இந்தியாவில் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் மற்ற சமுதாயத்தினரைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகியவை பரிந்துரைத்திருக்கின்றன.
சிறுபான்மையினருக்கு 15% வரை இடஒதுக்கீடு கொடுக்க இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திலும் விதிமுறைகள் இருக்கின்றனவாம்.
கமிஷன் அறிக்கைகள் வெளியானபிறகு கிட்டத்தட்ட எல்லா இந்திய இஸ்லாமிய அமைப்புகளுமே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி, மாநாடு என நடத்திக் கொண்டுள்ளன. குறிப்பாக தமிழக இஸ்லாமிய அமைப்புகள் இக்கோரிக்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் சமுதாய முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீட்டை விட்டால் வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அரசியல்வாதிகளும் தங்கள் மனோநிலை, அரசியல் சூழல், நெருங்கி வரும் தேர்தல் போன்ற காரணிகளுக்கேற்ப ஏதாவது அறிக்கைகள் விடுவதும் ஒப்புக்குச் சப்பாணியாக சில திட்டங்களை அறிவிப்பதும் பிறகு அதை திரும்பப் பெறுவதுமாக 'அரசியல்' பண்ணிக் கொண்டுள்ளனர்.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல தலைமுறைகளாக தமது மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட அதிகமாகவே உயிர்த்தியாகம் செய்து போராடிய முஸ்லிம் சமுதாயம் இன்றைய சுதந்திர இந்தியாவில் தமக்கான சலுகைகளைக் கோர முழு உரிமையும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும் சமுதாயத்தின் விருப்பப்படி இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு விட்டால் அது சமுதாய முன்னேற்றத்திற்கு எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பதை அலசி ஆராய வேண்டியதும் அவசியம்!
இடஒதுக்கீட்டினால் இஸ்லாமிய சமுதாயத்திற்குக் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?
பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவர்களுக்கு சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுமானால், பள்ளிப்படிப்பில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் அதிக போட்டி இல்லாமல் மேற்கண்ட உயர்நிலை கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்படும்.
அதேபோல, அரசு சார்ந்த பணியிடங்களில் குறிப்பிட்ட சதவிகிதம் முஸ்லிம்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுமானால் அந்தந்தப் பணிகளுக்குத் தகுதியுடைய படித்த முஸ்லிம் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது சுலபமாகி விடும். அரசாங்க வேலை கிடைப்பது சுலபம் என்றால் அது படிப்பில் ஆர்வமின்றி இருக்கும் இளைஞர்களும் பட்டப்படிப்பு வரையாவது தொடர்ந்து படிக்க தூண்டுகோலாக இருக்கும். இதனால் சமுதாயத்தில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். பள்ளிப்படிப்பைக்கூட சரிவர முடிக்காமல் வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி பயணிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை ஓரளவிற்காவது குறையலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள் இந்தியாவில் நடத்திய ஒரு ஆய்வில் அதிர்ச்சி தரும் ஒரு உண்மை வெளிப்பட்டது(http://www.satyamargam.com/673). இந்த ஆய்வுக் குழுவினர், பத்திரிக்கைகளில் வெளியான பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு வெவ்வேறு பெயர்களில் சுமார் 4,800 வேலை விண்ணப்பங்களைப் பல நிறுவனங்களுக்கும் அனுப்பினர். கிட்டத்தட்ட ஒரே அளவிலான தகுதிகளை உடைய விண்ணப்பங்களைத் தயாரித்து, அவற்றிற்கு உயர் சாதி, தாழ்ந்த சாதி மற்றும் முஸ்லிம் பெயர்களை இட்டு, அவற்றை இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவர்கள் அனுப்பினர். இவற்றிற்கு வந்த பதில்கள்தான் இந்தியத் தனியார் தொழிற்துறை நிறுவனங்களிடையே சாதி, இன பாகுபாடுகளும் பாரபட்சமான மனப்போக்கும் எந்த அளவிற்குப் புரையோடிப் போயுள்ளது என்பதை வெளிப்படுத்தியது.
இவ்வாறு 'விண்ணப்பித்த' தலித் ஒருவர் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் வாய்ப்பு, கிட்டத்தட்ட அதேத் தகுதியை உடைய ஒரு உயர்சாதியினருக்குக் கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் இரண்டு பங்குதான். முஸ்லிம் 'விண்ணப்பதாரர்களின்' நிலைமையோ இன்னும் மோசம். உயர்சாதி இந்துக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கே முஸ்லிம்களுக்குக் கிடைத்தது.
அரசு சார்ந்த பணியிடங்களில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுமானால் இந்த அவலநிலைக்கு ஒரு தீர்வு பிறக்கலாம்.
நிற்க!
மேற்கண்ட சலுகைகளால் பலனடையக் கூடியவர்கள் பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்வியைத் தொடர வாய்ப்பும் வசதியும் உள்ள மாணவர்களும், உயர்கல்வியை முடித்து உள்நாட்டிலேயே வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களும்தான்! சச்சார் கமிஷன் அறிக்கையின்படி முஸ்லிம்களில் 7.2 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள். அதிலும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வெறும் 1.2 சதவிகிதத்தினர் மட்டுமே. இடஒதுக்கீடு என்பது சுமார் 95% வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நலிவடைந்த இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பலனளிக்கக்கூடியது! அப்படியானால் பெரும்பான்மையான மற்றவர்களின் நிலை?
தொடர்ந்து அலசுவோம் இன்ஷா அல்லாஹ்..
கட்டுரை: சகோதரர் சலாஹுத்தீன்
< பகுதி-1
Source : http://www.satyamargam.com/
No comments:
Post a Comment