கடந்து சென்றால்
காணலாம் என்றனர்
கடவுளை.
கடந்தகாலத்தைக்
கடக்க முடியவில்லை
கடந்தகால காயங்களைக்
கடக்க முடியவில்லை
கால்வாயைக் கடந்தால்
ஆற்றில் சிக்கிக் கொள்கிறோம்
ஆற்றைக் கடந்தால் பெருநதியின் சுழலில்
மாட்டிக் கொள்கிறோம்
பெருநதியைக் கடந்தால்
அலைகளின் ஆர்ப்பாட்டங்களில் அமிழ்ந்து போகிறோம்
அலைகளைக் கடந்தால்
கடலின் நீரோட்டங்களால் அலைக்கழிக்கப் படுகிறோம்
கடலினுற் புகுந்தாலும்
அறிந்துகொள்ளவே முடிவதில்லை
கடலின் ஆகிருதியை.
அறிதற் சாத்தியமில்லாத ஒன்றை
கடக்குதல் சாத்தியமாமோ
படைப்பின் பிரம்மாண்டமே பிரமிப்பூட்டுதே
படைத்தவன் பிரம்மாண்டம் உணரத்தகுமோ.
உடலைத்தாண்டி உள்ளம் காணாதவன்
கடந்து சென்று கடவுளைக் காண்பனோ...!!
1 comment:
முடிவில் சரியான கேள்வி...
நிஷா மன்சூர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
Post a Comment