி நேரம் ஓடும்.
பஸ்ஸில் சாய்ந்து கொண்டு உறங்கினேன்...
உறக்கம் வரவில்லை.
சூடு காற்றுதான் வந்தது . நெடுநேரத்திற்குப்பின் கண்ணயர்ந்தேன்.
திடீரென்று தண்ணீரை தெளித்ததுபோல் முகத்தில் குளிர்காற்று வீசியது.
காலை நேரம் அது.
விழிப்பு வந்து விட்டது.
பின் இருக்கையில் இருவர் பேசுவதைக் கேட்டேன்...
" இங்கே வந்தவன் எவனும் போக மாட்டான் சார்.. நாமெல்லாம் அந்த சுடுகாட்டிலே வெந்துகிட்டு கிடந்தோம்.. இப்போ பாருங்க மாவட்ட எல்லையிலேயே குளிர் காற்று
நம்மை எப்படி வரவேற்குதுன்னு .
இந்த ஊரிலிருந்து மாற்றலாகிப் போக மனசு வருமா ? அதான்.. இன்னும் மூணு வருஷம் இங்கேயே உக்காந்துரனும்னு முடிவு பண்ணிட்டேன்..."
அவர்கள் வெளியூர் ஆட்கள்.
குமரி மாவட்டத்ததில் அரசு ஆசிரியர்களாகப் பணி புரிபவர்கள். அவர்கள் அப்படியே லயித்துக் கிடந்தார்கள்... இந்த மாவட்டத்தின் சுகத்தில்.
நெல்லையின் வெப்பக்காற்று முடிந்து காவல்கிணறு எல்லையிலேயே இதமான பூங்காற்று நம்மை வரவேற்கும். உள்ளே நுழைந்ததுமே
முப்பந்தல் தொட்டு ஆரல்வாய்மொழி காற்று ( இப்போ காற்றாலைகள் வந்தாச்சு ) ஆளையே தூக்கிகிட்டு போகும் அளவுக்கு வீசும்.
யார் கண் பட்டதோ தெரியவில்லை...
10, 15 வருடமாக ஆனி ஆடி சீசனே இல்லாமல் போய் விட்டது. போச்சு ..போச்சு என்றே நினைத்திருந்தோம்... ஆனால் " போகவில்லை ...இதோ வந்து விட்டேன்" என்று இந்த வருடம் சாரல் மழை நாள் முழுவதும் இரவு முழுவதும் பெய்து கொண்டே இருக்கிறது... பழைய குமரி மாவட்டம் மீண்டும் வந்து விட்டது !
வருக வருக மா மழையே வருக !
மண்ணில் இறங்குகிறது ஈரம் !
மனசுக்குள்ளும்தான் !
இறைவனுக்கே எல்லாஹ்ப் புகழும் ... அல்ஹம்துலில்லாஹ் !
இது சில வருஷம் முன்னால்
போட்ட பதிவுதான்.
என்றாலும் ...
இன்றைய குமரி மாவட்டத்தின்
பருவ நிலையையும் கொஞ்சம்
சொல்ல வேண்டும்.
பல வருஷங்களுக்குப் பிறகு
இந்த வருஷம் நல்ல மழை பெய்தது.
இதுவரை இல்லாத நிலையில்
புதிதாக ஓகிப்புயல் வீசியது.
பலத்த சேதம்.
விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்க
விவசாயிகள் பட்ட கஷ்டம் அதிகம்.
மீனவர்கள் ஏராளம் பேர் உயிரிழப்பு.
பல ஆயிரக்கணக்கான மரங்கள்
சாய்ந்து விழுந்தது.
அத்தனைக்குப் பிறகும்
குமரி மாவட்டம்
மீண்டும் " குமரி " மாவட்டமாகவே
திகழ்வது இறைவன் தந்த கொடை.
முந்திய வருடங்களை விட
இந்த வருடம் பனியும் குளிரும் அதிகம்.
சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகம்.
பாதிப்புகள் நீங்கி
என்றென்றும் பசுமை மாவட்டமாக
எங்கள் குமரி மாவட்டம் திகழ
இறைவன் அருள் புரிய வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment