1994 ஆம் ஆண்டு, பிழைப்புக்காக சொந்த நாட்டை விட்டு அயல் நாடான அரபு தேசத்துக்கு வந்த காலம்.
அந்த காலக்கட்டத்தில் தொலைத் தொடர்புகள் அவ்வளவாக இந்த நாட்டிலும் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.
கடிதங்கள் மூலமே குடும்பத்தார்களோடு தொடர்பில் இருந்த காலமது.
தொலைப்பேசியில் பேசவேண்டுமென்றால் தொலைப்பேசிக் கூடங்களுக்கு சென்றுதான் பேசமுடியும். ஒரு நிமிடத்துக்கு 600 பில்ஸ்.
அது என் போன்றோருக்கு பெருந்தொகை. தேவையான தொகைக்கு கார்டுகள் வாங்கிக் கொள்ளவேண்டும்.
சரி, பணம் போனாலும் போகட்டும் குடும்பத்தாரோடு பேசவேண்டும் என எண்ணி அங்கு சென்றாலும் மிக நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். பல நாட்டு மனிதர்கள் பலவித உணர்வுகளோடு அங்கே நின்றுக்கொண்டிருப்பார்கள்.
சில நேரங்களில் இணைப்பு கிடைக்காது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தேப் பேச வேண்டியிருக்கும், இதுபோன்ற நேரங்களில் நமக்கு பின்னால் இருபவர்களின் மன நிலையை எழுத்தில் வடிக்க முடியாது.
மூன்று முறைக்குமேல் இணைப்பு கிடைக்கவில்லையெனில் மீண்டும் நாம் வரிசையில் வந்து நிற்க வேண்டும்.
இன்று நிலைமை அப்படியே மாறிவிட்டது. இலவசமாகவே குடும்பத்தாரோடு பேசும் காலம் வந்துவிட்டது.
என் முதல் செல்போன் என் தங்கை எனக்காக பரிசளித்தது Ericcson brand செல்போன்.சிங்கப்பூரில் இருந்து அனுப்பி இருந்தார்.
செல்போன் கிடைத்தாலும் சிம் கார்டு வாங்குவது அத்தனை எளிதாக இல்லை அன்று, அதற்கும் பெருந்தொகை கட்டவேண்டும.
ஒரு வழியாக அதுவும் கிடைத்தவுடன் நினைத்த நேரத்தில் பேசும் வாய்ப்பு கிடைத்தது, நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய தேவை இல்லாதுப்போனது. ஆனாலும் ஊருக்கு அளவோடு பேசவேண்டிய சூழலே இருந்தது காரணம் கட்டணம் அப்படி.
அந்தக் காலக்கட்டங்களில் செல்போனை சார்ஜ் போட்டால் ஒரு வாரத்துக்கு சார்ஜ் நிக்கும். பேசுவது மட்டுந்தான் அதுவும் அளவோடு இருந்தது. செல்போன் இருந்தால் அது ஒரு சோஷியல் ஸ்டேட்டஸ் ஆக இருந்தக் காலம்.
அதன்பிறகு பேச்சோடு குறுஞ்செய்தியும் இணைந்தது.
படிப்படியாக இன்று ஸ்மார்ட் போன் வரைக்கும் வளர்ந்தாச்சு.
இமெயில், வாட்ஸ் அப், பேஸ்புக் இப்படி எல்லாமும் ஸ்மார்ட்போனின் வழியாகவே வாழ ஆரம்பிச்சாச்சு.
குடும்பம், நட்பு, வியாபாரத் தொடர்புகள் எல்லாம் இந்த கையடக்க செல்போன் வழியாகவே நடக்க ஆரம்பிச்சிடுச்சு.
இப்ப காலையில் சார்ஜ் போட்டால் மதியம் திரும்பவும் சார்ஜ் செய்யவேண்டிய நிலை.
சமீபமாக செல்போனோடு பவர்பேங்கையும் சேர்த்து சுமக்கிற காலத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கையில் சுமைகள் கூடிக்கொண்டே இருக்கின்றன.
Mohamed Salahudeen
No comments:
Post a Comment