Sunday, January 5, 2014

தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்

" யாதும் " இயக்குனர் அன்வரின் உழைப்பில் வெளிவந்திருக்கும் தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். அதை ஒரு ஆவணக் குறும்படமாக தமிழ் முஸ்லிம்களுக்கு தந்திருக்கும் அன்வரின் பணியை பாராட்ட வார்த்தைகள் போதாது.
அன்வரின் சொந்த ஊர் தேனீ மாவட்டத்திலுள்ள கோம்பை. அங்கிருந்தே தனது " வேர்களை"த்தேடி பயணிக்கிறார் அன்வர். கோம்பை பள்ளிவாசலில் ஒலிக்கும் பாங்கொலியோடு அவரது பயணம் தொடர்கிறது.

" நாங்கள் நாயிடு வகுப்பைச் சேர்ந்தவர்கள். எங்கள் ஊருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த முகமது மைதீன் வாத்தியார் வருவார். முகமது மைதீன் வாத்தியாரை எங்கள் ஊரில் தெரியாதவர்கள் யாரும் கிடையாது. நாங்களெல்லாம் அவரை மாமா என்றுதான் அழைப்போம். அவரும் தன்னைவிட வயதில் மூத்தவர்களை மாமா என்றுதான் அழைப்பார். நான் " வருஷ நாட்டு ஜமீன் " என்ற எனது நாவலை எழுத எனது சொந்த மாவட்டமான தேனீ மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். அங்கெல்லாம் முஸ்லிம்களும் நாயுடுகளும் மாமன் மச்சான் உறவு முறையோடுதான் பாசத்தோடு பழகி வருகிறார்கள். எங்கள் குடும்பத்தில் பெண்பிள்ளைகளின் பூப்புனித நீராட்டுக்கு தாய்மாமன் கொடுக்கும் சீர்வரிசை முக்கியமானது. என் சகோதரியின் பூப்புனித நீராட்டுக்கு முகமது மைதீன் வாத்தியார் பூ, பழம்,தேங்காய்,துணிமணியோடு கருகமணி மாலையும் ஒரு தட்டில் வைத்துத் தந்து தன் தாய்மாமா உறவை உரிமையோடு நிலை நாட்டிக் கொண்டார். இந்த பாசத்தையும் உறவையும் யாராலும் பிரிக்க முடியாது " என்று சொல்கிறார் பிரபல எழுத்தாளர் பொன்சீ.


 அன்வரின் பயணம் கேரளாவின் கொடுங்கல்லூரிலுள்ள பழமை வாய்ந்த பள்ளிவாசலின் அழகை நமக்குப் பருகத்தந்து கேரளாவின் மலபார், கோழிக்கோடு கொச்சி போன்ற பகுதிகளுக்கும் நம்மை அழைத்துச் சென்று கலைநயமிக்க பள்ளிவாசல்களைக் காட்டி நம்மை கண்குளிர வைக்கிறது. கோழிக்கோட்டில் ஒரு நாலு அடுக்கு பிரம்மாண்ட பள்ளிவாசல் முழுக்க முழுக்க கேரளத்து மரங்களாலேயே கட்டப்பட்ட அதிசயம்... கோழிக்கோடு சாமிரி மன்னர்களின் கடல் தளபதிகளாக இருந்த குஞ்சாலி மரைக்காயர்கள் என்ற மாப்பிள்ளைமார்களின் வீரம் செறிந்த வராலாறுகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. கி.பி. 10 நூற்றாண்டு கல்வெட்டுக்களிலேயே " அஞ்சுவன்னம்" என்ற சொல் குறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1000 வருசத்திற்கு முந்திய தஞ்சை பெரிய கோயில் சுவர்களில் ராஜராஜ சோழன் செதுக்கி வைத்த கல்வெட்டில் " சோனகர் " என்றும் " துலுக்கர் அகமது " என்றும் பொறிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. திருச்சியில் 1000 வருடங்களுக்கு முன்னாலேயே வந்து இஸ்லாத்தைப் பரப்பிய " நத்தர்ஷா வலியுல்லாஹ் " வின் அடக்கவிடத்திற்கு இன்றும் ஜாதிமத பேதமின்றி மக்கள் ஏராளமாக வந்து செல்கின்ற காட்சியையும் அவர்கள் அன்பால் மக்களைக் கவர்ந்த வரலாறுகளையும் உணர முடிகிறது. அதுபோல் 16 ம் நூற்றாண்டில் நாகூரில் சாகுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களால் தஞ்சை மன்னன் நோய் நீங்கப்பெற்றதும் மன்னர் மட்டுமன்றி செட்டியார்களும் அங்கேயுள்ள மக்களும் மகான் அவர்களின் இறைப்பணிக்காக வாரி வழங்கிய சொத்துக்களும் இன்றும் இஸ்லாமியப் பெரியார்களின் மாண்புகளை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. மதுரையில் " புட்டுக்கு மண்சுமந்த சிவபெருமானின் " திருவிழாவுக்கு மைதீன் என்பவர் பரம்பரை பரம்பரையாக வேள்வி வேலி அமைப்பதும் அவருக்கு கோயில் நிர்வாகமும் மக்களும் மரியாதை செய்வதும் மதநல்லிணக்கத்தின் வெளிப்பாடாக இன்றும் நடை பெற்றுவருவது ஆறுதலாக இருக்கிறது. ஆழ்வார்திருநகரி, பழவேற்காடு என்று அன்வரின் கேமரா அழகாகப் பயணிக்கிறது. பவுத்திர மாணிக்கபுரம் என்று அழைக்கப்பட்ட கீழக்கரையில் அமைந்திருக்கும் 1000 வருசத்திற்கு முந்திய கல்லுப்பள்ளி திராவிட கட்டிடக் கலையின் அழகை அப்படியே கண்ணுக்குள் கொண்டு வைக்கிறது. அத்தனை பிரம்மாண்ட அழகு அதில் குவிந்து கிடக்கிறது. தெற்கே காயல்பட்டினம் கடற்கரையின் துறைமுக வரலாறை சொல்லி மாறவர்ம குலசேகர பாண்டியனின் கல்வெட்டையும் காட்டி காயலில் முஸ்லிம்களில் ஆயிரம் வருசத்துக்கு முந்திய வரலாற்றை அன்வர் அழகாக காட்டி இருக்கிறார். குமரிமாவட்டம் கோட்டாறில் 600 வருடங்களுக்கு முன்னால் ஆலிப்புலவர் மிஹராஜ் மாலை அரங்கேற்றம் செய்த செய்யது பாவாகாசிம் வலியுல்லாஹ் அவர்களின் பள்ளியைக் காட்டி அண்ணன் குமரி அபூபக்கர் அவர்களின் கம்பீரக் குரலால் " உருவிலியாய்... உணவிலியாய் .... " என்று மிஹ்ராஜ் மாலையில் அல்லாஹ்வைப் புகழ்ந்து வரும் வரிகளைப்பாட வைத்திருப்பதைக் கேட்கும்போது உள்ளம் உருகி விடுகிறது. "நெல்லைமாவட்டம் உவரி என்ற மீனவர்கள் வாழும் ஊரைச் சேர்ந்தவரும் இந்த ஆண்டு " சாகித்ய அகாடமி " விருது பெற்றவருமான ஜோய் டி . குரூஸ் சொல்கிறார்.... " நான் நாலாம் வகுப்புப் படிக்கும்போது எங்க ஊருக்கு ஒரு முஸ்லிம் பெரியவர் " மஸ்கூத் அல்வா " என்று கூவிக்கொண்டே வருவார். அந்த மனிதர் எங்கள் வீட்டு அடுக்களை வரை சென்று தட்டில் சோறும் மீனும் எடுத்து வைத்து சாப்பிடுவார். என் பாட்டி அவருக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்து உபசரிப்பார். பிறகு அவரே ஒரு பாயை எடுத்துப்போட்டு உறங்கி மாலையில் எழுந்து செல்வார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். யாரோ ஒருத்தர் இப்படி உரிமையோடு நம் வீட்டுக்குள் நுழைந்து உணவு உண்டு உறங்கிச் செல்கிறாரே என்று. அதன் பிறகுதான் வீட்டில் விவரம் சொன்னார்கள். அந்த அளவுக்கு முஸ்லிம்களும் நாங்களும் நெருக்கமான உறவு உள்ளவர்கள். எந்த முஸ்லிம்களையும் " சாச்சா ..சாச்சி " என்ற உறவுச் சொல்லைத் தவிர வேறு சொல் கொண்டு நாங்கள் அழைப்பதேயில்லை. அவங்களுக்கு ரம்ஜான் வந்தால் எங்களுக்குப் பெருநாள்தான் " என்று உணர்ச்சி ததும்பஎழுத்தாளர் குரூஸ் கூறுவதைக் கேட்டு நமக்கு மெய் சிலிர்க்கிறது.

 இப்படி அன்பையும் மத நல்லிணக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு அன்வரின் வேர்களைத் தேடி அலையும் பயணம் முடியவில்லை... இன்னும் தொடர இருக்கிறது. அன்வர் எனக்கு 2003ல் அறிமுகம் ஆனார் . சென்னை இலக்கிய மாநாட்டில் சந்தித்தோம் . நான் எழுதிய " பெட்டகம் " நூலைக் கொடுத்தேன். முஸ்லிம்களின் வரலாறுகளை படமாக எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் அதிகமாக இருந்தது. சில வருடங்களுக்கு முன்னால் அவர் நாகர்கோயிலுக்கு வந்தார். அவருக்கான தகவல்களைத் தந்து பாவாகாசிம் பள்ளியை படமெடுக்கவும் உதவினேன். அதன் பிறகு குமரி அபூபக்கர் அண்ணனையும் அழைத்துவந்து படபிடிப்பு நிகழ்த்தினார். இதில் ஒரு நெகிழ்ச்சியான விஷயம் ... அன்று அன்வர் படமெடுக்கும் போது மிஹ்ராஜ் மாலை பாடிய எங்கள் ஊர் பிலால், "சாயிபு மாமா" அவர்களை இந்தப் படத்தில் பார்த்து மனம் கலங்கி விட்டேன். அவர்கள் இப்போது உயிரோடு இல்லை. அன்வரின் " யாதும் " அழகாக இருக்கிறது. வரலாறு சொன்ன விதம அருமையாக இருக்கிறது. ஒளிப்பதிவு கண்ணுக்குள் ஒற்றிக் கொள்ளலாம் போல அவ்வளவு அழகாக இருக்கிறது. பலமுறை பார்க்கலாம். அன்வரின் இந்த படத்தை ஆதரிக்கவும் விலைக்கு வாங்கி ஊக்குவிக்கவும் முஸ்லிம்கள் கடமை உள்ளவர்கள். இவரைப்போன்றவர்களை ஆதரிக்கவில்லையென்றால் அது சமூகத்து பெரும் கைசேதம். வெளிநாட்டில் வாழும் முஸ்லிம்களும் இவரை அழைத்து நிகழ்சிகளை நடத்தி ஆதரவு கொடுக்க வேண்டும். முடிவாக... படத்தின் இறுதியில் வரும் டைட்டில் கார்டில் நன்றி வரிசையில் என் பெயரும் வருவதைப் பார்த்து மனம் நெகிழ்ந்து விட்டேன். இந்த அற்புதப் படைப்பில் என் சிறு உதவியையும் மறவாமல் என்னையும் நினைவு கூர்ந்த அன்வருக்கு நன்றியும் வாழ்த்துக்களும். படங்கள் யாதும் குறும்படத்தை நடிகர் நாசர் வெளியட்டுப் பேசுகிறார் டைரக்டர் அன்வர் பேசுகிறார் கீழக்கரை பள்ளியின் எழில்மிகு தோற்றம் @ மேலும் தொடர்புக்கு :  www.yaadhum.com அன்வரின் மொபைலுக்கு பேச : 94 44 07 71 71
Abu Haashima Vaver
The film is about Tamil Muslim history and identity, and how Islam took early roots in the Tamil country, even as it was spreading across the Arabian peninsula and beyond. The story is told through Kombai S. Anwar's perspective, and covers archaeological excavations, inscriptions, old mosques built in the architectural traditions of Tamil Nadu & Kerala, literature and interviews with well known historians. The film showcases more than a millennium old harmonious co-existence of Islam in Tamizhagam. The Tamil Jains, Buddhists, Saivites, Vaishnavites, Muslims and Christians have enriched Tamil. Listen to melodious songs from Tamil Islamic literature being sung in Carnatic by Isai Murasu Seera Aboobacker and Kaviko Abdul Rahman speaking about the Tamil Islamic literature. Excerpts from my film 'Yaadhum
 Kombai S Anwar

No comments: