ஆக்கம் :Abdul Gafoor
மனசில் படருகிற
சரித்திர நிகழ்வுகளை
தொகுத்து தொடருகிற
இரண்டாம் பதிவு ....
இடக்கை வலக்கை மாற்றி உலக்கை கொண்டு உரல்களில் இடித்த அரிசி மற்றும் கோதம்பு போன்ற மாவுகள் கலந்து உருவாகிய உணவு பதார்த்தங்களை பெரும்பாலோரின் நாவுகள் மென்று சுவைத்திடாத எழுபதுகளும் எண்பதுகளும் நினைவெனும் யதார்த்தங்களை நமது உள்ளங்களுக்கு விருந்தாய் பரிமாறுகிறது ....
உலைகளில் இட்டு வடித்திட ரேஷன் அரிசியும் சின்ன கும்பாக்களில் ஊற்றி குடித்திட பழங்கஞ்சியும் வயிற்று பசியாற்ற அவித்த மரச்சீனி கிழங்குகளும் குடும்பமெனும் நீரோட்டங்களில் சங்கமமாகி நீக்கமற அங்கம் வகித்தது ....
கல்வி கற்ற ஏடுகளை படித்து
அவைகளால் விளைந்த அறிவால்
பணிகள் செய்து சம்பாதிக்க மடித்து
சும்மா உலவிய இளைஞர்களின்
குடும்பங்களில் கஷ்டமெனும் காற்றடித்து அது திசைகள் மாறாது அங்கேயே குடியமர்ந்து புயலாய் மாறி வேகமாக சுழலன்றாடியது ....
நிர்கதியான இந்த ஏக்கமான சூழலில் எங்கிருந்தோ மிதந்து வந்து 'அரேபியா' என்று நமது காதுகளில் ஒலித்த அந்த அழகிய நான்கெழுத்து வார்த்தை வலித்த மனசுகளால் துவண்டு போன மனிதர்களை தென்றலாய் தழுவி வண்டு போல் சுற்றியது ....
அந்த காலத்தில் சுவாரசியம் நிறைந்த திண்ணைப் பேச்சுகளிலும் ஆங்காங்கே இருந்த டீக்கடை பெஞ்சுகளிலும் ஜங்ஷன்களின் வாடகை சைக்கிள் கடைகளிலும் கூடியமர்ந்த மக்களின் வாய்களிலும் உதடுகளிலும் தலைப்புச் செய்திகளாய் உருண்டு பரபரப்பை ஏற்படுத்தியது ....
கல்வி இறுதியாண்டில் எழுதிய பரீட்சைகளில் அதிகம் தேறாத மற்றும் தலைக்குள் படிப்பு ஏறாத மாணவர்கள் தங்களது புத்தகக் கட்டுகளை அவரவர் வீட்டின் பரண்களில் எறிந்ததும் அவைகள் சுகமாக உறங்கியது ....
வெளிநாடு செல்ல அனுமதி வழங்கும் கடவுச் சீட்டுகளை பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தோடு மெட்ராஸ் சென்று பெற்றுக் கொண்டதும் அவைகள் ஒவ்வொருவரின் கரங்களில் உற்சாகமாக கிறங்கியது ....
அன்றைய காலங்களில் எட்டா ஆயிரமான எட்டாயிரம் ரூபாயும் கூடுதலாக கொஞ்சம் லஞ்சம் செலுத்திட பணமில்லாது தவித்த வேளையில் தத்தமது குடும்பத்து பெண்மணிகளின் கழுத்திலும் காதுகளிலும் கைகளிலும் கொஞ்சமாய் தொங்கிய தங்க நகைகள் வங்கி பெட்டகங்களில் வட்டிக்கும் விற்பனைக்கும் தங்கி இளைப்பாறியது ....
நம்மவர்களை அரேபியாவுக்கு அனுப்பிட ஆள்களை தேர்ந்தெடுக்க நமதூர்களில் ஏஜெண்டுகளாய் நடமாடியோர் தங்களது கைகளில் தாள்களை எடுத்து வளைகுடா செல்வோரின் பெயர்களை பதிவு செய்து பயணிக்க தேதிகளையும் குறித்தனர் ....
சில நாட்கள் கழித்து நமது பயண நிலைகள் என்னா என்று நாம் கேட்க ஏஜெண்டுகளும் அன்னா இன்னா என்று நம்மை அங்குமிங்கும் இழுத்தடித்தனர் ....
பலவாறான தள்ளல்களுக்கு பின்னர் இந்திய துணைக் கண்டத்தின் நுழைவு வாயிலான பம்பாய் நகரத்திற்கு மனச் சுமைகளோடும் உடமை சுமைகளோடும் ரயில்களில் ஏறி அப்பாடா என்று இருக்கைகளில் அமர்ந்ததும் குடும்பங்களில் எழுந்த பிரச்சனைகள் தங்களது உள்ளங்களை அம்பாய் குத்தியது ....
ஒவ்வொருவரின் எதிர்கால சிந்தனைகளும் நகர்ந்து செல்லும் ரயிலோடும் கடக்கும் ஊர்களோடும் தென்படும் கட்டிடங்களோடும் இயற்கை காட்சிகளோடும் இரவோடும் பகலோடும் கலந்தாடி பயணித்தது ....
இன்னும் விரிகிறது
இன் ஷா அல்லாஹ்
காத்திருங்கள் நட்புகளே ....
அப்துல் கபூர்
02.08.2019 ....
- வெளிநாட்டு சம்பாத்தியங்களும் சமுதாய முன்னேற்றங்களு...
- .அப்துல் கபூர்
- ...26.07.2019 ....
No comments:
Post a Comment