நெய் மணக்கும் அல்வாவும், அதை பொய் கலந்து தரும் பில்லாக்களும் வாழ்கவே !
(ஒரு ஹாஸ்ய உணர்வில் எழுதப்பட்டதுதான், நிச்சயம் மன இறுக்கத்தின் உணர்வல்ல)
என் மகளின் திருமணம் இது, கட்டாயம் நீங்கள் கொஞ்சம் முன்னமையே வந்து நின்று காரியங்களை சிறப்பித்து தர வேண்டும் என்று அருமை நண்பர் (மலையாளத்தில் ஆத்மார்த்தமான ஒரு சுஹர்த்து-ன்னு பறயாம்) அப்படி மாய்ந்து மாய்ந்து சொல்கிறாரே என்று, 12.30-க்கு நிக்காஹ் நடக்க இருப்பதை தெரிந்திருந்தும், இருக்கும் முக்கிய வேலைகளை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுக்கி வைத்து விட்டு, காலை 6-மணிக்கே கிளம்பி மண்டபம் போனால், வாசலில் ஏறும் போதே, அழைத்த நண்பரின் தலை, உள்பக்க ஹாலில் ஒரு பெரிய தூணுக்கு பக்கத்தில் தெரிந்ததைப் பார்த்து, மகிழ்ந்து உற்சாகத்துடன் கையசைத்து காட்டினால், வினாடிகளில் என் வருகையை தெரிந்து கொண்டவர், அப்படி கவனிக்கவில்லை என்கிற தோரணை காட்ட, அங்கே பக்கத்தில் நிற்பவரோடு பெரிய சச்சரவில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவரைப் போல் என் கண்ணுக்கு காட்சி தந்து விட்டு, தூணுக்கு பின்னால் ஒரே பாய்ச்சலாகப் போய் நின்று கொண்டு, சண்டைப் பிடித்த அதே நபரிடமே, வாசலில் வந்த ஆள், நிற்கிறானா, போய் விட்டானா, என்ன செய்கிறான், உள்ளேயா வருகிறான் என்று வாயை சிவாஜி கணேசன், பழைய படங்களில், பாட்டுக்கு வாய் அசைக்கும் ரேஞ்சுக்கு, கீழ் தாடையை நல்ல விரித்து; ஆனால் சிறிய சப்தத்தில் கேட்பதை, கல்யாண மண்டபத்தில், அந்த தூணுக்கு பக்கத்திலேயே மாட்டி வைத்திருக்கும் நிலைக் கண்ணாடியில் நான் தெளிவாக பார்த்துக் கொள்ள முடிந்தது !