நெய் மணக்கும் அல்வாவும், அதை பொய் கலந்து தரும் பில்லாக்களும் வாழ்கவே !
(ஒரு ஹாஸ்ய உணர்வில் எழுதப்பட்டதுதான், நிச்சயம் மன இறுக்கத்தின் உணர்வல்ல)
என் மகளின் திருமணம் இது, கட்டாயம் நீங்கள் கொஞ்சம் முன்னமையே வந்து நின்று காரியங்களை சிறப்பித்து தர வேண்டும் என்று அருமை நண்பர் (மலையாளத்தில் ஆத்மார்த்தமான ஒரு சுஹர்த்து-ன்னு பறயாம்) அப்படி மாய்ந்து மாய்ந்து சொல்கிறாரே என்று, 12.30-க்கு நிக்காஹ் நடக்க இருப்பதை தெரிந்திருந்தும், இருக்கும் முக்கிய வேலைகளை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுக்கி வைத்து விட்டு, காலை 6-மணிக்கே கிளம்பி மண்டபம் போனால், வாசலில் ஏறும் போதே, அழைத்த நண்பரின் தலை, உள்பக்க ஹாலில் ஒரு பெரிய தூணுக்கு பக்கத்தில் தெரிந்ததைப் பார்த்து, மகிழ்ந்து உற்சாகத்துடன் கையசைத்து காட்டினால், வினாடிகளில் என் வருகையை தெரிந்து கொண்டவர், அப்படி கவனிக்கவில்லை என்கிற தோரணை காட்ட, அங்கே பக்கத்தில் நிற்பவரோடு பெரிய சச்சரவில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவரைப் போல் என் கண்ணுக்கு காட்சி தந்து விட்டு, தூணுக்கு பின்னால் ஒரே பாய்ச்சலாகப் போய் நின்று கொண்டு, சண்டைப் பிடித்த அதே நபரிடமே, வாசலில் வந்த ஆள், நிற்கிறானா, போய் விட்டானா, என்ன செய்கிறான், உள்ளேயா வருகிறான் என்று வாயை சிவாஜி கணேசன், பழைய படங்களில், பாட்டுக்கு வாய் அசைக்கும் ரேஞ்சுக்கு, கீழ் தாடையை நல்ல விரித்து; ஆனால் சிறிய சப்தத்தில் கேட்பதை, கல்யாண மண்டபத்தில், அந்த தூணுக்கு பக்கத்திலேயே மாட்டி வைத்திருக்கும் நிலைக் கண்ணாடியில் நான் தெளிவாக பார்த்துக் கொள்ள முடிந்தது !
அப்படியானால் ஏன் இந்த திருமணத்துக்கு என்னை அழைத்தார், ஏன் காலையிலேயே வந்து விட வேண்டுமென்று அப்படி வற்புறுத்தினார், இப்போது இங்கு வந்த பிறகு ஏன் இப்படி நேர் மாற்றமாக நடந்து கொள்கிறார் என்பவை எல்லாம், ஏற்கனவே குழம்பிப் போய் கிடக்கும் வாழ்க்கையில், இன்னமும் குவிந்திடும் குப்பை குழப்பங்களாக !
இறுதியாக ஒன்று, இதை படிப்பவர் எல்லாம் என்னை மன்னிக்க வேண்டும், கூப்பிட்டவர் என்னை கல்யாண வீட்டுக்கும் கூப்பிடவில்லை, நான் விருந்துக்கும் போகவில்லை, எதற்கோ ஒரு அழைப்பு என் பெயர் குறிப்பிட்டு வந்தது உண்மை, நான் அதில் கலந்து கொண்டதும் உண்மை, ஆனால், என்னைக் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல், சுகர் பேஷண்டு என்றும் கூட பாராமல், பழபஜ்ஜி, அடை பாயாசம், தக்காளி ஜாம், செந்துழுவன் பழம் என்று இதுவெல்லாம் போக, கடைசியில் தந்தார் பாருங்கள் ஒரு கால் கிலோ சைஸுக்கு, நெய்யில் ஒழுகும் நல்ல சிகப்பு நிறத்தில் ஏகப்பட்ட முந்திரி பருப்புக்கள் சேர்த்திருந்த ஒரு பெரிய சைஸ் அல்வாத்துண்டு, அப்போதுதான் புரிந்தது, இந்த ஸ்பெஷல் கொச்சி அல்வா தர வேண்டி மட்டும்தான் அவ்வளவு வேண்டி விரும்பி அவர் கூப்பிட்டிருக்கிறார் என்று !
ஆனால், முன்பு , ஸ்கூலில் படிக்கிற நேரம், எங்க மாமாவின் அல்வா கடையில், லீவு நாட்களில், முழு நேரமும், சனி, ஞாயிறுகளிலும் நான் அங்கே போய் இருந்து, பல சைஸ் அல்வாக்களை பலருக்கும் தோதாய் வெட்டி எடுத்து பார்சல் செய்து கொடுத்தவன் என்கிற விஷயம், ஏனோ பழகும் போது அவர் என்னிடமிருந்து தெரிந்து கொள்ளவும் இல்லை, நான் அதை அவரிடம் சொல்ல சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை !
கூப்பிட்டவருக்கும், கண்டு கொள்ளாமல் போனவருக்கும், கடைசியில் அல்வா தந்தவருக்கும், ஒருவேளை இப்போது இதை படிப்பவருக்கும் தெரியும், என்ன இப்படியெல்லாம் எழுதி கிறுக்கிக் கொண்டிருக்கிறான் என்று. இதை மகாஜனங்கள் கூடி இருக்கும் இந்த மேலான சபையில் சொல்லி வைக்க வேண்டும் என்றுதான் இப்படி எல்லாம் கொஞ்சம் அசடு வழிந்திருக்கிறேன், அவசரமாய் வந்து என்னவோ, ஏதோ என்று நினைத்து, பதட்டமாய் படித்தவர்கள், அனாவசிய தொந்தரவு தந்தமைக்காக என்னை பொறுத்துக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் !
என்ன இருந்தாலும் ஒரு புதிய வாழ்த்துக் கோஷம் கிடைத்திருக்கிறது- “ நெய் ஒழுகும் அல்வாவும் அதில் பொய் கலந்து; நம் தொண்டையில் பதமா, இதமா இறங்க வைப்பவர்களும் நீடுழி வாழ்கவே”.
இதில் சொல்ல வரும் சேதி – நல்ல நண்பர்களிடமும், நல்ல சுத்த நெய்யினால் செய்யப்பட்ட; மேன்மை ருசியுள்ள அல்வா; நிறைய ஸ்டாக் இருந்து கொண்டுதானிருக்கிறது !!
Raheemullah Mohamed Vavar
1 comment:
//நிலைக் கண்ணாடியில் நான் தெளிவாக பார்த்துக் கொள்ள முடிந்தது !//
- அதன் பிறகு என்ன நடந்தது நண்பருக்கும் இவருக்கும்?
விவரம் இல்லையே?
Post a Comment