Showing posts with label மனம். Show all posts
Showing posts with label மனம். Show all posts

Tuesday, November 18, 2014

மனம் - இப்புவியை வெல்லும்....! மனம் - மாண்பு பெறும்....!


ஊருக்குப் புறப்படும் முன்னரே
ஊர் போய் சேர்ந்தது # மனம்

மனப் பயணங்கள்.

இருந்த இடத்திலிருந்தே
பல்லாயிரம் மைல்கள் பயணித்து
மனச் சுமை இறக்க எத்தனிக்கும்
அமைதி காண கனாப் பயணம்.

மனம் - மாண்பு பெறும்....!
காயப் படுத்தும் வார்த்தைகளால்
மனம் - ரணகளப் படும்
அடங்காமல் துள்ளித் திரியும்
மனம் - பட்டுத் தெளியும்

ஆணவம் கொண்டு அலையும்
மனம் - ஆபத்தை அரவணைக்கும்
உண்மை அன்புக்காக ஏங்கும்
மனம் - அதற்கே அடிமையாகும்

துக்கத்தை உணர்ந்து அழும்
மனம் - ஆறுதல் தேடும்
செய்ததவறுக்கு மன்னிப்பு கேட்கும்
மனம் - மாண்பு பெறும்.
******************

Wednesday, August 13, 2014

எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாதவனாய்..

 
 
ஓடியே தேய்கிறேன்
உன்னை தேடி
ஓயாமல் உழைக்கிறேன்
உன்னை சேர்க்க
உறங்காமல் விழிக்கிறேன்
உன்னை காக்க
உருண்டோடி விடுகிறாய்
சக்கரம் போல.

Friday, January 24, 2014

ஏற்றுக் கொள்வதில் இடமில்லை!

சில நேரங்களில் கொடூர மனம்
அது கொடுப்பது இதமான சொல்
அதை ஏற்றுக் கொள்வதில் இடமில்லை

சில நேரங்களில் நல்ல நோக்கம்
அது சொல்வது கடின சொற்கள்
அதன் பயன்  பெறுவதில் நிறைவு கிடைக்கிறது

விளையாட்டாக உதிர்ந்த வார்த்தைகள்
விளையாட்டில் கட்டிய மணல் வீடுகள் போல் கலைந்தன
வேதனையால் கொட்டிய சொற்கள்
விசம்போல் குருதியில் சேர்ந்தன

Saturday, January 4, 2014

மனமென்னும் புத்தகத்தைப் பார்க்கையிலே..


மனமென்னும் புத்தகத்தில்
.....மலிந்துள்ள பக்கமதை
தினம்நாமும் பார்க்கையிலே
...திருந்தத்தான் வைத்திடுமே!


மருவில்லா எண்ணமது
......மனத்தின்பால் உள்ளிருக்க
உருவில்லா வண்ணவொளி
.....உருவாகும் பக்கமன்றோ?

Friday, December 20, 2013

கடல் கண்டேன்


கடல் கண்டேன்
அலைபோல் ஆர்ப்பரிக்கும்
மனம் கொண்டேன்

கடல் கண்டேன்
கடல் ஆழம் போல்
சிந்தனை கொண்டேன்

கடல் கண்டேன்
வருவதை உள்வாங்கும்
திறன் கொண்டேன்

Friday, December 13, 2013

மனநிறைவு

கிடைத்த பொருளில் நிறைவு குன்றிவிடுகிறது
கிடைக்காத பொருளில் ஆர்வம் அதிகமாகிறது

கட்டையான மனைவியை பெற்றவன் உயரமான பெண்ணை நாடுவான்

உயரமான மனைவியை பெற்றவன் கட்டையான பெண்ணை நாடுவான் (இது பொதுப்படையான கருத்து அல்ல உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை )

கருப்பு சிகப்பை நாடுவதும் சிகப்பு கருப்பை நாடுவதும் இயல்பு
மாற்றம் மகிழ்வை தரலாம் அது உய்ர்வைதராமலும் போகலாம் (உதாரனத்திற்க்கு தந்தவை உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை )

Wednesday, November 6, 2013

தெரிந்தும் தெரியாதவனாய் !

எல்லாம் தெரியும் என்பார்
சாட்சி சொல்ல வர மாட்டார்

எல்லாம் தெரியாது என்பார்
சாட்சி சொல்ல வருவார்

தெரியாமல் இருக்க எப்படி சாட்சி சொல்வீர்
நிகழ்வு நடந்த இடத்தில் இருந்தேன்
அழைத்தால் எல்லாம் தெரியாது என்பேன்

Monday, November 4, 2013

முக்காலமும் அறியும் திறன் ..

எக்காலத்திலும் என்னோடு இருப்பேன் என்றாய்
முக்காலமும் அறியும் திறன் பெற்றாயோ!

என்னோடு போராடும் திறன் பெற்றாய்
போர் செய்ய போர்தளம் புறப்பட்டால்
போராட்ட மனம் கொண்டு தடை செய்யும் மனமேன்
போர் களத்திலும் உடனிருந்து போர் செய்ய விருப்பமோ!

வரும் விருந்தினரை கவணித்து
காலம் கடத்தாமல் அனுப்பி வைக்கின்றாய்
காலம் கடந்து நான் வந்தால்
கடுஞ் சினம் கொண்டு அகன்றுச் செல்கின்றாய்
எக்காலமும் என்னுடன் இருப்பேன் என்று சொன்னதனை மறந்ததேன்!

Friday, December 14, 2012

இரு நிலைகளிலும் சமநிலை வேண்டும்

துன்பம் தாக்க துவள்வதும்
மகிழ்ச்சி வர துள்ளுவதும்
இறை நேசர்களின் இயல்பாகாது
இரு நிலைகளிலும் சமநிலை வேண்டும்

இறைவன் மீது வைத்திருக்கு நேசம் நிபந்தனையற்றது
அர்ப்பணிப்பே நிபந்தனையற்ற விசுவாசமாகும்
ஏற்றத்தாழ்வு நிலை, சூழ்நிலை இவைகளை வைத்து நம்பிக்கை கொள்வதல்ல மார்க்கம்
ஆர்வம், உற்சாகம்,உறுதி மற்றும் நம்பிக்கை இதன் அடிப்படையில்  தொடர்வதுதான் மார்க்கம்
துன்பங்களினால் வரும் துயரங்கள் நம் மன உறுதியை மாற்ற முடியாத நிலையை தருவதே மார்க்கத்தை பின்பற்றியோர் வழி
துன்பம் வந்தால் விதியென்றும் வெற்றி தரும் செய்திகள் கிடைக்க தம் திறமையால் வந்தது என்றும் சொல்வார்கள்
துன்பம் வரும்போது இறைவனை நாடுவதும் மகிழ்வான நிகழ்வுகள் கிட்ட இறைவனை மறப்பதும் மார்க்கத்தின் மீது, இறைவன் மேல் நம்பிக்கை கொண்டோர் செயலாகாது

 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். - குர் ஆன் 2:156.

Friday, April 29, 2011

மனம் மகிழுங்கள் - 46 : அறியாத மனசு - மகிழ்வே பரிசு!

மனம் மகிழுங்கள்!
46 - அறியாத மனசு - மகிழ்வே பரிசு!

- நூருத்தீன்
'மனம் மகிழ வேண்டும் என்று கடந்த நாற்பத்து சொச்சம் வாரங்களாய் என்னென்னவோ படித்து விட்டோம்; உரையாடிக் கொண்டோம். இறுதியில் மனம் என்றால் என்ன; எப்படியிருக்கும் என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. அதற்கு ரத்தம், சதை, தோல் உண்டா; அதன் உணர்வுகளுக்கு நிறம் உண்டா என்றெல்லாம் யோசித்தால், இல்லை என்று சொல்வதா; தெரியாது என்பதா?


·         நாம் மனதால் நினைப்பதை எப்படிக் கவர்ந்து இழுக்கிறோம்?

·         நாம் பயப்படுவது எப்படி நம்மை வந்தடைகிறது?

·         மனம், ஆழ்மனம் என்பதையெல்லாம் எங்கு காண்பது?

·         என் மனம் உற்சாகமாயிருக்கிறது; எனது உடல் ஆரோக்கியமாய் இருக்கிறது என்று நம்பும்போது நம்மிடம் ஏற்படும் மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன? அதனுடைய பலனை எப்படி விவரிப்பது?

·         நம்முடைய சிந்தனைகள் எப்படி நம்முடைய வாழக்கையை அமைக்க உதவுகின்றன; அல்லது மாற்றி அமைக்கின்றன?

·         CTScan-ஆல் செய்ய இல்லாவிட்டால் போகட்டும். நமது சிந்தனைகளை ஐஃபோனாவது படம்பிடித்துக் காண்பிக்குமா?

இப்படி விடாமல் சுற்றிவளைத்து எப்படிக் கேள்வி கேட்டாலும் தர்க்க ரீதியாய்ப் பார்க்கப் போனால் அதற்கு விளக்கங்கள் குறைவு; அல்லது இல்லை.

ஒரு விஷயத்தை உணர்வதும் அது எப்படிச் செயல்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்வதும் இரு வேறு விஷயங்கள். மனமும் அதன் உணர்வுகளும் எப்படிச் செயல்படுகின்றன என்பது நமக்குத் தெரியாது! அறிவியல் அதைத் தெளிவுபடுத்தவில்லை. சொல்லப்போனால் அறிவியல் எதையுமே தெளிவுபடுத்தாது. அதன் வேலையெல்லாம் ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்துச் சொல்லவேண்டும்; அவ்வளவுதான்!

உள்ளுணர்வு என்கிறார்கள்; மனதிற்குக் காந்தசக்தி உண்டு, ஈர்ப்பு விசை இருக்கிறது என்கிறார்கள்.. இதையெல்லாம் ஏதோ ஒருவிதமாய்ப் பொத்தாம் பொதுவாய் உணர்ந்து கொள்கிறோம்; மண்டையையும் ஆட்டிக் கொள்கிறோமே தவிர அவற்றையெல்லாம் எப்படிப் புரிந்து கொள்வது?

Saturday, November 27, 2010

மனம் மகிழுங்கள்! - 24 : நன்னம்பிக்கை

மனம் மகிழுங்கள்!
24 - நன்னம்பிக்கை
- நூருத்தீன்
யானையின் பலம் எதிலே?
தும்பிக்கையிலே!
மனிதனோட பலம் எதிலே?
நம்பிக்கையிலே!

- என்று தமிழ்க் கவிஞரொருவர் எழுதியிருந்தார்.

நம்பிக்கை!

அது நம் ஒவ்வொருவருக்கும் உண்டு; எக்கச்சக்கமாய் உண்டு. மறுப்பவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையோ அல்லது அதற்குள்ளோ தங்களது விரல் நகங்களில் தீட்டப்படும் கறுப்பு மையை உற்றுப் பார்த்துக் கொள்ளலாம். என்றாவது, எப்படியாவது, யாராவது ஓர் ஆட்சியாளர் நீதி, நேர்மையுடன் நம்மை ஆளத்தான் போகிறார் என்று நம்பவில்லை?


தவிர, நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை உண்டு. ஒவ்வொருமுறை ஏதோ காரணம் அமைந்திருந்தாலும் “இந்த முறை கணவன் தன்னை எப்படியும் முதல்முறையாக ப்ஃளைட்டில் ஏற்றி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப் போகிறான்,” என்று ஒரு நடுத்தரவர்க்க மனைவிக்கு நம்பிக்கை. “வரதட்சணையா? அதென்ன கற்கால வழக்கம்? பெண்ணை மட்டும் தாருங்கள்” என்று ஒரு ராஜகுமாரன் குதிரையிலோ, குறைந்தபட்சம் ஓர் ஆட்டோவிலோ வந்து நிற்கப் போகிறான், என்று பெண்ணைப் பெற்றவருக்கு நம்பிக்கை.

எதிர்மறையாய் வேறொரு வித நம்பிக்கையும் உண்டு.

மூட நம்பிக்கை!

தேர்விற்காக விடியவிடியப் படித்து, மாய்ந்து மாய்ந்து தயாராகி, தேர்வுத் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முழுகி, கடைசியில் கப்போர்டிலுள்ள பச்சைக் கலர் பேனாவைக் கண்ணில் ஒற்றி எடுத்துக் கொண்டு “தேர்வை இந்தப் பேனாவில் எழுதினால் நிச்சயம் நான் பாஸ்,” என்று சின்னப்ப தாஸுக்கு ஒரு நம்பிக்கை.

தேடித்தேடி விண்ணப்பித்து, ஆளைப்பிடித்து, கழுதைக் காலைப்பிடித்து ஒருவழியாய் அந்த மல்டிநேஷனல் கம்பெனியில் நேர்முகத் தேர்விற்கு அழைப்பிதழ் வர, படு டென்ஷனுடன் கிளம்பும் மகனிடம், “அந்த நீலநிறக் கர்சீப்பை மறக்காமல் பேண்டிற்குள் வைத்துக்கொள். உனக்கு நீலம்தான் ராசியான கலர்,” என்று மகனுக்கு அறிவுறுத்தும் அம்மாவிற்கு ஒரு நம்பிக்கை.

பூனை குறுக்கே ஓடினால், “ஆஹா! சகுனம் சரியில்லையே!”

கிளம்பும்போது “எங்கே போகிறீர்கள்?” என்று யாராவது கேட்டுவிட்டால், “போகும் காரியம் உருப்பட்டாற் போலத்தான்.”

காக்கை கத்தினால், "விருந்தாளிகள் வரப்போகிறார்கள் பார்" என்று நினைக்க, விருந்தாளிகள் வந்து சேருவார்கள். அடுத்த முறை ஊரிலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்லும்முன் மெயில், போன், எஸ்.எம்.எஸ்., என்று எதுவும் முயலாமல் நேரடியாய்ச் சென்று இறங்கி, திகைத்து நிற்பவரிடம் “என்ன காக்கை கத்தவில்லையா?” என்று கேட்டுப் பார்க்க வேண்டும்.

எது எப்படியோ, இப்படியான மூடநம்பிக்கைப் பட்டியல் நூறு பக்க நோட்டு அளவிற்கு நீளம்!

மனவியலாளர்கள் இதை மாற்றி வேறுவிதமாகச் சொல்கிறார்கள். உங்கள் மனம் எதை நினைக்கிறதோ – நல்லதோ கெட்டதோ - அதை அடைந்துவிடும் தன்மை கொண்டது!

“எனக்கு ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் தலைவலி வரும்” என்று நினைத்தால் அது உங்களைத் தவறாமல் வந்தடையும். “கூடுதலாய்க் கொஞ்சம் பணம் கிடைத்தாலும் அது எனக்குத் தங்காது,” என்று நினைப்பவர்களுக்குப் பணம் ஏதும் உபரியாய்க் கிடைத்தாலே அது உடனே செலவாகிப் பர்ஸ் காலியாவது நிச்சயம் என்று தலையில் அடித்து “காட் ப்ராமிஸ்பா,” என்கிறார்கள்.

அமெரிக்காவில் கார்ல் சிமன்டண் (Dr. O. Carl Simonton) என்றொரு டாக்டர் இருந்தார். புற்றுநோய் மருத்துவர். தம் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனித்தார். ஒரே அளவிலான கதிர்வீச்சு சிகிச்சை பெறும் நோயாளிகள் மத்தியில் இரு விதமான விளைவுகள் தென்பட்டன. “ஏன்?” என்று அவருக்குள் கேள்வி எழுந்து, அதை நுணுகி ஆராய்ந்தவர் அந்த விஷயத்தைக் கண்டுபிடித்தார். Positive attitude எனப்படும் ஆக்கபூர்வச் சிந்தனையுள்ளவர்களுக்கு மனம் சோர்வடைந்தவர்களைவிடக் குறைவான பக்க விளைவுகளே இருந்தன. “ஆஹா! மனதிற்கும் உடல்நலனிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது,” என்றவர், புற்றுநோயின் முற்றிய நிலையில் இருந்தவர்களுக்குக் கூட மருத்துவத்துடன் சேர்த்து மனப் பயிற்சி அளிக்கும்போது அவர்களது மரணத்தைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் அவர்களது சொச்ச வாழ்நாளுக்கு உற்சாகத்தையும் மனக்கட்டுப்பாட்டுத் தரத்தையும் உயர்த்த முடியும் என்று ஆராய்ந்து நிரூபித்தார்.

தமது ஆராய்ச்சியில் டாக்டர் கார்ல் முக்கியமாய்த் தெரிவித்த தகவல், “நோயாளிகளின் நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் குணமடையும் வேகம் அமையும்.” அதன் அடிப்படையில் அவர் மருத்துவச் சிகிச்சையும் மனவுறுதி ஆலோசனைகளையும் சேர்த்து அளிக்க ஆரம்பித்தார். சென்ற ஆண்டு இந்த டாக்டர் உணவு உண்ணும்போது புரையேறி இறந்து போனார் என்பது மட்டும் சோகமான உபரித்தகவல்.

வாழ்க்கையில் உங்களது மனம் எதை நம்புகிறதோ அதுவே உங்களுக்கு நிகழும். “என்னை யாரும் கண்டு கொள்வதில்லை; என்னிடம் சரியாகப் பழகுவதில்லை; என்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள்,” என்பது உங்கள் மன நம்பிக்கையென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

“எல்லோருக்கும் என்னைப் பிடித்திருக்கிறது; என்னிடம் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்,” என்று நம்புகிறவருக்கு அவர் வாழ்க்கையில் அவ்விதமே நிகழ்கிறது.

உங்கள் மனம் உங்களது கட்டுப்பாட்டில்! எதைச் சிந்தனை செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தாம் முடிவடுக்கிறீர்கள். உங்கள் மனதிற்குள் எதைத் திணிப்பது என்பதையும் நீங்கள்தாம் முடிவெடுத்து நிகழ்த்துகிறீர்கள்.

நல்லதை நம்பி மனதிற்குள் நல்ல எண்ணங்களையே திணித்தால் வாழ்க்கையில் அகமும் முகமும் மகிழ்வுடன் திகழும்.


னம் மகிழ, தொடருவோம்...