ஓர் பன்னிரெண்டு ஆண்டுகாலம் சௌதி அரேபியாவின் கிழக்கு கடற்கரை நகரமான் 'டமாம்'(Damam)மில் தொடங்கி, அதன் சுற்றுபுற நகரங்களில் நகர்ந்து, சௌதியின் மைய நகரமும், தலைநகருமான ரியாத்,(Riyadh) மற்றும் அதைத் தொட்ட நாலாப்பக்கமும் சுமார் முன்னூறு, நானூறு கிலோ மீட்டர் அளவில் பல திக்குகளிலும் தொழில் சார்ந்து சுற்றித் திரிந்திருக்கிறேன். அப்படியொரு வேலை!
சௌதி அரேபிய என்றால்... பெட்ரோலும், பாலைவான்முதான்! அந்நாட்டின் 'பாலைவனம்' ஓர் கண்கொள்ளாக் காட்சி என்பதில் இம்மியும் சந்தேகமே இல்லை! நகரத்தை விட்டு தாண்டிப் போனால்.. பார்க்கும் திக்கெல்லாம் கண்ணுக்கெட்டிய தூரம்வரை மஹா சமுத்திரம் மாதிரி மணல்கொண்டு காட்சியாக இருக்கும்!
இந்தப் பாலைவனத்தை கொண்ட அந்நாட்டின் கோடைப் பருவம் குறித்து எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நீங்கள் அறிந்தப்படிக்கு, தீய்க்கும் உக்கிரம் கொண்டதுதான் அது! ஆனால், அந்நாட்டின் குளிரைப்பற்றிச் சொன்னால் உங்களில் எத்தனை பேர்கள் நம்புவீர்கள் அல்லது தீரத்தெரியும் என்று தெரியவில்லை. கோடைக் காலம் மாதிரியே குளிர் காலமும் அப்படியோர் அதீதம்தான்! சில நேரம், முன்சீபல் தண்ணிர் வரும் பைப் லைன் ஐஸ்ஸாக உறைந்தும் போகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
சுமார் ஐந்து மாதங்கள் நீளும் குளிரில், இரண்டு மாதக் காலம் அது ஏகத்துக்கும் விசேசமாக, பெயர் சொல்லும்படிக்கு இருக்கும்! டமாம் சுற்று வட்டத்தைவிட, தலைநகர் ரியாத்தின் சுற்று வட்டத்தில்தான் குளிர்காலக் குளிரின் தாண்டவம் அதிகம்! அப் பருவம் ஆரம்பிக்கும் போதும், அது முடிகிற போதும் ஓரிரு நாட்கள் கட்டாயம் மழை பெய்யும்! சில சமயம் அது ஒருவாரம் என்கிற கணக்கில் கூட நீடிக்கும். பொதுவில் அரேபிகளுக்கு மழை ஏனோ அவ்வளவாகப் பிடிப்பதில்லை. அது வேறு செய்தி சார்ந்தது. ஆனால், குளிர் அப்படியல்ல. அது அவர்களுக்கு இஸ்டம். இஷ்டத்திலும் இஸ்டம்.
இங்கே, சௌதியின் தலைநகர் ரியாத் பகுதியின் குளிர் காலக் குறிப்புகளோடு, நான் கண்டதும் கேட்டதுமான ஓர் நிகழ்வை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
குளிர்காலம் அதிகரிக்க அதிகரிக்க நாடே 'ஃபிரீஜர்' செய்யப்பட்ட நிலைகொள்ளும்! இந்தியாவில் 'இத்தனைக் குளிர்' என்பது நாம் காணாத ஒன்று. டெல்லி மற்றும் சுற்றுப் புறங்களில் இப்படியோர் குளிர் உண்டென கேள்விப்பட்டதுண்டு. கண்டதில்லை. வருடா வருடம் நம் தமிழகத்தில் நாம் எதிர்க்கொள்ளும் மார்கழி மாதத்தின் அதிகப்படியான குளிர் என்பது, சௌதி அரேபியா எதிர்கொள்ளும் குளிரில் நூற்றில் பத்து சதவிகிதம்தான்!
ஆட்டிப்படைக்கும் குளிருக்காக வேண்டி வருடத்தில் பல மாதங்கள் சுவிஸர்லாண்ட் தேடிப் பறந்துப் போகும் மேல்மட்டது அரபி ஷேக்குகளுக்கு, இந்தக் குளிரால் தன் சொந்த நாட்டை அவர்களுக்கு அநியாயத்திற்குப் பிடித்துப் போகும். நாட்டின் குளிரால்..., அரபி ஷேக்குகளிடம் குஷால் மேவும்! முதல் காரியமாக ஊருக்கு வெளியே, ஏதேனும் ஓர் திசைப்பிடித்து நாலாப் பக்கமும் விரிந்துக் கிடக்கும் பாலவனத்தின் பெருத்த வயிற்றுக்குள் குறைந்து குறைந்து ஐம்பது கிலோ மீட்டர் அளவிலாவது உட்புகுந்து போய் அங்கே பிரமாண்ட டெண்டை அடிப்பார்கள்.
அப்படி நிர்மாணிக்கப்படும் டெண்ட் சகல வசதிகள் கொண்டதாக இருக்கும். மணலில் சிக்குண்டுப் போகாது விரைந்து சென்றடைய 'ஃபோர்வீல் கியர்' கொண்ட கார்களையே எல்லோரும் உபயோகிப்பார்கள். அதுப் பாருங்கள், மணல் பிரதேசத்தில் கொஞ்சம் சிக்காது, அப்படியே மிதந்த நிலையில் போய் வியக்க வைப்பதாக இருக்கும்!
தண்ணீர் டாங்கர் லாரி முதலாய் உணவுப் பொருட்கள், பழ வகைறாக்கள், சேவகத்திற்கான ஆட்கள், எடுபுடிகள் உட்பட அங்கே குவிக்கப்படும். எல்லோருமே முழு நீள குளிர் காக்கும் வசதிக்கொண்ட நவீன தோலாடைகளை மேலாடைகளாக உபயோகிப்பார்கள்! கால்பாதம்வரை நீண்டிருக்கும் அந்த மேலாடையினை தரித்த ஒவ்வொருத்தவர்களும், அவர்களே அறியாது 'லெனின்' ஜாடை கொள்வார்கள். நிஜத்தில் அவர்கள் லெனினை அறிந்திருக்கக் கூடியவர்களும் அல்ல. அமெரிக்க நிழலில் சுகம் காண்பவர்கள். அவர்களை அமெரிக்காவின் மறைமுக அடிமைகள் என்றாலும் பெரிய தவறாகிவிடாது!
அவ்வப்போது ஷேக்கும் அவரது ராஜவிசுவாச நண்பர்களும் நகரத்திற்கு போய்வருபவர்களாக இருந்தாலும், குளிரின் மாதங்கள் முழுமையும் அவர்களின் இரவு பொழுது டெண்டில்தான் கழியும்.
டெண்ட்டிற்கு முன்புறம் பெரியபள்ளம். பள்ளத்தைச் சுற்றி நாலாப் பக்கமும் கம்புகள் ஊன்றப்பட்டு, அதன் மேல்பாகத்தை ஒருங்கே குவித்து கட்டி இருப்பார்கள். குவிக்கப்பட்ட கம்புகளின் மையத்தில் பிணைக்கப்பட்ட கவ்வையில், அறுப்பட்டு மேல் தோல் நீக்கப்பட்ட ஒட்டகக் குட்டியின் மேல்புறத்தில் எண்ணையும் அவர்களுக்கு விருப்பமான மசாலா கலவைகளும் பூசப்பட்டு, கவையில் மாட்டப்பட்ட நிலையில் அது தலைக்கீழாக தொங்கும்.
பள்ளம் பூராவும் கனமான மரத்துண்டுகளின் கனல் கனிந்து கொண்டிருக்கும். பள்ளத்தை சுற்றிய வட்டம் பூராவும் விரிக்கப்பட்ட பெட்சீட்டுகளில் திண்டுகள் போடப்பட்டிருக்கும். ஆங்காங்கே, ஹுக்கா புகைக்கான கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். ஷேக்கும் அவர்களது நண்பர்களுமாக அதனில் ஒய்யாரமாக சாய்ந்தப்படிக்கு அமர்ந்திருப்பார்கள். கனிந்து கொண்டிருக்கும் நெருப்பலையின் வீச்சு அவர்களை அனத்திக் கொண்டே இருக்கும். அது குளிருக்கானதோர் சமன்பாடு.
தீயில் கருகும் ஓட்டக்கறியின் கவிச்சு வாசனை அவர்களை சுகந்தப்படுத்திக் கொண்டிருருக்க, தொடர்ந்து, சேவர்களால் தரப்படும் கருப்பு டீயும், கஹுவா என்னும் கருப்புக் காப்பி டிக்காஷனும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும். கஹுவா என்பது காப்பிக்கொட்டையோடு சரிசமான ஏலக்காயும் சேர்த்து வறுத்து அரைத்தப் பொடியின் முதல் டிக்காஷன்! அவரவர்களின் எதிரே உள்ள ஹுக்காவைப் புகைத்தப்படிக்கு அவர்கள் மொய்மறந்து ஏதேதோ பேசிக் கொண்டிருப்பார்கள். அனேகமாய், ஈஜிப்ட் ஹோட்டல் அறைகளில் தனியே கண்டுக் கழித்த பில்லி நடன மாதுகளின் பின் அழகைப் பற்றியதாக இருக்கும்.
இப்படி தினைக்கும் அறுப்பட்டு தீய்த்து உண்ண தேர்ந்தெடுக்கப்படும் இளம் வயது ஒட்டகங்கள், இந்தப் பாலைவன உள்வெளிக்கு 'மஜ்டா' டிரக்கில் கொண்டுவருவதே வாடிக்கை. அப்படி ஒருதரம் வந்த ஒட்டகக்குட்டிகளில் ஒன்று, சீராய் இறக்கப்படும் போது, மிரண்டு துள்ளிப் பாய்ந்ததில் எக்குத்தப்பாய் கீழே விழுந்து அதன் முன்னங்கால்களில் ஒன்று முறிந்து ஊனமாகிவிட்டது. விசயம் அறிந்த மேன்மைக்குறிய அல் நவுவ்ராத் பின்அப்துல் ரஹ்மான் பின்சௌத் என்கிற அந்த ஷேக், மனம் கொள்ளா சஞ்சலம் கொள்ள, ஒட்டகத்திற்கு வைத்தியம் பார்க்க, அதற்குறிய டாக்டரை உடனடியாக வரவழைக்கிறார்! தொடர்ந்தும், அந்த ஒட்டகத்திற்கு ஷேக்கின் நேர்பார்வையிலேயே வைத்தியமும் நடந்தது!
ஒட்டகத்திற்கு கால்கட்டு போடும் போதும், மாற்றுகட்டு போடும் போதும், ஷேக்கே வைத்தியனுக்கு உதவியாளனாக ஒட்டகத்தை தட்டித் தடவிதந்து தன் மனிதாபிமானத்தின் விசாலத்தை வெளிப்படுத்தியப்படிக்கு இருப்பார்! இதனாலோ என்னவோ அந்த ஒட்டகக் குட்டிக்கு ஷேக்கை பிடித்துப் போய்விடுகிறது. அது பங்கிற்கு ஷேக்கை தன் மூக்கால் தொட்டு வருடி ஸ்நேக நேசத்தை வெளிப்படுத்தும்.
ஷேக்கிற்கு அந்த ஒட்டக் குட்டியை மிகவும் பிடித்து போய்விட, அதனை அறுத்து சுட்டு சாப்பிடுவதையும் மறந்து தன்னுடனேயே நகரத்திற்கும் கொண்டு செல்கிறார். அதற்கு ஏக வசதிகள் கொண்ட தங்குமிடத்தை ஏசி சகிதமாக ஏற்படுத்தி தந்து, நித்தமும் அதனை பார்ப்பதையும் அதனோடு நேரத்தை செலவழிப்பதையும் வழக்கமாக ஆக்கிக் கொள்கிறார். வெளிநாடுகளுக்கு போய் தங்கநேரும் காலங்களில் கூட, அந்த ஒட்டக் குட்டியை தனது பிரத்தியோக விமானத்திலேயே உடன் அழைத்து செல்பவராகவும், தான் தங்கும் அருகான்மையில் அதற்கு இடவசதிகளை அமைத்து தருபவராகவும் அறியவந்தேன்.
நிஜத்தில் அந்த ஒட்டக்குட்டிக்கு கால முறிவு ஏற்பட்டிருக்காதப் பட்சம், என்றைக்கோ அது அவர்களுக்கு உணவாகியிருக்கும். அதற்கு நேர்ந்த சிறியதோர் விபத்து அதன் தலைவியையே மாற்றிவிட்டது. தவிர, மேன்மைக்குறிய அல் நவுவ்ராத் பின்அப்துல் ரஹ்மான் பின்சௌதின் மனதில் வாழும் மனிதாபிமானத்தையும் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. எதிமறையான இந்த மனிதாபிமானத்தை நினைக்கும் தோறும் எனக்கு வியப்பைத் தருவதாகவே இருந்து வருகிறது!
பின்குறிப்பு:
1984-ல் இருந்து, 1991-வரை, நான் சௌதி ரியாத்தில் இருந்தேன். அங்கே, மன்னர் குடியிருப்புகளின் ஒண்ணரை கிலோ மீட்டர் அளவிலான பக்கம்தான் நான் தங்கி இருந்த குடியிருப்பு இருந்தது. மன்னர் வீடுகளில் எடுப்புடிகளாகப் பணிபுரியும் நம்மப் பக்கத்து தமிழர்கள், இந் நிகழ்வுக்கு நேரிடை சாட்சிகள். தினைக்கும் இந்தக் கூத்தை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருப்பேன். இவர்களின் அழைப்பின் பேரில் அந்த டெண்டிற்கு, இரண்டுக்கும் மேற்பட்ட முறை சென்றிருக்கிறேன். கால் ஊனமான அந்த ஒட்டகத்தையும் கண்டிருக்கிறேன்.
செளதி - இராக் போர் முடிந்த 1991 வாக்கில், உயிரோட்டமான இரண்டு கவிதைகளை தீர எழுதி பத்திரமாய் எடுத்துக் கொண்டு, தி கிரேட் கிங்டம் ஆப் சௌதியரேபியாவுக்கு 'மா சலாம்' சொல்லிவிட்டு, சந்தோஷமாக ஊர் வந்துவிட்டேன். அதன்பின், மேற்சொன்ன 'ஷேக்--ஒட்டக்குட்டி' சினேகிதத்தின் தொடர்சியை நான் அறியேன்.
*
டைரி குறிப்பு:
17.02.2018 - சனி
இது என் மலரும் நினைவுகள், இன்றைக்கு இதனை என் டைரி குறிப்பாக உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். நன்றி.
.
Taj Deen
No comments:
Post a Comment