மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்துக்கான ஊடகம் ஆகும். மொழியை வைத்தே ஓர் இனம் அடையாளப்படுத்தப்படுகிறது.
ஒருவன் எத்துணை மொழிகள் தெரிந்து வைத்திருக்கிறானோ, அத்துணைப் பேருக்கு அவன் சமம் ஆவான் என்பது ஒரு முதுமொழி. கருத்துகளைத் தவறின்றி வெளிப்படுத்தவும், சரியாகப் பொருள் புரிந்துகொள்ளவும் மொழி பற்றிய அறிவும், உரைநடையில் சில நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியதும் தேவையாய் இருக்கிறது.
முன்னுரையில் சொன்னதைப் போல, தமிழர்களாகிய நம்மைப் பொறுத்தவரை,
அன்னிய மொழிகளான ஆங்கிலம் உள்ளிட்டவற்றுக்கு கொடுக்கும் மதிப்பை, மரியாதையை தாய்மொழியான தமிழுக்கு வழங்குகிறோமில்லை.
காட்டாக, ஆங்கிலத்தில் ஒரு சிறு கடிதம் அல்லது விண்ணப்பம் எழுதவேண்டுமானால், எவ்வளவு அலட்டிக்கொள்கிறோம்!, ஆக்ஸ்போர்டு அகராதி, ரென் அண்ட் மார்ட்டின் கிராமர் போன்ற நூல்களைப் புரட்டுகிறோம்; ஆங்கிலம் அறிந்தவர்களிடமும் ஆசிரியர்களிடமும் சரி, தப்பு கேட்டறிகிறோம். கணினியில் Spell Checkகும் செய்கிறோம். அம்மம்மா, எத்துணை உழைப்பு, எப்பேர்ப்பட்ட கவனம், எத்துணை அச்சம்.
இவ்வளவும் ஏன் என்றால் படிப்பவர்கள் தன்னுடைய ஆங்கிலத்தை நகைத்துவிடக்கூடாது என்ற அச்சத்திலும் ஆவலிலும் தான். தவறில்லை.அந்த எண்ணத்தைத் தவறு என்று சொல்ல இயலாது.
ஆனால், தாய்மொழியாம் தமிழில் தான் நமக்கு என்னவொரு அலட்சியம். யாராவது தவறுகளைச் சுட்டிக்காட்டினால் கூட ஆத்திரப்படுகிறோம். அதனால் தான், ஆங்கிலத்தில் எழுதப்படும் மலிவு விலை நாவல்களுக்கும் இலக்கிய மதிப்பீட்டை வழங்க ஆயத்தமாயிருக்கிற நாம்(உலகத்தார்), தமிழில் அருமையான கருத்துகளே வெளிவருவதைக் கண்ணுற்றாலும் அதிற் காணப்படும் பிழைகளால் நாமே மதிப்பிழக்கச் செய்துவிடுகிறோம்.
இறைநாட்டமிருப்பின், இக்கட்டுரைத் தொடர், தமிழில் தப்புந்தவறாக எழுதுவதை தவிர்க்கச்செய்வதாகவும், நல்ல தமிழைக் கற்கத் தூண்டுவதாகவும் அமையும் என்று நம்புகிறோம். இப்படிச் சொல்வதால் இக்கட்டுரை ஆசிரியராகிய நாம், 'ஆசிரியர்' ஆகிவிடமாட்டோம்.ஏனெனில், குறைகள் எதுவும் இல்லாதவன் இறைவன் ஒருவனே (முஸ்லிம்கள் 'சுப்ஹானல்லாஹ்' என்று சொல்வதன் அடிப்படைக் கருத்து) என்பதை நம்புவதால், நம்மிடமும்; நம்மொழியிலும் தவறுகள் இருக்கக்கூடும் என்பதையும், எந்நிலையும் நாம் மாணவரே என்பதையும் உணர்ந்தே இருக்கிறோம். எனவே, நாம் சறுக்குமிடங்களில், வாசகர்கள் தம்முடைய கருத்துகளைத் தாராளாமாகச் சுட்டலாம். சுட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
"மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்" என்பது தமிழின் தொன்மையான இலக்கணநூலான தொல்காப்பியத்தின் எச்சரிக்கை/அறிவுரை.
ஆகவே, மரபு வழுவாமல், பொருள் திரியாமல் தமிழில் எழுதுவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
ஓர் எளிய எடுத்துக்காட்டு ஒன்றை இங்கு சொல்ல விரும்புகிறோம்.
காலை எழுந்தவுடன் குடிப்பது
இவற்றுள் எது சரி?
Fakhrudeen Ibnu Hamdun
No comments:
Post a Comment