#நிஷாமன்சூர்
வெளியேற்றம்..!
எப்படியாவது இங்கிருந்து
வெளியேறி விட வேண்டும்
ஒரு பெரும் மீன் வலையின் உயிர்புள்ள நரம்பொன்று
மரணத்தின் கடைசித் துடிப்புகளை
உணர்ந்துணர்ந்து திடுக்குறுவதுபோல
இன்னும் எத்தனை கொலைகளுக்குத்தான் சாட்சியாக இருப்பது
எப்படியாவது இங்கிருந்து
வெளியேறி விடவேண்டும்
நமக்குக் கிடைத்தவை இரண்டு வாய்ப்புகள்
சூதுமிகு கரமொன்றின் குறுவாளாக இருப்பது
அல்லது கொலைவாளில் வழிந்துறையும் குருதியாக இருப்பது
நாம் எப்போதும் முந்தையதையே தேர்ந்தெடுக்கிறோம்
பின்னர் குற்றவுணர்வின் புதைசேற்றில் மூழ்கித் தவிக்கிறோம்
எப்படியாவது இங்கிருந்து
வெளியேறி விடவேண்டும்
வலையோடு பறந்து செல்கின்றன லட்சியப் புறாக்கள்
மீனுடலைக் கிழித்து வெளியேறுகிறான் சாகசக்காரன்
கார்ப்பரேட் விலங்கிடப்பட்ட கைகளை ஒருக்காலும்
பிரார்த்தனைக்குக்கூட ஏந்தவியலாது என்பதால்
யூனுஸ் நபியின் இறைஞ்சுதலைக் கொண்டு
விடுதலையின் அற்புதத்தைக் கனவு காண்கிறோம்.
*லாயிலாஹ இல்லா அன்த்த சுபஹானக்க இன்னீ குன்த்தும் மினல்லாளிமீன்
எப்பாடுபட்டாவது இங்கிருந்து
வெளியேறி விடவேண்டும்
#நிஷாமன்சூர்
*யூனுஸ் நபி திருக்குரானில் குறிப்பிடப்பட்ட தீர்த்ததரிசி. மீனின் வயிற்றில் பலநாட்கள் சிக்கியிருந்து பின்னர் உயிருடன் வெளியேறினார்.வயிற்றின் கும்மிருட்டில் அவர் பிரார்த்தித்த பிரார்த்தனைதான் கவிதையில் உள்ளது
நிஷா மன்சூர்
No comments:
Post a Comment