எழுத்துப் பிழைகளைக் கூடிய மட்டும் தவிர்க்கவும். மற்றக் கதைகளை விட வட்டார வழக்கில் எழுதும்போது எழுத்துப் பிழை படிப்பவர்களுக்கு அதிகக் குழப்பங்களை ஏற்படுத்தும். எது வழக்குச் சொல் , எது பிழை என்று ஆசிரியருக்கு மட்டும்தான் தெரியும். ஏனென்றால் படிப்பவர்களில் பெரும்பாலான பேர் வேறு வட்டாரத்து ஆட்கள். தவிர வட்டார வழக்கு தாய்ப்பால் போல. அதில் களங்கம் வரக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு...
இரண்டு வகை வட்டார வழக்குக் கதைகள்/எழுத்துகள் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளன.
ஒன்று: கதை முழுக்க முழுக்க வட்டார வழக்கு கொண்டு எழுதுவது. நிறைய உரையாடல்கள் மற்றும் குறிப்புகள் (உ-ம் : பல நாஞ்சில் நாடன் கதைகள்). இந்த வகைமையில் நீங்கள் எழுத வேண்டுமானால் உங்கள் வட்டார வழக்கில் கடும் புலமையும், அவதானிப்பும் , நினைவுத்திறனும், பழக்கமும் வேண்டும்.
மற்றொன்று: பொதுத்தமிழில் எழுதி, இடையில் உரையாடல்களைக் குறைத்து, சுவையான/முக்கியமான இடங்களில் வட்டார வழக்குச் சொற்றொடர்களைப் பயன்படுத்துதல். (உ-ம்: கலாப்ரியாவின் "நினைவின் தாழ்வாரங்கள்"). இதில் எங்கே வட்டார வழக்கைப் பயன்படுத்துகிறான் என்பதில்தான் ஒரு எழுத்தாளனின் திறமை ஒளிந்திருக்கிறது. ஐஸ்கட்டி சொருகுவதுபோல் சில இடங்களிலும் , மனதை இதமாக வருடுவதற்கு சில இடங்களிலும், மனசாட்சியை நுட்பமாகத் தூண்டி விடுவதற்கு சில இடங்களிலும், மண்ணின் வாசனையைப் படிப்பவனுக்குக் கொண்டு செல்ல சில இடங்களிலும் நுட்பமாகப் பயன்படுத்த வேண்டும்.
இதையெல்லாம் படிக்காமல் எழுதக்கூடாது. சரி இதையெல்லாம் படிக்க நேரமில்லையா. ஒரு எளிய வழி உள்ளது. உங்கள் மண்ணிலேயே பின்வருவனவற்றில் ஏதேனும் ஒரு பணி அல்லது தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, கிடைக்கும் நேரத்தில் எழுதினால் எளிதில் கைகூடும்.
விவசாயம் , பலசரக்குக் கடை, பாத்திரக் கடை ,அரசாங்கப் பள்ளி ஆசிரியர் , வங்கி அலுவலர் (ஐசிஐசிஐ வகையறா அல்ல) , கண்டக்டர், மருத்துவர்
* சில வாரங்களுக்கு முன் ஊருக்குச் சென்றிருந்த போது என் தமிழாசிரியர் கொடுத்த அறிவுரை.
Sisyphus Aeolus
No comments:
Post a Comment