அன்பே சிவம்
அது கல்லூரியில் படித்த பொன்மாலைக் காலம் !
PUC ... கல்லூரியின் முதல் வருடம்.
எனக்கு தமிழ் கற்பித்த அறிஞர்களில் முக்கியமானவர் பேராசிரியர் டி.என். மகாலிங்கம் அவர்கள்.
அற்புதமான தமிழறிவுக்கு சொந்தக்காரர்.
அருமையாக தமிழ் சொல்லித் தருவார். பின்னாளில் அவரது தமிழுக்கு ரசிகனாகவே நான் மாறிப்போனேன்.
அந்த வருட இறுதியில் நடந்த கல்லூரி விழாவில் " நாவுக்கரசர் " என்ற பட்டத்தை நான் அவருக்கு வழங்கினேன். சந்தோசமாக ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு நாங்கள் நண்பர்களைப்போல பழகினோம் .
அந்த ஒரு வருடத்தோடு என் தமிழ் பாடம் முடிந்து போனது. அதன் பிறகு படித்ததும் " படித்ததும் " வேறு !
டி.என்.மகாலிங்கம் அவர்கள் பொது விழாக்களிலும் கலந்து கொண்டு பேசுவார். ஆன்மீக விழாக்களிலும் பேசுவார். ஏ.பி.நாகராஜனின் தமிழைப்போல் அவர் பேசும் தமிழ் அத்தனை இனிமையாக இருக்கும். அந்த விழாக்களுக்கு என்னையும் அழைப்பார். நானும் கலந்து கொள்வேன்.
அதே கல்லூரியில் மற்றொரு தமிழ் பேராசிரியரும் பணி புரிந்தார். அவரது பெயரின் முடிவிலும் லிங்கம் இருக்கும்.
இருவருக்குமே முஸ்லிம் மாணவர்களிடம் அலாதி பிரியம் இருந்தது. அதற்குக் காரணம்... முஸ்லிம்களுக்கு தமிழின் மீது இயற்கையாகவே இருந்த காதல் !
காலங்கள் காற்றைப்போல் கடந்துபோக மாற்றங்கள் மரங்களைப்போல் முளைத்தன.
மகாலிங்கம் அய்யா எல்லோருக்கும் நல்லவராகவே வாழ்ந்தார். எல்லா மத மக்களுக்கும் நண்பராகவே திகழ்ந்தார். மற்றோருவரோ புகழ் போதையினாலோ பண போதையின் காரணமாகவோ ஒரு தீவிர இந்து அமைப்பில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். மேடைகளில் முஸ்லிம்களுக்கு எதிராக அனலை கக்கினார் .
எத்தனையோ முஸ்லிம் மாணவர்களிடம் அன்னியோன்யமாகப் பழகிய அந்த பேராசிரியர் அப்படியே முஸ்லிம்களுக்கு எதிராக மாறிப் போனது அவரிடம் பாடம் படித்த மாணவர்களுக்கெல்லாம் அதிர்ச்சியாகவே இருந்தது. சிலர் நேரிலேயே , " அய்யா தாங்களா இப்படி ..."? என்று தயங்கித் தயங்கி கேட்கவும் செய்தார்கள்.
பெரிய மீசையை முறிக்கி விட்டுக் கொண்டு அவர்களிடம் சிநேகமில்லாமலே பதில் சொன்னார் அவர்.
கட்டபொம்மன் சொன்னதுபோல் அமுதமும் விஷமும் ஒரே மண்ணில்தான் விளைகின்றன.
ஒன்று சமுதாயத்துக்கு நலன் பயக்குகிறது !
மற்றொன்று சமுதாயத்தை நாசமாக்குகிறது !
அன்பே சிவம் என்று பாடம் எடுத்தவர்களில்
ஒருவர் அன்பை எடுத்துக் கொண்டார்
இன்னொருவர் ஆயுதத்தை எடுத்துக் கொண்டார் !
இதுதான் உலகம் நமக்கு கற்றுத்தரும் பாடம் !
Abu Haashima Vaver
1 comment:
உண்மை உண்மை... அவரவர் மனதிற்கேற்ப பாடம்...
Post a Comment