Monday, November 13, 2017

நாளைக்கு இதைப் பற்றித்தான் எல்லோருடையப் பேச்சும் இருக்கும்

பூகம்பத்தை உணரவில்லை, பூகம்பத்தை உணர்ந்தவர்களின் வார்த்தைகளில் பூகம்பத்தை உணர்ந்தேன்.
உணவகத்தில் இரவு உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தம்பியிடமிருந்து அழைப்பு வந்தது, பேச்சில் பதட்டம்.
எங்கே இருக்கிறாய்?. வீட்டிற்கு வந்துவிட்டேன் என்றேன்.
அடுத்து பேசுமுன் மனதுக்குள் பல எண்ணங்கள் மனதைக் கலவரப்படுத்தியது.
வீட்டில் இருக்கிறாயா?, வெளியில் இருக்கிறாயா?.
என்ன விஷயம் என்றுக் கேட்டேன்.
நில நடுக்கம் வந்து நாங்களெல்லாம் கட்டிடத்திலிருந்து வெளியேறி மைதானத்தில் நிற்கிறோம்.
நீ உனரவில்லையா?. இல்லையென்று சொல்லிவிட்டு மனதில் தோன்றியக் கலவர எண்ணங்கள் கட்டுக்குள் வந்தது.

வீட்டையும் நாட்டையும் உறவுகளையும் துறந்து வாழ்பவர்கள் பதட்டமான சூழலை எதிர்க்கொள்ளும் நேரம் எத்தகைய வலிமிக்கது என்பதை இதைப்போன்ற சூழல்கள் உணர வைக்கின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே ஒரு சிறிய நில நடுக்கத்தை நான் உணர்ந்திருக்கிறேன். இன்றைய நில நடுக்கம் அதைவிடக் கொஞ்சம் அதிகமென்பதை சூழல் உணர்த்தியது.
இரவு உணவை உண்டு முடித்து வெளியேறும் போது காசாளர் வீட்டிற்கு உடனேப் போய்விடாதே, வெளியேக் கொஞ்சம் இருந்துவிட்டு அப்புறம் செல், நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னார்.
இறைவன் போதுமானவன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தேன். தெருவெங்கும் குடியிருப்புக்களின் கீழே நிறைய மனிதர்கள் தங்களுக்கும் பேசிக்கொண்டும், மொபைலில் மற்றவர்களிடம் விசாரித்துக் கொண்டும் இருந்தனர்.
நான் தங்கியிருக்கும் கட்டிடத்துக்கு அருகில் வந்தபோது இதுவரை பார்த்திராத மனிதர்கள், எல்லோரும் இங்கேதான் வசிக்கிறார்களா?. ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
வாங்க பாய், இப்பத்தான் வர்றீங்களா?. பக்கத்து அறை நண்பர் கேட்டார்.
நாங்கள் வீட்டில் இருந்தோம், சரியான நடுக்கம் பாய், பயந்துக்கொண்டு கதவைக் கூட சாத்தாமல் கீழே வந்துவிட்டோம்.
குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி உடைக் கூட மாற்றாமல் அப்படியே கீழே வந்துட்டாங்க பாய் , சிலபேர் அவஙகளை மொபைலில் வீடியோ எடுத்தாங்க பாய் என்று வருத்தப்பட்டார்.
நானும் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தேன். எல்லோரும் யாரோ ஒருவரோடு போனில் பேசிக் கொண்டும் மற்றப் பகுதிகளில் உள்ள நிலவரங்களை விசாரித்துக் கொண்டும் இருந்தனர்.
சிலர் வீட்டை விட்டு வெளியேறி இரவில் பூங்காவில் சென்று தங்கப் போய்விட்டனர் என்றும் அருகிலிருந்தவர் சொன்னார்.
இதற்கிடையில் இரவு இரண்டரை மணிக்கு மீண்டும் நில நடுக்கம் வரும் என்ற பொய்யானத் தகவலும் வாட்சப் குழுவில் பரவிக் கொண்டிருந்தது.
நாளைக்கு இதைப் பற்றித்தான் எல்லோருடையப் பேச்சும் இருக்கும் என்றெண்ணிக் கொண்டே வீட்டிற்கு வந்து
அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா என்று மனதில் சொல்லிக் கொண்டு உறங்கச் சென்றேன்.


Mohamed Salahudeen

No comments: