பதவி உயர்வு.
முதல் பதவி உயர்வை எல்லோரும் பசுமையாக நினைவில் வைத்திருப்பார்கள். எனக்கும் அப்படித்தான்!
வேலையில் சேர்ந்து முதல் வருடத்திலேயே வேலைபார்க்கும் நிறுவனத்தின் முதல் கிளையின் மேலாளராக பதவி உயர்வு, மிகவும் மகிழ்வான தருணம்.
1980 - 81 ல் உகாண்டாவில் வாழ்ந்து தொழிலோ வேலையோ பார்த்துவந்த இந்தியர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில்தான் இருந்தது. உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவில் ஒருவருடம் வேலைப்பார்த்தாலும் ஊர் ஞாபகம் அதிகம் வாட்டியதில்லை, நாங்கள் ஏழுபேர் ஒரே ஊர்வாசிகள் ஒரே குடும்பமாக ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து ஒரே வீட்டில் வசித்து வந்தோம்.
பதவி உயர்வோடு பணிசெய்யும் ஊரும் மாறியது. ' மாசாக்கா ' எனும் அழகிய சிறுநகர். அப்போது அங்கு விளைந்த காப்பிக்கொட்டை ஏற்றுமதியில் வரும் அந்நியச்செலாவணியில்தான் உகாண்டாவில் பொருளாதாரமே ஓடிக்கொண்டிருந்தது.
பொதுவாகவே அக்காலத்தில் வியாபார நுணுக்கம் அதிகம் தெரியாத உகாண்டா மக்களில் மாசாக்கா மக்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள், அதிகம்பேரும் இசுலாமியர்களாக இருந்தனர், வியாபாரத்திலும் அவர்களே கோலோச்சிவந்தனர். இது ஈத் அமின் இந்தியர்களை 1972 ல் வெளியேற்றும் முன்னர் இங்கு ஒரு சில இந்தியர்கள் இருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் காப்பிடத்தோட்ட விவசாயிகளாகவும் பருத்தி ஜின்னரிகளை நடத்துபவர்களாகவுமே தொழில் செய்துவந்தனர். வியாபாரம் செய்தவர்கள் மிகவும் குறைவுதான். அதன் பிறகு முதல் இந்தியனாக மசக்காவில் வியாபாரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டவன் நானாகத்தான் இருக்குமென நினைக்கிறேன்.
ஊரைவிட்டு பிரிந்து வந்ததைவிட கம்பாலாவை விட்டு பிரிந்துசெல்வது மிகவும் வாட்டமாகத்தான் இருந்தது. என்ன செய்வது? ஒன்றை இழந்தாலே மற்றொன்று கிடைக்கும் என்பது மானுடர்க்கு வித்தியாகிப்போனதே!
தொடரலாம்.
ராஜா வாவுபிள்ளை
No comments:
Post a Comment