Tuesday, January 21, 2014

கவிதைகளும் நானும்

கவிதைகளுக்காக வாழ்க்கையா
அல்லது
வாழ்க்கைக்கு
வணக்கம் செலுத்துவதாய்க்
கவிதைகளா?

ஆயுளெனும் பெரும்பாலையில்
அவ்வப்போது வாழ்க்கை
கவிதைகளாய்த் துளிர்க்கவே செய்கிறது

அதன் தித்திப்பு முத்தங்களும்
திரும்பியோட ஏங்கும் நினைவுகளும்
விழிகளெங்கும் கவிதைகளாய்ப்
பொழுதுக்கும் வேர் விரிக்கின்றன

உணர்வுகளின் உயிர்ச் சிறகுகளை
ஈரம் உலராமல் எடுத்துப் பதித்துக்கொண்ட
இதயக் கணங்களாய்க் கவிதைகள்

மனதைத் தோண்டத் தோண்ட
சின்னச் சின்னதாய்
ஞான முட்டைகள் உடைந்து
கவிதைக் குஞ்சுகள் கீச்சிட்டிருக்கின்றன

கவிதைகளைத் தோண்டத் தோண்ட
சின்னச் சின்னதாய்
எண்ணப் பொறிகள் சிதறி
மன முடிச்சுகள் அவிழ்ந்திருக்கின்றன

தீபத்தைத் தொட்டால்கூட
சுடாமல் போகலாம்
தீபம் பற்றிய கவிதையோ
சத்தியமாய்ச் சுடும்

புயலைப் புரிகின்ற மொழியில்
மொழிபெயர்க்கவும் செய்யும்
அதை வளைத்துப்
பெட்டிக்குள் இடும் சாமர்த்தியத்தைப்
பூந்தென்றல் வரிகளில்
பதுக்கிவைக்கவும் செய்யும்

கவிஞனின்
பிரம்மாண்ட எழுச்சி
கவிதை
கவிதைகளின் பித்தன்
கவிஞன்

கவிதைக்கும் மனத்திற்கும்
இடைவெளி இல்லை
ஏனெனில்
அது என்னுடைய இயல்பு

கவிதைக்கும் வாழ்க்கைக்கும்
ஏராளமான இடைவெளி
ஏனெனில்
அது வாழ்க்கையின் இயல்பு

வாழ்க்கையை வளைத்து
கவிதை ரதம் ஏற்றும்
தவ முயற்சிகளே
கவிதைகளாயும்
நிகழும் வாழ்க்கையாயும்
என்னோடு
நன்றி http://anbudanbuhari.blogspot.in/

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த பித்தம் நல்லது தான்...

வாழ்த்துக்கள்...