மஞ்சள் நீராடி
கண்ணாடி மேனி மறைக்க
முகிலாடை தனையுடுத்தி
நாணல் நுழைந்து
நற்கூந்தல் சிகை முடிந்து
ஆதவப் பூதனையே
அழகழகாய் தலைச்சூடி
பாலை நிலம் நீந்தி
பயிர் வளர நல்லுயிர் வளர
தாழை மார்பணைத்து
தாலாட்டிப் பாலூட்டி
தலையழகுப் பார்த்தவளை
தாயென்றும் பாராமல்
தம் பசி தீர்ப்பதற்காய்
சேலையுரிந்தவளைச்
செண்டாடி மகிழ்ந்தாயே
ஆயுள் முழுதும் நம்மை
அரவணைத்துக் காத்தவளை
கோரப்பசி தீர்க்க
கொன்றுத் தின்றாயே
ஆறா இத்தீவினையால்
அடுத்து நம் தலைமுறையை
தீராப் பஞ்சம் சூழ்ந்து
தின்று வஞ்சம் தீர்க்குமென்று
ஆராய மனமின்றி ஆடிக்களிக்காதே
ஆறாதே ...ஆறாதே.. ....
ஆறவளும் பட்டதுயர்
அழுதுரைத்தும் தீராதே ....
பாரா முகங்காட்டி
பறித்ததும் போதுமடா ...!!
ஆதார மூலங்களை
அழித்ததும் போதுமடா ..!!
ஆனைப் பசி கொண்ட
அரக்க நிலை மாற்றி
ஆதார சீதனமாம்
ஆறவளை வாழவிடு ....
கவிதை ஆக்கம் தமிழ் பிரியன் நசீர்
No comments:
Post a Comment