Yembal Thajammul Mohammad
இறைவனின் திருத்தூதர் என்று அறியப்படும் முன்னரே முஹம்மது(ஸல்) அவர்கள். மக்களிடையே நம்பிக்கையும் புகழும் பெற்றவராக விளங்கினர். இதனால் கவரப்பட்ட கதீஜா பிராட்டியார்(ரலி) அவர்கள், தம்முடைய வணிகப் பொருட்களை விற்கும் பொறுப்பாளராக அவர்களை நியமித்தார்.
முதலாவதாக ஹுபஷா, ஜராஷ்(தாயிஃப்) ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைத்தார். முஹம்மது(ஸல்) அவர்கள் வெற்றிகரமாக வணிகம் செய்து திரும்பியதால் அவர்களுக்கு இரண்டு ஒட்டகங்களை அன்பளிப்பாக வழங்கினர் கதீஜா(ரலி). பின்னர் சிரியாவில் உள்ள பாஸ்ட்ரா’வுக்கு அனுப்பினார்.அப்போது முஹம்மது(ஸல்) அவர்களுக்கு ஊழியம் செய்யவும் அவர்களுடைய பண்புநலன்களை ஆய்ந்தறியவும் மைஸரா எனும் ஊழியரையும் உடன் அனுப்பி வைத்தார்.(இந்த பாஸ்ட்ரா’ பயணம் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நிகழ்வுகளை உள்ளடக்கியது)
மக்கா திரும்பியதும் முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றி மைஸரா கூறியவற்றால் பெரிதும் கவரப்பட்ட கதீஜா பிராட்டியார்(ரலி) , முஹம்மது(ஸல்) அவர்களைத் திருமணம் செய்து கொள்ள விரும்பி நபீஸா எனும் தோழியைத் தூதுவிட்டார். ஆம், முஹம்மது(ஸல்) அவர்கள் கதீஜா பிராட்டியாரின்
“சிந்தை கவர்ந்த செழும்புகழ் முஹம்மது” ஆனார்.
நினைவிலும் கனவிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டார்!! ஒரு முறை “கனவினை நனவென்று அகமகிழ்ந்து எழுந்து கதிர்மணி வாயிலை நோக்க” அங்கே முஹம்மது(ஸல்) அவர்கள் காணப்படவில்லை. அதனாலே அவர் அடைந்த நிலை இது:
“பஞ்சணை பொருந்தார், இருவிழி துயிலார்
பழத்தொடு பாலமுது அருந்தார்
கொஞ்சும்மென் குதலைக் கிளியொடு மொழியார்
கொழுமடல் செவிக்கிசை கொள்ளார்
கஞ்சமென் மலர்த்தாள் பெயர்த்திட உலவார்
கடிமலர் வாசநீர் ஆடார்
வஞ்சிநுண் இடையார் தம்மிடத்து உறையார்
முகம்மது மனத்திடத்து உறைந்தார்”
(அண்ணல் முஹம்மது(ஸல்) அவர்களின் நினைவு மேலீட்டால் அன்னை கதீஜா(ரலி) அவர்கள், எவற்றையெல்லாம் தவிர்த்துத் தவித்தார் என்பதையும் பின்னர் எங்கு சென்று “உறைந்தார்” என்பதையும் செய்யுள் சுவைஞர்கள் கவனிக்கவும்.
இந்தச் செய்யுளில் இடம்பெற்றுள்ள “முகம்மது மனத்திடத்து உறைந்தார்” என்ற வரி முத்தாய்ப்பானது. சீறா: க.கா.படலம்-பா.10)
[இவை அண்ணல் முகம்மது நபி(ஸல்) அவர்கள் தூதுத்துவம் பெறுவதற்கு முன்னர் நடந்தவை என்பதை(ப் போராளிகள்) கவனத்தில் கொள்ளல் நலம்]
Yembal Thajammul Mohammad
No comments:
Post a Comment