வாக்களிப்பது என்பது நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவரின் தலையாய கடமைகளில் ஒன்றாகும். ஜனநாயக உரிமையுமாகும்.வாக்குரிமையே நம்மை இந்நாட்டின் மைந்தர்களாக நமது அதிகாரபூர்வ உரிமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பாக இருக்கிறது.
நாடு சீர்படுவதும், சீர்கெடுவதும் நாட்டு மக்களால் அளிக்கப்படும் வாக்குச்சீட்டு தான் தாங்கி நிற்கிறது. இன்னும் சொல்வதானால் நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் மாபெரும் சக்தி வாக்குச்சீட்டுக்குத்தான் உண்டு. என்று கூடச் சொல்லலாம்.
அத்தனை பலம் மிக்க இந்த வாக்களிப்பின் நோக்கம், பயன் என்னவென்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து மிகத்தெளிவாய் யோசித்து யாருடைய நிர்பந்தமுமில்லாமல் நம்மனதிற்க்கு மனசாட்சிக்கு தமது அனுபவத்தில் ஏற்ப்பட்ட நாட்டு நிலைமைகளை மனக்கண்முன் கொண்டுவந்து யாருக்கு வாக்களிப்பதென்ற நிலைபாட்டினை மனதினில் நிலைபடுத்திக் கொள்ளவேண்டும்.
இன்றைய சூழலில் எண்ணிலடங்காத கட்சிகள் உருவாகி கட்சிகளும் வியாபாரமாக்கப் பட்டு விட்டது. அதுபோன்று நிறங்களில் அனைத்து நிறங்களும் ஹவுஸ் புல் போர்டு போடும் அளவுக்கு எல்லாக்கலர்களிலும் கட்சிக்கொடிகள் கம்பத்தில் பறக்க ஆரம்பித்து விட்டன.
கணக்கில்லாமல் கட்சிகள் உருவாகி அரசியலின் தகுதியையும், அந்தஸ்த்தையும், பலத்தையும் இழந்து கொண்டுவருவது வேதனைக்குரியதாக இருக்கிறது. இந்த நிலைமையில் மக்கள் தான் மிக உஷாராக இருக்கவேண்டும். யாருக்கும் விலை போய் விடாமல் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் நடந்து கொள்ள பக்குவப்படவேண்டும்.
வருமானத்திற்கு வழியில்லாதவர்களின் சிந்தனையில்கூட கட்சி ஆரம்பித்தால் காசு சம்பாரிக்கலாம் என்ற எண்ணம்வரும் அளவுக்கு அரசியல் கட்சிகள் அவல நிலையில் உள்ளது.ஆகவே பொதுமக்களாகிய நாம் தான் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும்.
ஜாதிமத பேதமின்றி நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ நினைத்தாலும் ஒரு சில சுயநலவாதிகளின் சூழ்ச்சியால் சுய இலாப நோக்கில் நம்மை பிரித்து வைப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள். அத்தகையோரை இனம்கண்டு வீழ்த்துவது நாட்டுமக்களின் கடமையாகும்.ஜனநாயகத்தை நிலைபடுத்தவேண்டும். ஜனநாயகம் நிலைபட்டு விட்டால் நமது நாடு என்றென்றும் அமைதிப் பூங்காவாக திகழும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.
அடுத்து கவனிக்கவேண்டியது தேர்தலின்போது கொடுக்கப்படும் வாக்குறுதிகளில் மயங்கி வாக்களிப்பது அறியாமையாகும். அது மக்களை திருப்திப்படுத்தி வாக்குப் பெற வேண்டி நடத்தும் சூழ்ச்சி என்றே சொல்லலாம்.ஆகவே பொதுமக்கள் தான் அனைத்தையும் தீர ஆராய்ந்து இத்தேசத்தை ஆழ்வதற்கு தகுதியான தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இன்றையகாலகட்டத்தில் நூறு சதமானம் மக்கள் நலுனுக்காக பாடுபடுவோர் அரிதிலும் அரிதாகவே தென்படுகின்றனர். இருந்தாலும் கொஞ்சமாவது பொதுநலனில் அக்கறை கொண்டு முழுக்க சுயநலவாதிகளின் கையில் நாடு சிக்கிக் கொள்ளாமல் தேசப்பற்றுடன் செயல்பட்டு, ஜாதி,இன,மத,மொழிக்கு அப்பாற்பட்டு நம்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நல்ல ஒரு தலைமையை தேர்ந்தெடுப்பது இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும். ஆகவே மக்களே அலட்சியப் போக்கு வேண்டாம். ஆழமாக சிந்திப்பீர். மக்களின்பால் இந்த தேசத்தின்பால் உண்மையான அக்கறை கொள்பவரை தேர்ந்தெடுப்பீர்.!!!
இதுதான் பொறுப்புள்ள குடிமகனின் சிறந்த அடையாளமாகும் !
அதிரை மெய்சா
அதிரை மெய்சாவின் 100 வது படைப்பு !
100 வது படைப்பு !
சமூக விழிப்புணர்வு பக்கங்கள் எனும் இத்தளத்தில் நான் சுயமாக சிந்தித்து எழுதிய விழிப்புணர்வு கவிதைகள்,கட்டுரைகள் இத்தோடு நூறு படைப்புகள் பூர்த்தியாகிறது என்பதினை வாசகர்களுக்கு மகிழ்வுடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன். மேலும் இத்தளத்தில் எனது படைப்புக்களை வெளியிட்டு வலைதள உலகில் அனைவருக்கும் அறியச்செய்து ஆதரவு அளித்துவரும் அன்பின் சகோதரர் சேக்கனா நிஜாம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை இத்தருணத்தில் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
- அதிரை மெயசா
நன்றி http://nijampage.blogspot.in
1 comment:
அதிரை மெய்சா அவர்கள் மென்மேலும் சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
Post a Comment