Saturday, November 22, 2014

நான் - தாஜ்

உதயத்திற்கு விரைய
பேரொளி மறைகிறது!

இரவென்று தூங்க
உச்சத்தில் அது
பிரகாச வீச்சாகிறது!

தாவி குன்றேறியும்
பாதாளமே பார்க்கிறேன்!
இசைகேட்டுக் கிறங்கி
முகம்காண பரபரக்க
நாயொன்று துள்ளியோடுகிறது!

இடி மின்னல் குறிப்பறிந்து
கன மழையில் வளையவந்தும்
உடல் தகிக்கிறது!

மண்டைக்குள் தாளம்
லயமற்ற அதிர்வு!

பணிய ஸ்தலம் போக
ஸ்வாமியென வணங்குகிறார்கள்!

பூஜியமாகும் விடை அறியாது
ஒண்ணும் ஒண்ணுமென
இன்னும் கூட்டிக்கொண்டிருக்கிறார்கள்!

ஆகி வீடென புகும் தோறும்
வாழும் சப்தம் வரவேற்கிறது!

நிழலுக்கு ஒதுங்கும் மரங்கள்
இலையுதிர்ந்து காய்கிறது!

நினைவை ஒருமுகப்படுத்த
ஞானவெளியில் பல வண்ணப்
பூக்கள் குலுங்குகிறது!

காலம் தாழ முழு நிலவு...
என் மீது
காதல் கொள்ளும் பெண்
என்னைப் போலவே தெரிகிறாள்!

சகாக்களிடம் இதையும்
சொல்லி அழுதால்
நான்கு சுவர்களும்
சேர்ந்தல்லவா சிரிக்கிறது!

அதுகளுக்கு என்ன தெரியும்?
சுதந்திர சுவாச வேட்கையில்
அதிகாரங்களிடம்
மோதிக் கொண்டிருப்பவனும் நான்தான்!



கவிதை ஆக்கம் 
தாஜ் தீன்    Taj Deen

No comments: