Wednesday, January 31, 2018

காலம்..!!

காலம்..!!
நில்லாமல் ஓடுகிறது காலம்!
அதை விடாமல் தொடர்ந்து
துரத்துகிறது இந்த ஞாலம்!
காலம் நிறையவே கற்றுத் தருகிறது.
கருத்துக்களை அவ்வப்போது
மாற்றியும் விடுகிறது!
முன்னொரு காலத்தில்
சரியென்று கருதியது
பின்னொரு காலத்தில்
தவறென்று படுகிறது!

அன்றைய காலத்தில்
தவறென்று எண்ணியதை
இன்றைய காலத்தில
சரின்று எண்ணவைக்கிறது!
அனுபவங்களை விதைக்கும் போதே
மாற்றங்களை அறுவடையும் செய்கிறது!
காலம் கற்றுக் கொடுக்கும் ஞானங்கள்
மனிதசிந்தைக்குள் இறங்க இறங்க
புதியஞானங்களை பிரசவிப்பதே
காலத்தின் வினோதம்!
அறிவியல் என்னும் விஞ்ஞானமாகட்டும்
ஆன்மீகமென்னும் மெய்ஞ்ஞானமாகட்டும்
கால ஓட்டத்தின் வேகத்தில்
கோலமாற்றங்களை அடைந்து கொள்கின்றன!
பாருங்கள்!
அன்று பொருண்மையின்(matter)
பிளக்க முடியாத மிகச்சிறு கூறு molecule
என்று மாலிக்யூலார் தியரியை நிறுவினான்.
அது அன்று சரியாகத்தான் பட்டது!
அதை வைத்து போடப்பட்ட சமன்பாடுகளுக்கு
விடைகளும் காணப்படவே செய்தன!
காலம் நடந்து கொண்டே இருந்தது!
அப்புறம் டால்டன் வந்தான்!
இல்லை இல்லை
பிளக்க முடியாத மூலக்கூறு அணுதான் என்றான்!அவன் படித்த மாலிக்யூலிலேயே அந்த அணு இருக்கிறது என்றான்!
அதுவும் அப்போது சரியாகத்தான் இருந்தது!
முந்தைய கொள்கை தவறானது என்றானது!
வினோதம் என்னவென்றால் தவறான முந்தைய கொள்கையிலிருந்தே சரியான புதியதை நிறுவினான்!
காலம் நடந்து கொண்டே இருந்தது!
ரூதர்பொர்டு வந்தான்!
இல்லை இல்லை!பிளக்கமுடியாதது அணுவல்ல!அதையும் பிளக்கலாம்! அதற்குள்ளே நியூக்ளியஸ் எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் என்று நிறையச் சமாச்சாரங்கள் உளளன!நியூக்ளியஸ்தான் ஆகச்சிறிது என்றான்!அணுகுண்டு மெல்ல உயிர்பெறத்துவங்கியது!
அதுவும் தவறாகிப்போன முந்தைய கருத்திலிருந்து உருவான சரியான கருத்தானது!
காலம் நடந்து கொண்டே இருந்தது!
ஐன்ஸ்டீன் வந்தான்!அடேய்!நியூக்ளியசையும் பிளக்கலாம்!பிளந்தால் படுபயங்கர சக்தி வெளிப்படும் என்று புன்னகைத்தான்!உலகின் முதல் நியூக்ளியார் குண்டு(nuclear bomb)
உயிர் பெற்றது!சிறிது காலத்திலேயே உயிர்களைப் பலியும் வாங்கியது!!
பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது வாயுவிதி
(Gas equation)படித்திருப்போமே நினைவிருக்கா?
P x V=RT.அதேதான்!அதை வைத்து கணக்குகளெல்லாம் போட்டு சரியான விடைகளையும் எழுதியிருப்போம்!மார்க்கும் வாங்கியிருப்போம், இல்லையா?
காலம் நடந்து கொண்டே இருந்தது!
பள்ளிக்கூடம் விட்டு பட்டம் வாங்க கல்லூரி போனபோது ,அது சரிதான் ஆனால் சரியான சரியில்லை!சின்ன திருத்தம் செய்யணும் என்று வாண்டர்வால் ணு ஒரு ஆசாமி சொல்லியிருக்கிறார்!அதாவது Wanderwall's correction to gas equation என்று புதுக்கதை சொல்லித் தந்தார்கள்!
இனி, ஆன்மீகத்தை பற்றி கொஞ்சம் பார்க்கலாம் என்றால் பதிவு இப்போதே நீண்டுவிட்டது!இதை எத்தனைபேர் பொறுமையுடன் படிப்பீர்களோ என ஒரு ஐயம் எழுவதால் இன்ஷா அப்புறம அதைப் பற்றி பேசலாமே!
ஒரே ஒரு விஷயம்!
சுந்தரம் பிள்ளையின் தமிழ் வாழ்த்தைப் புரட்டப்போய் அங்கே ரெண்டு வரிகள் கண்ணில் படப்போய் இங்கே உங்களுக்கு அதைச்சொல்ல வந்து இவ்வளவுதூரம் இழுத்து வந்தாச்சு..!
"காலம் என்பது கறங்குபோல் கிறங்கி
கீழதுமேலா மேலது கீழ் மாற்றும் தன்மையது"!
டெயில்பீஸ்..
" குல்லுமன் அலைஹா ஃபான்,
வ யப்கா வஜ்ஹு ரப்பிக தில் ஜலாலி வல் இக்ராம்"
அனைத்தும் மாறிவிடும்!உமது இறைவனின் திருமுகம் மட்டும் மாறாது என்றும் நிலைபெற்றிருக்கும்
-அல்குர்ஆன்.

Noor Mohamed

No comments: