தேர்தல் அறிவிப்பால் கட்சிகளிடம் சுறுசுறுப்பு. கூட்டணிகள் இழுபறியாக இருப்பதால் மக்களிடம் பரபரப்பு. இந்த சந்தடியில் முக்கியமான ஒரு விஷயம் பின்வரிசைக்கு தள்ளப்பட்டு விட்டது.
மத்திய அரசுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நடந்த மல்லுக்கட்டு.
இரண்டு அவசர சட்டங்கள் பிறப்பிக்க அரசு விரும்பியது. ஜனாதிபதி கையெழுத்து போட்டால்தான் சட்டம் செல்லுபடி ஆகும். கையெழுத்து போட பிரணாப் முகர்ஜி மறுத்து விட்டார். இதுதான் மவுனமாக நடந்த மல்யுத்தத்தின் சாராம்சம்.
சம்பந்தப்பட்ட எல்லோருமே பெரிய தலைகள். வீட்டுக்குள் நடந்தது வெளியே தெரியக்கூடாது என்று விவேகமாக அமுக்கிவிட்டனர். என்னதான் கூட்டிப் பெருக்கினாலும் துடைப்பத்தின் இழைகளில் சிக்காமல் அங்கும் இங்குமாக சில தும்பு தூசி தங்கிவிடும்தானே. அப்படி சிதறிக் கிடந்த தகவல்களை சேகரித்து அலசியபோது வெளிப்பட்ட விஷயங்கள் அசாதாரணமானவை.
ஒன்று, ஊழல் தடுப்பு திருத்த சட்டம். அடுத்தது, பொருட்கள் மற்றும் சேவைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் பெறுவதற்கும், அவை தொடர்பான குறைபாடுகளுக்கு உடனடி நிவாரணம் பெறுவதற்கும் பொதுமக்களுக்கு உரிமை வழங்கும் சட்டம்.
உண்மையிலேயே சிறப்பான சட்டங்கள். நாட்டை நாசமாக்கும் ஊழலை ஒழித்துக் கட்ட நிச்சயமாக உதவும் சட்டங்கள். லோக்பால் மசோதாவை சட்டமாக்கிய சூட்டோடு சூடாக இந்த மசோதாக்களையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்க காங்கிரஸ் விரும்பியது. சரியாக சொல்வதென்றால் ராகுல் காந்தி ஆசைப்பட்டார்.
ஆசைக்கு அடிப்படை இரண்டு இலக்குகள். ஊழலை ஒழிக்க காங்கிரஸ் முனைப்புடன் செயல்படுகிறது என்று காட்டிக் கொள்ளலாம். ஊழலின் ஊற்றுக் கண் காங்கிரஸ்; அதை ஒழித்தால் ஊழலும் ஒழிந்துவிடும் என்று ஆம் ஆத்மி கட்சியும் பிஜேபியும் நடத்தும் பிரசாரத்தின் கூர்மையை மழுங்கடிப்பது.
இந்த தந்திரம் புரியாத அளவுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் மக்குகள் இல்லையே. என்ன ஆனாலும் சரி, இரண்டு மசோதாக்களையும் நிறைவேற்ற விடுவதில்லை என்று அவர்கள் சபதம் போட்டார்கள். அது பெரிய விஷயம் அல்ல. நாடாளுமன்றம் செயல்பட விடாமல் முடக்கினால் போதும். ஏற்கனவே அவர்கள் அந்த கலையில் பெரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பரஸ்பரம் கடுமையாக எதிர்க்கும் பிஜேபியும் கம்யூனிஸ்டுகளும் இதில் உடன்பட்டு இயங்கினார்கள்.
கடும் அமளிக்கு நடுவே குரல் வாக்கெட்டுப்பு மூலம் தெலங்கானா மாநில உருவாக்க மசோதாவை நிறைவேற்றியதோடு, பிப்ரவரி 21ல் நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த வாரம் 15வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரை முறைப்படி முடித்து வைத்தார் ஜனாதிபதி.
குறிப்பிட்ட இரண்டு மசோதாக்களும் நிறைவேறவில்லை என்பதில் ராகுல் மிகவும் ஏமாற்றம் அடைந்தார். அது கோபமாக வெளிப்பட்டது. சோனியா காந்தியிடமும் மன்மோகன் சிங்கிடமும் குமுறலை கொட்ட அவர் தயங்கவில்லை. ’தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்குள் அவசர சட்டங்களாக பிறப்பித்தால் வேலை முடிந்துவிடும்’ என்று துதிபாடிகள் தரப்பில் அவருக்கு ஆலோசனை கூறப்பட்டது. ’ஒய் நாட்?’ என்று அவரும் பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்து, கட்சியிலும் அரசிலும் விறுவிறுப்பாக வேலைகள் நடந்தன.
காங்கிரஸ் கோர் கமிட்டி என்ற மைய அமைப்பு அதிகாரம் மிகுந்தது. பிரதமர் வீட்டில் அது கூடியது. சோனியா, மன்மோகன், அந்தோணி, ஷிண்டே, சிதம்பரம் ஆகியோர் உறுப்பினர்கள். சோனியாவின் அரசியல்செயலாளர் என்ற முறையில் அகமது படேல் பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டவர்கள் அமைச்சர்கள் கபில் சிபல் (சட்டம்), ஜெய்ராம் ரமேஷ் (ஊரக வளர்ச்சி), மல்லிகார்ஜுன் கார்கே (ரயில்வே), நாராயணசாமி (பிரதமர் அலுவலகம்).
அவசர சட்டங்களில் கையெழுத்திட பிரணாப் முகர்ஜி மறுத்தால் என்ன செய்வது என்ற கேள்வி அப்போதுதான் சீரியசாக அலசப்பட்டது. அரசல் புரசலாக டெல்லியில் பேசப்பட்ட அந்த விவகாரத்தை விவாதத்துக்குரிய கேள்வியாக மேஜை மீது விரித்தவர் புதுச்சேரி நாராயணன்.
‘அரசியல் சாசனத்தின் 123வது ஆர்டிகிள் மத்திய அரசுக்கு கொடுத்துள்ள அதிகாரத்தின் கீழ் அவசர சட்டம் கொண்டு வருகிறோம்; இதில் ஜனாதிபதி ஆட்சேபிக்க சட்டப்படி முகாந்திரம் இல்லை’ என்ற வாதத்தை கபில் சிபல் முன்வைத்தார்.
‘சட்டப்படியே எல்லாம் நடக்கும்போது யாரும் ஆட்சேபிக்க முகாந்திரம் இல்லைதான். ஆனால், எதை எடுத்தாலும் அரசியல்தானே மேலோங்கி நிற்கிறது’ என்று எதார்த்த நிலைமையை கண்ணாடி பிடித்து காட்டினார் சிதம்பரம்.
அதை ஆமோதித்த அந்தோணி, ‘பிஜேபி ஒரு பக்கமும் இடதுசாரிகள் இன்னொரு பக்கமும் ஜனாதிபதிக்கு பிரஷர் கொடுக்கிறார்கள். அதனால், கேள்வி கேட்காமல் அவர் கையெழுத்து போடுவார் என தோன்றவில்லை’ என்றார்.
‘அவர்களும் ஊழலை ஒழிப்பதுதான் முதல் வேலை என்று மேடை மேடையாக முழங்குகிறார்கள். நாமும் அதற்காகத்தான் இந்த சட்டங்களை கொண்டு வருகிறோம். நாடாளுமன்றத்தில் அவற்றை நிறைவேற்ற விடாமல் தடுத்ததால் அவசர சட்டமாக கொண்டு வருகிறோம். அதையும் தடுத்தால் நாம் மக்களிடம் அவர்களின் இரட்டை நிலையை அம்பலப்படுத்துவோம்’ என்று ஷிண்டே சொன்னார்.
ஜனாதிபதி என்னென்ன கேள்விகள் எழுப்பக்கூடும், என்ன பதில் வைத்திருக்கிறோம், எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்ன, அதை முறியடிப்பது எப்படி என்ற விஷயங்கள் அலசப்பட்டன. ’கட்சி கடுமையான நெருக்கடியை சந்திக்கும் வேளையில், மேலும் ஒரு சிக்கலை வலிந்து உருவாக்கிக் கொள்ள வேண்டாம். எந்த நிர்ப்பந்தமும் இல்லை. எப்படியாவது இந்த சட்டங்களை கொண்டு வந்தால்தான் மக்களை சந்திக்க முடியும் என்ற நிபந்தனையும் கிடையாது’ என்று சோனியா காந்தி வலியுறுத்தினார். கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விரும்புகிறார் என்பதற்காக எல்லை தாண்டி எதுவும் செய்யத் தேவையில்லை என்பதை இதற்குமேல் வெளிப்படையாக அவர் சொல்ல முடியாது என்பது அந்த கூட்டத்தில் இருந்தவர்களுக்கு புரியாமலா போயிருக்கும்?
அவசர சட்டங்களுக்கு அமைச்சரவை முறைப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்காக அமைச்சரவையை உடனே கூட்டுவது என்றும்; அதே சமயம், ஜனாதிபதியின் நிலையை தெரிந்து கொள்வதற்காக இரண்டு அமைச்சர்கள் அவரை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஷிண்டேயும் கபில் சிபலும் சந்திக்க நேரம் கொடுத்தார் பிரணாப். இன்னொரு பக்கம் அமைச்சரவை கூடியது. அதில் மனம் திறந்தார் மன்மோகன். ’பத்து ஆண்டுகளை முடித்து விட்டோம். இவ்வளவு நாள் செய்யாததை இப்போது சில நாட்களில் செய்துவிடுவது சாத்தியமாக இருக்கலாம். ஆனால் சரியானது என்று மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? எதிர்க்கட்சிகளை குறை சொல்ல நமக்கு காரணங்கள் இருக்கின்றன. நம் மீது குற்றம் சுமத்த அவர்களுக்கும் நியாயங்கள் இருக்கலாம்’ என்று அவர் சொன்னதை யாராலும் மறுக்க இயலவில்லை.
‘இந்த விஷயத்தில் பாதி தூரத்துக்குமேல் கடந்துவிட்டோம். அபவுட் டர்ன் அடித்து திரும்ப முடியாது. இந்த இரண்டு சட்டங்களுக்காக மட்டும் ஜனாதிபதி ஒப்புதலை எதிர்பார்க்கிறோம் என்ற பேச்சுக்கு இடம் தர தேவையில்லை. நிலுவையில் இருக்கும் மற்ற முக்கியமான மசோதாக்களுக்கும் அவசர சட்ட வடிவம் கொடுத்து தயாராக வைத்திருக்கிறோம். ஜனாதிபதியின் பேனாவுக்கு நிறைய வேலை கொடுக்கலாம்’ என்று சிதம்பரம் மாற்றுவழி காட்டியுள்ளார்.
ஜனாதிபதியை சந்தித்து திரும்பும் அமைச்சர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு முடிவு எடுப்போம் என்ற தீர்மானத்துடன் அமைச்சரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
கபில் சிபல், ஷிண்டே இருவரையும் உற்சாகமாக வரவேற்றார் பிரணாப். சுற்றி வளைக்காமல் விஷயத்துக்கு வந்தார் கபில். பிரணாபும் அதே வழிக்கு வந்தார். ஆனால் அவருக்கே உரித்தான பாணியில்.
......................................
‘ஜூன் மாதம் திரும்பவும் வந்து உட்காரப் போகிறீர்கள். அப்போது பார்த்துக் கொள்ளலாமே. என்ன அவசரம்?’
‘வாக்குறுதி கொடுத்துவிட்டோம். நிறைவேற்றாமல் விட்டால் நன்றாக இருக்காது. நாடாளுமன்றத்தில் எவ்வளவோ முயற்சி செய்தோம்...’
‘பார்த்தேனே.. இந்த மசோதாக்களுக்காக இன்னும் மூன்று நான்கு நாள் சபையை நீட்டித்து இருக்கலாம் என்று யாரோ சொன்னார்கள் அல்லவா..?’
‘பல பேர் சொன்னார்கள். அப்படி நீட்டித்து இருந்தாலும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்காது என்பது நமக்குதானே தெரியும்..’
‘உணவு பாதுகாப்பு மசோதாவையும் அவர்கள் எதிர்த்தார்கள்.. இல்லையா?’
‘ஆமாம். ஆனாலும் உறுதியாக நின்று நிறைவேற்றினோம்..’
‘அது சரி. சொந்த எம்.பி.க்கள் உட்பட ஒரு டஜன் உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு மசோதாவை நிறைவேற்ற உறுதி இருந்தால்தான் முடியும்..’
‘அது சட்டமானதால் எத்தனை ஏழைகள் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்கள் என்று மீடியாக்கள் எழுதின..’
‘வடிப்பார்கள்.. எழுதுவார்கள்.. ஆனால் அதையும் முதலில் அவசர சட்டமாக கொண்டுவர நேர்ந்தது துரதிர்ஷ்டம், இல்லையா?’
‘நல்ல சட்டம் என்று தெரிந்தே தடுக்க முயன்றார்கள். அதனால்..’
‘மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் உணவு மசோதாவை நிறைவேற்றுவோம் என்று கடந்த ஜனாதிபதி உரையில் அறிவித்துவிட்டு இத்தனை காலம் துங்கினீர்களா என்று அப்போது யாரோ கேட்டார்கள் என்று நினைக்கிறேன். கரெக்டா..?’
‘உங்களுக்கு தெரியாதது அல்ல. எல்லா கட்சிகளின் ஒத்துழைப்பும் இருந்தால்தான் சட்டங்கள் இயற்ற முடியும். தன்னிச்சையாக செய்தால் எதேச்சதிகாரம் என்பார்கள்..’
’சரியாக சொன்னீர்கள். 25 அவசர சட்டங்களுக்கு மேல் நானே கையெழுத்து போட்டிருக்கிறேன். உணவு பாதுகாப்பு மாதிரி நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும் இங்கே ஓடிவந்தீர்கள். சபை ஒப்புதல் தராததால் இந்திய மருத்துவ கவுன்சில் அவசர சட்டத்தையே திரும்பவும் பிறப்பிக்க நேர்ந்தது..’
‘இதெல்லாம் எதிர்பாராமல் நடப்பவை..’
‘ஓ, அப்படியா? ஒவ்வொரு அமைச்சகத்தோடும் இணைந்த நாடாளுமன்ற நிலைக்குழு இருக்கிறது. அதில் எல்லா கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் உண்டு. மசோதாவை முதலில் அங்கே அனுப்பினால் அவரவர் கட்சி தரப்பில் கருத்து, யோசனை, திருத்தம் ஏதாவது சொல்வார்கள். அப்புறம் அது சபைக்கு வரும்போது பாஸ் ஆவதில் பிரச்னை இருக்காது. இதுதான் என் அறிவுக்கு எட்டிய நடைமுறை..’
‘அப்படி செய்ய எப்போதும் அவகாசம் கிடைப்பதில்லை. செய்தாலும் சபைக்கு வந்தபின் கூச்சல் போடுகிறார்கள்..’
‘செலக்ட் கமிட்டி என்று இருக்குமே. அதற்கு அனுப்பினால் சரி செய்து தருவார்களே, முன்பெல்லாம்..?’
’நாம் என்னதான் வளைந்து கொடுத்தாலும் பிடிவாதமாக இருக்கிறார்கள். எத்தனை நல்ல விஷயங்களை செய்ய முயன்றாலும் முட்டுக் கட்டை போடுகிறார்கள். நமது ஜனநாயகத்தின் முரட்டுத் தனமான ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம் என்று தோன்றுகிறது..’
‘அந்த கருத்தில் எனக்கு மாறுபாடு கிடையாது. ஆனால், தனிக் கட்சியின் பெரும்பான்மை ஆட்சி என்பது சரித்திரமாகி விட்டது; இது கூட்டணிகள் யுகம் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்கு உறைக்கிறது என்பதில் சந்தேகம் உண்டு. 40 சீட், 20 சீட் இல்லை, வெறும் 2 சீட் இருந்தாலும் அந்த கட்சிக்கு சம அந்தஸ்து கொடுத்து அவர்களின் கருத்தை காதுகொடுத்து கேட்கும் பொறுமை நமக்கு வேண்டும். கோரிக்கையை நாம் ஏற்காமல் போனால்கூட, நம்மை மதித்து பேசினார்கள் என்ற திருப்தி அவர்களுக்கு ஏற்பட வேண்டும். பெரியவன் – சிறியவன் மனநிலை இருந்தால் சுமுகமான சூழல் ஏற்படாது. இது என் அனுபவம்..’
‘அதை பெரிதும் மதிக்கிறோம். இந்த இரண்டு அவசர...’
‘நல்லது செய்வது நல்ல விஷயம். அதை நல்ல வழியில் செய்ய வேண்டும் என்பது முக்கியமான விஷயம். வங்காளியில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது..’
‘நாங்கள் என்னதான் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?’
‘தேவையில்லாத விமர்சனங்களையும் கெட்ட பெயரையும் தவிர்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லையே..?’
‘அப்படியானல் மசோதாக்கள்...’
‘இந்த மக்களவை எப்படி செயல்பட்டது என்பதை நாடு பார்த்துக் கொண்டுதான் இருந்தது. 66 மசோதாக்கள் நிறைவேற்றப்படமுடியாமல் காலாவதி ஆகிவிட்டன. அதோடு இன்னும் இரண்டு சேர்ந்தால் என்ன ஆகிவிட போகிறது, சொல்லுங்களேன்..’
.....................
மறுநாள் ஞாயிறு. ஆனாலும் அமைச்சரவை ஸ்பெஷலாக கூடியது. ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பு குறித்து கபில் விவரித்தார். ஷிண்டே தன் விமர்சனத்தை இணைத்துக் கொண்டார்.
அதன் பிறகு யாரும் அதிகம் பேசவில்லை. தெலங்கானா உதயமாக தேதி குறிப்பது, எட்டு மாநிலங்களில் ஜாட் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது ஆகிய இரண்டு மசோதக்களுக்கு மட்டும் மாற்றாக அவசர சட்டம் பிறப்பிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அமைச்சரவை செயலாளர் அஜித் சேத் ஜனதிபதியின் செயலாளரை தொடர்பு கொண்டு நேரம் கேட்டார். கிடைத்தது.
அமைச்சரவை கூட்டம் முடிந்தது.
அத்வானி, சுஷ்மா, அருண் ஜேட்லி, பிரகாஷ் காரத் என்று வரிசையாக ஒவ்வொரு தலைவரும் பிரணாப் முகர்ஜியை பாராட்டி அறிக்கை விடுவதும் ட்விட்டரில் இடுவதுமாக அடுத்த இரு தினங்கள் ஓடின.
அரசியல் சாசனத்தின் காப்பாளர் என்ற கடமையை பிரணாப் நிறைவேற்றி விட்டார்; அரசியல்வாதிகள் மத்தியில் தானொரு ஸ்டேட்ஸ்மன் என்பதை நிரூபித்து விட்டார் என்று பலவாறாக புகழாரம் குவிந்தது.
அதெல்லாம் ஒன்றுமே இல்லை.
சோனியா, மன்மோகன் உள்ளிட்ட சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் முகத்தில் தெரிந்த நிம்மதிதான் அலாதியானது.
(இழு தள்ளு 12 / கதிர் / குமுதம் ரிப்போர்ட்டர் 16.03.2014)
No comments:
Post a Comment