Thursday, March 27, 2014

இந்த தமிழ் மண்ணில் வசிக்கும் இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் வேற்று மனிதர்கள் அல்ல,

ரொம்ப காலமெல்லாம் இல்லை... கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்த தமிழ் மண்ணில் வசிக்கும் இந்துக்கள் இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் வேற்று மனிதர்கள் அல்ல, தங்கள் சொந்த ரத்தத்தில் இருந்து மதம் மாறிச் சென்றவர்கள் என்ற உணர்வும், உண்மையும் அறிந்தவர்களாகவே இருந்தார்கள். ஆனால் இன்றைய புதிய தலைமுறை இங்கிருக்கும் இஸ்லாமியர்களை எங்கிருந்தோ வந்தவர்களாக பார்க்கும் புதிய போக்கு உருவாகியிருக்கிறது. இதற்கு இன்றைய தலைமுறை இந்துக்கள்தான் காரணமா என்று கேட்டால் நிச்சயமா இல்லை... சர்வ நிச்சயமாக சத்தியமாக இஸ்லாமியர்கள் சிலரின் நடவடிக்கைகள்தான் காரணம்!

80 களின் துவக்கத்தில் அரபு நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்குச் சென்ற தமிழ் இஸ்லாமியர்களின் மூலமாக மெல்ல நுழைந்த வஹாபிசம் தமிழக மண்ணில் மதத்தோடு கலாச்சாரத்தையும் மதித்து வாழ்ந்த இஸ்லாமியர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியது.

இஸ்லாமிய நெறிமுறைகளின்படி நடக்கும் திருமணத்தில் தமிழர்களின் கலாச்சாரப்படி வாழைமரம் கட்டுதல், மாவிலை தோரணங்களால் அலங்கரித்தல் ஆகியவையும் தவறாமல் இடம்பெறும். ஆனால் வஹாபிசம் கலாச்சாரத்தையும், மதத்தையும் குழப்பி வாழை மரம் கட்டுதல் இஸ்லாத்திற்கு எதிரானது என்ற செய்தியைப்பரப்பியது. ஆனால் எனக்குத் தெரிந்து குரானில் எந்த இடத்திலும் கல்யாணத்தில் வாழைமரம் கட்டக்கூடாது என்ற சொல் இடம் பெறவேயில்லை!!

ஒருமுறை வஹாபிய நண்பர் ஒருவர் வாழைமரம் கட்டுவது இந்துக்களின் பழக்கம் என்பதால்தான் இஸ்லாமியர்களுக்கு ஆகாது என்று இதை எதிர்க்கிறோம் என்றார். எப்படி வாழைமரம் கட்டுவது குறித்து குரானில் எதுவும் சொல்லப்படவில்லையோ அதுபோலவே வாழைமரம் கட்டுவது குறித்து இந்துக்களின் நான்கு வேதங்களிலும் அது எந்த இடத்திலும் சொல்லப்படவேயில்லை.

வாழைமரம் கட்டுவது இந்துக்களின் பழக்கம் என்றால் டெல்லியில் அல்லது கல்கத்தாவில் அல்லது பம்பாயில் உள்ள இந்தும் வாழைமரம் கட்ட வேண்டும். ஆனால் தமிழகம் தவிர்த்து இந்திய நிலப்பரப்பில் எந்த இந்து வீட்டு திருமணத்திலும் வாழைமரம் கட்டப்படுவதில்லை என்பதில் இருந்தே இந்த மதப்பழக்கம் அல்ல மண்ணில் கலாச்சாரம் என்பதை உணரலாம். ஒரு மண்ணின் கலாச்சாரத்தை அந்த மண்ணில் வாழும் அனைத்து மத மக்களும் கடைபிடிக்க உரிமை உண்டு, அதில் இறை வழிபாடு எதுவும் இல்லை. அந்த மண்ணின் பழக்க,வழக்க நடைமுறைகள் மட்டுமே உண்டு. இதை எந்த மத மனிதனும் கடைபிடிக்கலாம்!

இந்தத் தமிழ் மண்ணில் ஒரு இந்து வீட்டு திருமணத்திலும் வாழைமரம் இருக்கிறது இஸ்லாமியனின் வீட்டு திருமணத்திலும் வாழைமரம் இருக்கிறது கிருஸ்துவனின் வீட்டு திருமணத்திலும் வாழைமரம் இருக்கிறது எனும்போது இவர்கள் அனைவருக்குமான தமிழர்கள் என்ற ஒரு பொது இழை இந்த அனைவரும் ஒன்றுபடுத்தும். திருமணத்தில் வாழைமரம் கட்டுவதை நான் குறிப்பிட்டு இருப்பது ஒரு உதாரணம் மட்டுமே. இதுபோல் மதத்திற்கு சற்றும் சம்மந்தம் இல்லாத நூறு உதாரணங்களை என்னால் குறிப்பிட முடியும்.


தமிழகத்தில் தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட இஸ்லாமியர்களின் திருமணத்தின் போது மணமகளுக்கு தாலியாக கருகமணி கட்டும் பழக்கம் உண்டு. உலகில் எந்த இடத்திலும் இஸ்லாமியர்களின் திருமணத்தில் தாலி அணிவிக்கும் பழக்கம் இல்லை. ஆனால் இங்கு உள்ள இஸ்லாமியர்களிடத்தில் இந்தப் பழக்கம் எப்படி வந்தது?

தமிழக இந்துக்களில் மங்களநானாக மஞ்சள் கயிறு அணிவிக்கும் வழக்கம் அனைத்து சமூகத்திலும் உண்டு. ஆனால் ஒரே ஒரு தமிழ் சமூகத்தில் மட்டும் மஞ்சள் கயிற்றுக்கு பதிலாக "கருகமணியை" தாலியாக அணியும் பழக்கம் இருந்தது. அந்தச் சமூகம் பிறமலைக் கள்ளர் சமூகம். ( இப்போது அவர்களும் மஞ்சள் கயிறு தாலி அணியும் பழக்கத்திற்கு மாறிவிட்டது வேறு விசயம்) ஆரம்பகாலத்தில் அந்தச் சமூகத்தில் இருந்தே முதன்முதலில் இஸ்லாமியர்களாக மதம் மாறத் துவங்கினர். மதம் மாறி வந்த பின்னும் தங்கள் தாய் வீட்டு பழக்கமாக திருமணத்தில் கருகமணி அணிந்த பழக்கம் நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் இஸ்லாமியப் பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது.

அதேபோல் தமிழக இந்துக்களில் ஆண்களுக்கு சுன்னத் செய்யும் வழக்கம் எந்தச் சமூகத்திலும் இல்லை. ஆனால் பிறமலைக் கள்ளர் சமூகத்தில் ஆண் குழந்தைகளுக்கு சுன்னத் செய்யும் வழக்கம் இன்றும் உண்டு!! அவர்கள் சுன்னத் செய்யும் நிகழ்வை ஒரு பெரிய வைபவமாகவே செய்வதுண்டு. அதற்கு அவர்கள் பத்திரிக்கையில் அடிக்கும் செய்தி என்ன தெரியுமா? "மார்க்க கல்யாணம்". இஸ்லாம் என்பது மதம் அல்ல மார்க்கம். இஸ்லாமியர்கள் சுன்னத் திருமணத்தை தங்கள் மார்க்க நிகழ்வு என்பதால் மார்க்க கல்யாணம் என்றே குறிப்பிடுவர். அதேபோலத்தான் பிறமலைக் கள்ளர் சமூகமும் அந்த நிகழ்வை மார்க்க திருமணம் என்றே குறிப்பிட்டு பத்திரிக்கை அடிக்கின்றனர். மதம் மாறிச் சென்ற தங்கள் பங்காளிகளின் வழக்கத்தை இரத்தம் விடாமல் செய்யும் நிகழ்வாக அவர்கள் செய்யத் துவங்கியது இன்றும் தொடர்கிறது.

இன்று எதேச்சையாக எங்க "சீயான்" எழுதிய கீழே நான் குடுத்து இருக்கக்கூடிய இந்தச் சுட்டியைப் படித்ததால்தான் இவ்வளவு பெரிய இடுகை! எந்த மதத்தில் வேண்டுமானாலும் இருப்போம். அது நம் செளகர்யம். தமிழர்களாக வேர்களை விடாது இருப்போம். அது நம் கடமை. அதை இஸ்லாமும் ஒருபோதும் எதிர்க்கவில்லை!
http://yaadhum.com/local-history-A-family.html


                                                                      M.m. Abdulla
தகவல் தந்தவர் M.m. Abdulla shared a link.



 
The history that I learned at school, did not give me the answers I was seeking, especially when it came to my roots. I realised our history has been written top down, with many local histories...

No comments: