Sunday, January 12, 2014

சுய முன்னேற்றமும் சமூகமும்..!!



"அப்பா அம்மா சொத்து இல்லாம/ அவங்க தயவு இல்லாம
சுயமாகச் சம்பாதித்து முன்னேறினவங்களை மட்டுந்தான்
நான் மனுசனா ஒத்துக்குவேன்." என்று இருவர் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தபோது மிகச்சரியாக அப்பா வாழ்ந்த வீட்டைக் கடந்துகொண்டிருந்தேன்.

சுயமாகவா இந்த உலகத்தில் ஜனித்தோம்..??
சுயமாகப் பாலருந்தினோமா..??
சுயமாக வளர்ந்தோமா..??
சுயமாகக் கல்வி கற்றோமா..??
சுயமாக இந்த உலகத்தை தரிசித்தோமா..??

வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் ஒட்டுமொத்த சமூகம்தான் பாடம் கற்றுத்தந்து வழிநடத்துகிறது.
தளர்ந்து சரியும் ஒவ்வொரு தருணங்களிலும் யாரென்றே தெரியாத பற்பல கரங்கள் தாங்கிப் பிடித்து நிலைநிறுத்துகின்றன.
ஒரு மனிதனாகட்டும்,நிறுவனமாகட்டும்,பிராண்டாகட்டும், வீடாகட்டும், கட்டிடமாகட்டும் எதுவாகிலும் ஒரு ஒற்றை மனிதனின் சுயமுயற்சியில் சாத்தியமாகுமா..??

ஊரேகூடித்தான் தேர்கள் இழுக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன,
ஆனால் சில ஒற்றைமனிதர்கள்
முன்னிலைப் படுத்தப் படுகிறார்கள்.

ஒவ்வொரு தனிமனித பெருமிதத்துக்குப் பிறகும் ஒரு குழுவின் உழைப்பு பொதிந்து கிடக்கிறது.
நீங்கள் உடுத்தி மகிழும் ஒவ்வொரு வேட்டிக்குள்ளும் நூறு மனிதர்களின் உழைப்பும் வியர்வையும் ஊறி உறைந்துள்ளது.
நீங்கள் ஓட்டி மகிழும் வாகனத்துக்காக பலநூறு மனிதர்கள் உறங்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒற்றை மனிதனின்மேல் படரும் வெளிச்சம் பரவி சமூகம் முழுவதும் படரட்டும்.
சுய முன்னேற்றம், சமூக முன்னேற்றமாக மலரட்டும்..!!

-நிஷா மன்சூர்Nisha Mansur

No comments: