Friday, February 16, 2018

தகப்பனார் ....

தகப்பனார் ....
தோலில் சுமப்பவள்
அன்பான அன்னை
தோளில் சுமப்பவர்
வாஞ்சனையான வாப்பா ....
நேரான பாதைகளில்
குடும்பமது பயணிக்க
கூரான அறிவூட்டும்
தலைவனாம் தந்தை

உழைத்து உயருமிடம்
வாழ்க்கையெனும் சந்தை ....
நேசமாய் அமருமிடம்
பிள்ளைகளின் சிந்தை
அன்பெனும் காற்றடைத்து
குடும்பமெனும் பந்தை
நெஞ்சத்தில் சுமப்பது
அற்புதமான விந்தை ....
குடும்ப வளர்ச்சிக்கு
உரம் சேர்த்திட
உதிரம் சிந்தி
உழைப்பின் கடினத்தால்
கரம் காய்த்தவர் ....
வெயிலின் சூட்டில்
வியர்வை நாற்றத்தில்
மூட்டை தூக்கி
குடும்பக் கூட்டில்
உயர்வை அடைந்திட
வீட்டை காப்பவர் ...
வறுமை நாட்களில்
கந்தை அணிபவர்
சொல்லிலும் செயலிலும்
அகந்தை அற்றவர் ....
பெற்றெடுத்த குழந்தைகள்
வளருகிற பருவத்தில்
நடைகள் பயின்றிட
கைப்பிடித்து நடத்திடுவார்
சைக்கிளில் அமர்த்தி
தெருக்களில் சுற்றுவார் ....
சாரல் மழையில்
குழந்தைகள் கைகளசைத்து
ஆவலாய் விளையாடினால்
தலையை துவட்டிடுவார் ....
பிள்ளைகள் தவறிழைத்தால்
கம்பால் மிரட்டாது
அன்பால் வசப்படுத்தி
அரவணைத்தலை நிசப்படுத்தி
அவர்களின் இதயத்தில்
இருக்கையிட்டு அமருவார் .....
கல்வி கற்கையில்
மதிப்பெண்கள் குறைந்தாலும்
முன்னேற்ற குறிப்பேட்டில்
கையெழுத்திட்டு அறிவுறுத்துவார் ....
விலைகள் கடுமையாயினும்
உலைகளில் அரிகளிட
பொருட்களை சேகரித்து
மனைவியிடம் கொடுப்பார் ....
தேசம் கடந்தும்
உபதேசம் செய்திடுவார்
நேசம் பொங்கிட
வாசமாய் உரையாடுவார் ....
அன்பெனும் நிலத்தில்
பாசமெனும் நாற்றுகளை
நிரந்தரமாய் நட்டிடுவார் ....
பிரச்சனைகளை சந்தித்து
வீழ்ந்து எழுந்து
குடும்பம் முன்னேறிட
ஆழ்ந்து சிந்தித்து
இறையருளால் ஆயுளுக்கும்
வாழ்ந்து மகிழ்ந்திடுவார் ...
.
அப்துல் கபூர்

No comments: