வாரும் வள்ளுவரே,
மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர்?
மரம் என்றீர்!
மரம் என்றால் அவ்வளவு மட்டமா?
வணக்கம், அவ்வையே!
நீட்டோலை வாசியான் யார் என்றீர்?
மரம் என்றீர்!
மரம் என்றால் அத்தனை இழிவா?
பக்கத்தில் யாரது பாரதிதானே?
பாஞ்சாலி மீட்காத பாமரரை என்னவென்றீர்?
நெட்டை மரங்கள் என்றீர்!
மரங்கள் என்றாள் அவ்வளவு கேவலமா?
மரம் சிருஷ்டியில் ஒரு சித்திரம்,
பூமியின் ஆச்சர்யகுறி!
பிறந்தோம்...
தொட்டில், மரத்தின் உபயம்,
நடந்தோம்...
நடை வண்டி, மரத்தின் உபயம்,
எழுதினோம்...
பென்சில், மரத்தின் உபயம்
மணந்தோம்...
மாலை , சந்தனம், மரத்தின் உபயம்,
கலந்தோம்...
கட்டில், மரத்தின் உபயம்,
துயின்றோம்...
தலையனை பஞ்சு, மரத்தின் உபயம்,
நடந்தோம்...
பாதுகை ரப்பர், மரத்தின் உபயம்,
இறந்தோம்...
சவப்பெட்டி, பாடை, மரத்தின் உபயம்,
எரிந்தோம்...
சுடலை விறகு, மரத்தின் உபயம்,
மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்,
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்,
மனிதா மனிதனாக வேண்டுமா
மரத்திடம் வா...
ஒவ்வொரு மரமும் போதி மரம்.
No comments:
Post a Comment