Wednesday, November 26, 2014

மரணம்./ - சேவியர்


எல்லோருக்கும் பின்னால்
மூன்றடி தொலைவில்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
மரணம்.

எப்போது வேண்டுமானாலும்
எட்டிப்பிடித்து விடும்
தூரத்தில் தினமும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சாலை கடக்கையில்,
வாதிடுகையில்,
புகை பிடிக்கையில்
அதன்
முக பாவங்கள்
மாறி மாறி ஜொலிக்கின்றன.

ஒரு சிலர்
மரணத்தின் பின்னால்
நடந்து கொண்டிருக்கிறார்கள்
அவர்களை
மரணம் கடந்திருக்கக் கூடும்.

அழைத்து
நண்பனாக்கிக் கொள்ள
யாருக்கும் தைரியமில்லை.
கூட இருந்தே
குழி பறிக்கும் உத்தரவாதம்
அது.

அதனுடன்
யாரும் உரையாடுவதுமில்லை.
அது
தனியே நடந்து கொண்டிருக்கிறது,
ஒரு நிழல்போல.

அல்லது
நிழலின் நிஜம் போல.

- சேவியர்

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

சிறந்த கவிதை! பகிர்வுக்கு நன்றி!