ஒரு நாள் மக்காவிலிருந்து பெண்ணொருவர் மதீனா வந்து சேர்ந்தார். நிறைய அலைச்சல், உளைச்சலுடன் கடினமான, தன்னந்தனியான பயணம். அவ்வளவு இன்னலுக்கும் அவருக்கு இருந்த ஒரே காரணம் – அதற்குமேல் தடுத்து வைக்க இயலாமல் அவர் வெளிப்படுத்த விரும்பிய உண்மை.
நீண்ட காலத்திற்கு முன்னரே அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருந்தார். திருமணம் ஆகாமல் குடும்பத்தினர் பாதுகாவலில் இருந்துவந்த அவரால் தம்மிச்சையாக ஏதும் செய்ய இயலாத நிலை. ‘எத்தனை காலம்தான் பொறுத்திருப்பது; பொங்கியெழு’ என்று ஒரு கட்டத்தில் தோன்றிவிட்டது. தடைகளை எல்லாம் கட்டுடைத்து நபியவர்களிடம் சென்றுவிட வேண்டும்; பகிரங்கமான முஸ்லிமாய் முஸ்லிமுக்குரிய அனைத்து உரிமைகளுடனும் வாழவேண்டும் என்று திட்டவட்டமான முடிவு மனதில் ஏற்பட்டுவிட, கிளம்பி மதீனாவுக்கு வந்து சேர்ந்து விட்டார்.
அந்தப் பெண்ணுக்கு இரு சகோதரர்கள். தங்களின் சகோதரி மதீனாவுக்குச் சென்றுவிட்டார்; முஹம்மதிடம் சென்றுவிட்டார் என்று தெரிந்ததும் ‘மெனக்கெட்டு நாம் வடிவமைத்த ஹுதைபிய்யா உடன்படிக்கையை மதிக்காமல் கெட்டுப்போய்விட்டது அவளது புத்தி; அதிலிருந்த அம்சங்கள் அவளுக்குப் புரியவில்லை போலும்; பெண் புத்தி பின்னே எப்படி இருக்கும்?’ என்று பொங்கி எழுந்தார்கள். உடன்படிக்கையில் இருந்த ஓர் அம்சம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இப்படியெல்லாம் நடக்கலாம் என்று யூகித்து, குரைஷிகள் அடாவடியாய்ச் செருகியிருந்தார்கள். அதைக்கொண்டு நம் தங்கையை முஸ்லிம்களே பத்திரமாக நம் கையில் ஒப்படைக்க வைப்போம் என்று பின்னாலேயே கிளம்பி அடுத்த ஒரு சில நாள்களில் அவர்களும் மதீனா வந்து சேர்ந்தார்கள்.
விஷயம் நபியவர்களிடம் வந்தது. “ஓ முஹம்மதே! உமது கடமையை நிறைவேற்றுவீராக!” என்றார்கள். என்ன ஏது என்று விசாரித்தால், ‘நினைவு இருக்கிறதா ஹுதைபிய்யா உடன்படிக்கை’ என்று அகங்காரப் பேச்சு.
அப்பொழுது இடைமறித்தார் அந்தப் பெண் - உம்மு குல்தூம் பின்த் உக்பா, ரலியல்லாஹு அன்ஹா.
“அல்லாஹ்வின் தூதரே! அவர்களது முறையீட்டில் குறை உள்ளது. விதி எதுவும் மீறப்படவில்லை; தாங்கள் என்னைத் திருப்பி அனுப்பவும் தேவையில்லை.”
புருவங்கள் உயர அனைவரும் வியப்புடன் நோக்கினர். உடன்படிக்கையில் கண்டிருந்த தனக்குப் பாதுகாப்பான அந்த முடிச்சைத் தங்கை அவிழ்த்துப்போட, அதிர்ந்து போனார்கள் அவருடைய சகோதரர்கள்!
#தோழியர்
DarulIslamfamily Nooruddin
No comments:
Post a Comment