பசுமை நிறைந்த நினைவுகளே... பாடித் திரிந்த பறவைகளே... பாடல் வரிகளை நெஞ்சிலிருந்து அழித்துவிட எவராலும் முடியாது. காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் தோழமையின் மேன்மைக்கு தினந்தோறும் துதிபாட அர்த்தமுள்ள வார்த்தைகளால் நிர்மாணித்த கவிதாலயம் அந்தப் பாடல்.
இந்தியிலும் ஏனைய இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தால், நாடாளுமன்றத்தின் 15வது மக்களவை கடைசி முறையாக வெள்ளியன்று உற்சாகத்துடன் கூடி, நெகிழ்ச்சியுடன் பேசி, கனத்த இதயத்துடன் கலைந்த நேரத்தில் இரண்டாவது தேசிய கீதமாக அதுதான் இசைக்கப்பட்டிருக்கும்.
மன்மோகன் சிங்கின் கண்ணாடியில் ஈரம் படர்கிறது. அத்வானி கர்சீப் எடுத்து கண்களை துடைக்கிறார். சோனியாவை வாயார புகழ்கிறார் சுஷ்மா. அத்வானியை அவையின் தந்தை என்கிறார் மார்க்சிஸ்ட் வாசுதேவ் ஆச்சார்யா. இன்னொரு அடி மேலே தூக்குகிறார் முலாயம் சிங் யாதவ். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பாராட்டுகளை சமர்ப்பிக்கிறார் சுஷில் குமார் ஷிண்டே.
தமிழ்நாட்டில் வாழும் நம்மை பொருத்தவரை கற்பனைக்கு அப்பாற்பட்ட காட்சிகள்.
சோனியா பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் என சபதம் போட்டவர் சுஷ்மா. நாட்டை இன்னுமொரு பிரிவினைக்கு இழுத்துச் செல்கிறார்கள் என்று சுஷ்மாவை முன்னிறுத்தி பிஜேபி தலைவர்களை விமர்சித்தவர் சோனியா. இவரைப் போல் பலவீனமான பிரதமரை நாடு கண்டதில்லை என்று மன்மோகனை போட்டுத் தாக்கியவர் அத்வானி. அத்வானி மட்டும் ரதயாத்திரை வராமலிருந்தால் பாபர் மசூதிக்கு பங்கம் வந்திருக்காது என்று தாளித்தவர் முலாயம். மன்மோகனும் அத்வானியும் கைகோர்த்து பெருமுதலாளிகளுக்கு வெண்சாமரம் வீசுகிறார்கள் என்று கொதித்தவர் வாசுதேவ். பெங்காலியில் பாசுதேவ்.
அதெல்லாம் அரசியல். அது ஒரு தொழில். தொழிலில் போட்டி இருக்கும். எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அது தொழில் தர்மம். தொழில் போட்டியை தொழிலோடு நிறுத்திக் கொள்வது மனித தர்மம்.
போட்டியாளர்கள் எல்லோரும் விரோதிகள் அல்ல. எதிர் வரிசையில் அமர்பவர்கள் எல்லோரும் எதிரிகள் அல்ல. நமக்கு மட்டும் ஏன் இந்த உண்மை உறைப்பதில்லை?
அவர்கள் வீட்டில் விசேஷம் என்றால் கட்சி பேதம் பாராமல் அழைப்பு வைக்கிறார்கள். அழைப்பு பெற்றவர்கள் அதை மதித்து வந்து வாழ்த்துகிறார்கள். கட்டித் தழுவி நலம் விசாரிக்கிறார்கள். விருந்தில் ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிடுகிறார்கள். ஜோக் அடித்து வயிறு குலுங்க சிரித்து மகிழ்கிறார்கள். படம் திறப்பு முதல் இறுதி யாத்திரை வரை எல்லா நிகழ்ச்சிகளிலும் தோளோடு தோள் உரச பங்கேற்கிறார்கள்.
டெல்லி மட்டுமல்ல. அக்கம் பக்கமும் மோசமில்லை. செய்தியாளருக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்த உம்மன் சாண்டி சுதந்திரப் போராட்ட தலைவர் ஒருவரின் பெயர் நினைவுக்கு வராததால் அச்சுதானந்தனுக்கு போன் போட்டு கேட்கிறார். எடியூரப்பா படிக்கட்டில் சறுக்கி காலில் கட்டு போட்டபோது அவரை சிறைக்கு அனுப்பத் துடித்த பரத்வாஜ் கவலையுடன் விசாரிக்கிறார். தமிழன் மட்டும் ஏன் தனியாகிப் போனான்?
உறவினரை பார்க்க ஆஸ்பத்திரிக்கு போயிருந்தார் அந்த தமிழக பிரமுகர். பக்கத்து அறையில் மாற்றுக்கட்சி பிரமுகர் சிகிச்சை பெற்று வந்தார். எதேச்சையாக சந்திப்பு. நலம் விசாரித்து விட்டு திரும்பினார். அதற்குள் யாரோ மேலிடத்தில் போட்டுக் கொடுத்து விட்டார்கள். அழைப்பு வந்தது. போனார். நடந்ததை விவரித்த பிரமுகர், வெறும் மனிதாபிமான அடிப்படையில் ஒருவரை நலம் விசாரித்தது கட்சி விரோத நடவடிக்கையா என்று கேட்டிருக்கிறார். ‘உங்கள் நியாயத்தை என்னால் உணர முடிகிறது. ஆனாலும் இதெல்லாம் டெல்லி அரசியலுக்குதான் சரிப்பட்டு வரும். தமிழ் கலாசாரம் மாறிவிட்டது. இங்கே எல்லாரும் தப்பாக பார்ப்பார்கள். ரோம் நகரில் கிரேக்கனாக நடந்து கொள்ளாதீர்கள்’ என்று அறிவுரை கூறி அனுப்பப்பட்டார் அவர்.
உண்மை என்பது ஒன்றுதான் இருக்க முடியும். நியாயம் அப்படி அல்ல. சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் இருக்கலாம். அவரவர் நியாயம் அவரவருக்கு. அதன் அடிப்படையில் அவர்கள் ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு நிலைப்பாடு எடுக்கலாம். ‘நான் சொல்வது மட்டுமே நியாயம். மற்றதெல்லாம் அநியாயம்’ என்று பிரகடனம் செய்வது இயற்கை நீதிக்கு புறம்பானது.
ஜார்ஜ் புஷ் அப்படித்தான் சொன்னார். குவைத்தை சாக்கிட்டு இராக் மீது படையெடுக்க அமெரிக்கா முடிவு செய்தபோது, அதன் தோழமை நாடுகளே உடன்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபை மூலமாக தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்னையை போராக மாற்றுவானேன் என்று கேட்டனர். ஆத்திரம் கண்களை மறைக்க புஷ் அப்போது சொன்னார்: ’நண்பன் என்றால் என் பின்னால் வந்து நில். இல்லை என்றால் உன்னை எதிரியாக அறிவிப்பது தவிர எனக்கு வழியில்லை’.
அது ஆணவத்தின் வெளிப்பாடு. ‘என் கருத்தே சரியானது. மாற்றுக் கருத்துக்கு இங்கு இடம் கிடையாது’ என்ற ஆணவம். அறியாமையின் குழந்தைதானே ஆணவம்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவிக்கும் ஏழு பேரை விடுவிக்கும் விவகாரம் சமீபத்திய உதாரணம். இருட்டில் தடவிப் பார்த்து யானையை அறிய முயன்ற நான்கு பேரை போல, இந்த பிரச்னையை அரைகுறையாக புரிந்து கொண்டவர்களே அதிகம். அப்படி தெரிந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில் அவர்கள் ஆக்ரோஷமான வாத பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது சுப்ரீம் கோர்ட். ஜனாதிபதிக்கு அவர்கள் சமர்ப்பித்த கருணை மனு மீது முடிவு எடுக்க தாமதம் செய்ததால் இந்த நிலை எடுத்தது நீதிமன்றம். தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்த தீர்ப்பு சட்ட ரீதியாக முற்றிலும் செல்லத்தக்கது.
ஏற்கனவே பல அமைப்புகளும் தலைவர்களும் தண்டிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோரிக்கை. மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் என்று மனித உரிமை கழகம் உலகம் முழுவதும் நடத்தி வரும் பிரசாரம் வலுவடைந்து வருவதையும் கவனத்தில் கொண்டால் இது நியாயமான தீர்ப்பு. எனவே யாரும் ஆட்சேபிக்கவில்லை.
ஆயுளாக குறைக்கப்பட்ட தண்டனையையும் தள்ளுபடி செய்து, இந்த மூவருடன் மேலும் நால்வரை சேர்த்து உடனடியாக விடுவிக்க தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவுதான் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வாறு செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டா, விடுவிக்கும் அதிகாரம் இருந்தாலும் இந்த வழக்கில் அது சட்டப்படி செல்லுமா, அதிகாரம் உண்டு சட்டப்படி செல்லும் என்றாலும்கூட நீதி பரிபாலனத்தில் இது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தவறான முன்னுதாரணம் ஆகிவிடுமா என்ற முக்கியமான கேள்விகள் எழுந்துள்ளன. தமிழக அரசின் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையில் அவற்றுக்கு விடை கிடைக்கலாம். எனவே இப்போது அதற்குள் போகவேண்டியதில்லை.
தமிழக அரசு அரசியல் லாப நோக்கத்தில் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். துளியும் இதில் அரசியல் கிடையாது என்று அதிமுகவினர்கூட மறுக்க மாட்டார்கள். மாறாக, ‘கருணை மனு மீது முடிவு எடுக்காமல் மத்திய அரசு இத்தனை ஆண்டுகள் இழுத்தடித்தது எந்த நோக்கத்திலாம்?’ என்று திருப்பிக் கேட்பார்கள். எனவே அதையும் ஆராய வேண்டியதில்லை.
’தமிழர்களை விடுவிக்க தமிழனே எதிர்ப்பா, ராஜீவ் காந்தி என்ற தனிநபருக்காக தமிழன் காட்டிக் கொடுப்பதா?’ என்று கொதிப்பவர்கள் 1991க்கு அப்புறம் பிறந்தவர்களாக இருக்கலாம். அல்லது அன்று குழந்தைகளாக இருந்திருக்கலாம். ஸ்ரீபெரும்புதூரில் பலியானவர்களின் கதைகள் அவர்களுக்கு தெரியாதிருக்கலாம். அதோடு இலங்கை தமிழர்களின் உரிமைப் போராட்டம், அரசின் அடக்குமுறை, பயங்கரவாதத்தின் ஜனனம், சகோதர யுத்தம், இந்தியாவின் தலையீடு, இந்தியா சந்தித்த நெருக்கடிகள், தமிழகம் எதிர்கொண்ட பிரச்னைகள் அந்த தலைமுறைக்கு விரிவாக தெரியாததிலும் தவறில்லை.
ஏழு பேர் விடுவிப்பை ஆட்சேபிக்கும் அத்தனை பேரும் அயோக்கியர்கள், ராஜபக்சேயின் கைக்கூலிகள், தமிழினத் துரோகிகள் என்று சித்தரிக்க முனைவது ஆபத்தானது. தமிழர் அல்லாத அனைத்து இந்தியர்கள், விடுவிப்பை ஏற்காத தமிழர்கள், ஊடகங்கள், தலைவர்கள் என குறிவைத்து தாக்குதல் நடக்கிறது. இது தேவையற்ற எதிர் விளைவுகளுக்கு வழி வகுக்கும்.
நாடு என்ற கட்டமைப்பில் சட்டத்தின் ஆட்சியை ஏற்றுக் கொண்டிருப்பது நமது சமூகம். குறைபாடுகள் ஆயிரம் இருக்கலாம். அதற்காக சட்டங்களையே தூக்கி எறிவோம் என்பது அராஜகத்துக்கு மலர்ப்பாதை அமைக்கும் வேலை. மாற்றுக் கருத்துகளுக்கும் மரியாதை அளிக்கும் சமுதாயம்தான் முன்னேற முடியும்.
நாடு என்ற விசாலமான வெளியில் பலவிதமான கருத்துகளுக்கு இடம் இருக்கிறது. மொழி, இனம், மதம் போன்ற அடையாளங்களை நாடு என்ற பொதுக்குறியீடுக்கு மேலாக உயர்த்திப் பிடிக்கும்போது சிறு வட்டங்களுக்குள் சிறைபட்டு விடுகிறோம்.
இரண்டு இட்லி சாப்பிடும் முடிவோடு ஓட்டலுக்கு போனாலும், என்ன இருக்கிறது என்று சர்வரை அடுக்கச் சொல்லி கேட்கிறோம். துணிக்கடை, செல்போன் கடை எதுவானாலும் திருப்தி வராமல் ‘வேறென்ன இருக்கிறது?’ என விசாரிக்கிறோம். வித்தியாசம், வெரைட்டி என்று எல்லாவற்றிலும் மாற்று தேடும்போது மாற்றுக் கருத்துகளையும் சிந்தனைகளையும் மட்டும் மூளைக்குள் புகாமல் தடுப்பது விசித்திரம்.
வெவ்வேறு சிந்தனைகளுக்கு இடமளிப்பதும், பிறர் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதும் புதுமையல்ல; அதுதான் நமது பாரம்பரியம்.
(இழு தள்ளு 09 / கதிர் / குமுதம் ரிப்போர்ட்டர் / 06.03.2014
தகவல் தந்தவர் Kathir Vel
No comments:
Post a Comment