Tuesday, November 21, 2017

உகாண்டா நினைவுகள் ....! (மாசாக்கா) புது இடம் புது பாடம் .

புது இடம் புது பாடம் .
உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவில் ஒரு வருடம் வேலைபார்த்து கிடைத்த பதவி உயர்வோடு வந்த இடமாற்றம் விரும்பியோ விரும்பாமலோ புறப்பட்டு 120 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மாசாக்கா எனும் ஊருக்கு வந்து சேர்ந்தேன். அங்கு ஏற்கனவே இருந்து எங்களது நிறுவனத்தின் ஏஜெண்டாக வாணிபம் செய்துவந்த உள்ளூர் ஹாஜியிடம் ஒப்படைக்கப்பட்டேன். நாலுமாடி கட்டிடத்தில் தரத்தளத்தில் எங்கள் ஏஜென்ட்டின் கடையும் முதல் தளத்தில் அவரது வீடும் இரண்டாம் தளத்தில் அவரது பணியாட்களும் மூன்றாம் தளத்தில் எனக்கான வீடும் மேலும் நிலத்தடியில் அமைக்கப்பட்டிருந்த பொருட்கிடங்கின் மேலாளனாக நானும் இருந்தோம்.
கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல புது இடம். காண்பதெல்லாமே புதிராகவும் புதிதாகவும் இருந்தது.

கம்பாலாவில் இருந்த ஒரு வருடத்தில் லுகாண்டா மொழியை கொஞ்சம் கற்றுக்கொண்டதால் ஓரளவுக்கு தாக்குப்பிடிக்க முடிந்தது.
ஒரு நாளில் 24 மணிநேரம் இருந்தது அதில் வேலை இருந்ததோ மிகவும் குறைவு. எனது வேலைபோக மற்ற நேரத்தில் ஹாஜியின் கடையில் எனது இருப்பு. இருப்பை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள லுகாண்டா மொழியை வியாபாரத்தினூடே பழகினேன்.
என்வயதொத்த ஹாஜியின் பிள்ளைகளின் கல்லூரி பாடப் புத்தகங்களையும் அதிலும் முக்கியமாக ஆப்ரிக்கா மற்றும் உகாண்டாவில் சரித்திர புத்தகங்களை விரும்பி வாங்கி வாசித்தேன் மேலும் பல புத்தகங்களை அவர்களது கல்லூரி நூலகத்திலிருந்து கொண்டுவர பணித்து படித்தேன்.
இவ்வாறாக மாசாக்கா புது இடமும் புது பாடமுமாக இனிதே தொடங்கியது. அங்கிருந்த காலத்தில் பற்பல சுவாரசியமான நிகழ்வுகளும் சம்பவங்களும் எனக்கு பாடம் படித்து தந்தன. அவற்றை ஒவ்வொன்றாக அடுத்தடுத்த கட்டுரைகளில் காணலாம்.
தொடரலாம்.


ராஜா வாவுபிள்ளை
உகாண்டா_நினைவுகள் ....! (மசாக்கா) பதவி உயர்வு.

No comments: