Monday, November 10, 2014

கனவில் வந்த அப்பா / தாஜ்

அப்பாவிடம் பயம் அதிகம்
உண்மை மாதிரி பொய்யும்
பொய் மாதிரி உண்மையும்
பேச்சு வழக்கில் பழக்கமாச்சு.
சத்தியத்தைப் போதித்தவருக்கு
பிசிரில்லாக் குரல்
என்னைவிட நேர்த்தி.

நலம் விசாரித்தப்படியே வந்தவர்
அம்மாவின் அறையில் தொங்கிய
தன் புகைப் படத்தில் ஆவலானார்.
ஹிட்லர் மீசை உண்டென்றும்,
அடர்ந்த தாடியோடு
வெள்ளையாய் மிளிர்ந்த
அந்த சாந்த சொரூபம்தான்
இன்றைக்கில்லை யென்க
அதைதான் கொண்டுச்
சென்றுவிட்டதாக
நினைவு கூர்ந்தார்.
நீண்ட நிசப்தத்திலிருந்து விலகி
காத்து தந்த
தேனடை பற்றி நகர்ந்தார்.
பந்துக்களின் நா விளையாட்டுக்கு
வழிவிட்டு நின்றதோடு
வியந்த வியப்பையும் கோடிட்டிட
தீ மிதிக்கு முந்தும் வழக்கத்தை
எப்பவும் நான்
விதியாக்கிக்கொண்டதில் தழதழத்து,
புத்தகங்களுடன் விரைய
மலையேறிப் போவாயே என்றார்.
காலின் விபத்தைக் காட்டாது
கழிப்பறையே
போதுமென்றானதைச் சொல்லவும்
சிகரங்களில் என்னை
தேடியலைந்ததில்
ஆசுவாசமுற்றவராக
மீண்டும் நலம் கேட்டார்.

உங்களின் சொல்லே
கொடையாய் நின்று
காக்குமென்ற நாழியில்
ஈனக்குரலில் நான்
செத்துப்போனவன் என்றார்.

நெஞ்சைவிட்டு அகலா தந்தையே
உங்கள் நினைவு பேணப்படுகிறது
பசுமையின் விஸ்தீரணம்
காலாதிக் காலமும் யெட்ட
என் குழந்தைகளின் ஈரத்தில்
வித்திட்டுக் காக்கனுமென
பாதங்களில் கவிழவும்
கண்கள் சிவக்க அரற்றினார்
பாவி மகனே
இப்படியொரு தூக்கமா
சாவதற்கு முன்பே
நான் செத்துவிட்டேனே.


ஆக்கம் :தாஜ் தீன் Taj Deen

No comments: