மஜ்லிஸ் இ இதிஹாதுல் முஸ்லிமீன் என்பது கட்சியின் முழு பெயர். ஹைதராபாதில் மட்டும் பிரபலமாக இருந்த கட்சி. இதன் தலைவர் அசாதுதீன் ஒவைசி. ஆவேசமான பேச்சாளர். கூட்டத்தினரின் உணர்வுகளை எளிதில் தூண்டி விடும் ஆற்றல் பெற்றவர்.
இன்று டைம்ஸ் நாளிதழில் வெளியான அவரது பேட்டியை வாசித்தபோது ஆள் ரொம்பதான் மாறிவிட்டார் என தோன்றியது.
• உங்கள் கட்சி போட்டியிட்டதால் காங்கிரசுக்கும் பிஜேபிக்கும்தான் லாபம் என்று மகாராஷ்டிர கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. என்ன பதில்?
+ ஆதாரமற்ற குற்றச்சாட்டு.மகாராஷ்டிரா மட்டுமல்ல நாடு முழுவதும் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தென்னிந்தியா டெல்லிக்கு அனுப்பும் 150 எம்.பி.க்களில் நான் ஒருவன்தான் முஸ்லிம்.
முஸ்லிம்கள் அதிகாரத்தில் இருந்து ஒதுக்கப்படுகிறார்கள். மதச்சார்பற்ற கட்சிகள் என சொல்லிக் கொள்பவர்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் செய்யத் தவறியதற்கு என்னை குறை சொல்வானேன்.
• உங்கள் பிரசாரம் இந்துக்கள் மீது வெறுப்பை தூண்டுவதாகத்தானே இருக்கிறது?
+ என்ன வேண்டுமானாலும் குற்றச்சாட்டு சொல்லுங்கள். ஆனால் ஆதாரம் வேண்டாமா? மகாராஷ்டிர தேர்தல் ஆணையம் எனக்கு ஆரம்பத்திலேயே நோட்டீஸ் அனுப்பியது. மத கலவரம் ஏற்படும் விதமான எந்த பேச்சும் பேசக்கூடாது என்று. அதிலிருந்து எப்போதும் என்னை பல கேமராக்கள் பின் தொடர்ந்தன. என் பேச்சு மொத்தமும் விடியோ எடுக்கப்பட்டது. தப்பாக என்ன பேசினேன், காட்டுங்களேன், பார்ப்போம்.
• பிஜேபி, ஆர்எஸ்எஸ், மோடியை அட்டாக் செய்வதுதானே உங்கள் பிரசார உத்தி?
+ ஆமாம், அதில் என்ன தப்பு? பிரதமரை விமர்சித்தால் பாவமா? யாரை வேண்டுமானாலும் விமர்சிக்க நமக்கு உரிமை இருக்கிறதுதானே? என் தாக்குதல் எல்லாம் கொள்கை ரீதியானது.
பிஜேபி, ஆர்எஸ்எஸ் வெப்சைட்களை பாருங்கள். முஸ்லிம்களை பற்றி என்ன மாதிரி நினைக்கிறார்கள் என்பதை வாசியுங்கள். முஸ்லிம்கள் இந்த நாட்டுக்காக உயிரை கொடுப்பவர்கள் என்று மோடி பேட்டி கொடுக்கிறார். ஆனால் அவரது கட்சிக்காரர்கள் எங்கள் மதரசாக்கள் தீவிரவாதத்தின் உற்பத்திக் கூடங்கள் என்கிறார்கள். நாங்கள் லவ் ஜிஹாத் நடத்துவதாக புரளி கிளப்புகின்றனர்.
மத கலவரத்தை தடுக்க தவறியதாக கைதான அதிகாரிகள் விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பும் கலவரத்தை தூண்டிவிட்டு ஆதாயம் பார்ப்பதை ஒரு செயல் திட்டமாகவே பிஜேபி பின்பற்றுகிறது.
இந்த இரட்டை வேடம் முஸ்லிம்களை மட்டும் பாதிக்கவில்லை. நேர்மையாக சிந்திக்கும் ஒவ்வொரு இந்தியனையும் பாதிக்கிறது. இந்த நாடகத்தை விமர்சிக்க எங்களுக்கு உரிமை உண்டு.
• டெல்லி இமாம் புகாரியையும் விமர்சிக்கிறீர்களே?
+ புகாரி ஒரு இமாமே இல்லை. அவருக்கு ஷாஹி என்ற பட்டம் வேறு. மகனுக்கு மகுடம் சூட்டுகிறாராம். ஜாமா மசூதி என்ன அவரது தாத்தா சம்பாதித்த சொத்தா? அந்த ஆள் முஸ்லிம்களின் பிரதிநிதி அல்ல. மத்தியில் ஆளும் கட்சிக்கு அவ்வப்போது தன் குரலை அடகு வைக்கும் ஆசாமி. குஜராத் கலவரம் நடந்த இரண்டாவது வருடம் பிஜேபி கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள் என்று முஸ்லிம்களுக்கு கட்டளை பிறப்பித்தவரை இமாம் என்று சொல்கிறீர்களாக்கும்? அவரையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
• இன்றுள்ள சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கான ஒரு கட்சி தொடங்குவது புத்திசாலித்தனமா?
+ என்னை ஸ்டீரியோடைப் செய்யாதீர்கள். முஸ்லிம்களுக்காக மட்டும் என்று நான் கட்சி நடத்தவில்லை. இந்த தேர்தலில் 24 வேட்பாளர்களை நிறுத்தினேன். அதில் 5 பேர் முஸ்லிம்கள் அல்ல. யாராவது இதைப்பற்றி எழுதினீர்களா? தலித், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என எல்லா வகையான ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சேர்த்துதான் என் கட்சி குரல் கொடுக்கிறது.
No comments:
Post a Comment