Friday, August 30, 2019
லயோலா கல்லூரி கருத்தரங்க அனுபவப் பகிர்வு..! #நிஷாமன்சூர்
"தமிழ் வளர்த்த இசுலாமியர்கள்" என்கிற தலைப்பில் இரண்டு நாட்கள் கருத்தரங்கை லயோலா கல்லூரி பல்சமய உரையாடல் துறை ஏற்பாடு செய்திருந்தது. அதில் முதல் ஆய்வுக் கட்டுரையாக குணங்குடி மஸ்தான் அப்பாவின் ஞானப் பாடல்கள் குறித்த "தமிழின் ராஜபாட்டையில் பவனி வரும் பரமுத்தன் குணங்குடி" கட்டுரையை நான் சமர்ப்பித்து உரையாடினேன்.
பொதுவாக கட்டுரையை வாசித்து,அதனைப் பார்வையாளர் செவிமடுப்பது என்பது அந்தக் கட்டுரைக்கு இழைக்கப்படும் அநீதி என்பது என் கருத்து. ஏனெனில் சொற்களை மட்டும் அல்ல, சொற்களுக்கு இடையில் பொதிந்திருக்கும் மெளனத்தையும் வரிகளுக்கு இடையே பதுங்கியிருக்கும் உரையாடலையும் கவனத்தில் கொண்டு வாசிப்பவரின் வாழ்வனுபவங்களூடே புதிய பரிணாமத்தில் உருவாக்கிக் கொள்பவைதான் கட்டுரைகளின் கருத்துகள். அவ்வாறில்லாமல் வாசிக்கக் கேட்பது பலவீனமான உரையாடலே ஆகும்.
ஆகவே கட்டுரையை அப்படியே வாசிக்காமல்
கிட்டத்தட்ட 23 பக்கங்கள் கொண்ட ஆய்வுக் கட்டுரையின் சாரத்தை ஓரளவு பேசியிருப்பேன் என்று நம்புகிறேன்.வாசிப்புக்குப் பிறகான உரையாடல் கருத்தரங்கின் கடைசி அமர்வு வரை தொடர்ந்து கொண்டே இருந்தது என்பது ஆரோக்கியமான செயல்பாடாக இருந்தது.
குணங்குடி அப்பாவின் வாழ்வு, அவர்களது குருமார்களின் வரிசை, குருமார்களின் இலக்கியப் பங்களிப்பு, அரபுத்தமிழ் எனும் அர்வி இலக்கியத்தின் தோற்றமும் படைப்புகளின் வரிசையும் ஆகிய விபரங்களுடன் தொடங்கி அப்பாவின் பாடல்களில் மிளிரும் கவித்துவத்தையும் ஆன்மீக மெஞ்ஞான கருத்துகளையும் குறிப்பிட்டதுடன் அவற்றில் உள்ள வாசியோகக் குறிப்புகள் மற்றும் பிரார்த்தனைகள் என்று பல கோணங்களில் ஆய்வுக் கட்டுரை நகர்கிறது.
கூடவே பாரசீக ஞானமரபின் கூறுகளையும் முஹையத்தீன் ஆண்டகை அவர்களின் ஆன்மீக ஆளுமையையும், மெளலானா ரூமி,அன்னை ராபியத்துல் பஸ்ரியா,அப்துல் கரீம் ஜீலி,
மாப்பிள்ளை லெப்பை ஆலிம், கல்வத்து நாயகம் (ரலி-அன்ஹும்) ஆகிய மாபெரும் ஞானியர்களின் நீட்சியையும் கலந்து அப்பாவின் பாடல்களின் போக்கையும் ஆன்மீக நெறிகளையும் உணர முற்பட்டது கட்டுரை. அநேகமாக கட்டுரைகள் அனைத்தையும் நூலாகக் கொணரும் திட்டம் லயோலா கல்லூரிக்கு உள்ளது என்பதால் கட்டுரை குறித்த தகவல்களை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
என் உரைக்குப் பிறகு "குணங்குடி மஸ்தான் பாடல்களில் கானா பாடல்களின் கூறுகள்" எனும் ஆய்வுக் கட்டுரையை பேராசிரியர் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்தார். சென்னையின் தொன்ம குடிகளின் கலாச்சாரத்திலும் விளிம்பு நிலை மக்களின் பார்வையிலும் குணங்குடி அப்பாவின் பாடல்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் நோக்கத்தையும் வேறொரு கோணத்தில் அணுகுவதாக இந்தக் கட்டுரை அமைந்திருந்தது.
அடுத்தடுத்த அமர்வுகளில் "இஸ்லாமிய நாவல்களில் விரியும் அறியப்படாத வாழ்வியல்" குறித்து மானசீகன் எனும் முஹம்மது ரஃபீக் அருமையான உரையை வழங்கினார் ,"தமிழ் மலையாள திரைப்படங்களில் இசுலாமியர் வாழ்க்கைச் சித்தரிப்புகள் " எனும் அட்டகாசமான உரையை கதைசொல்லி மீரான் மைதீன் வழங்கி கவனத்தை ஈர்த்தார். "சீதக்காதி நொண்டி நாடகம்" பற்றிய அழகிய கட்டுரையை முஹம்மது சஃபி சமர்ப்பித்தார். இன்னும் சோதுகுடியான்,காயல் மகபூப் ஆகியோரும் கட்டுரை வாசித்தனர்.
இரண்டாம் நாள் அரங்கில் "இஸ்லாமிய நூலகங்கள்" குறித்த ஆழமான விரிவான தகவல்களை "லியாகத் அலி கலீமுல்லாஹ்" வழங்கினார்.
திருக்குறளை அரபில் மொழிபெயர்த்து அரங்கேற்றம் செய்த சாகச அனுபவங்களை பேராசிரியர் ஜாஹிர் ஹுசைன் விளக்கினார். பேராசிரியர் அப்துர்ரஸாக் வைக்கம் முகம்மது பஷீர் படைப்புகள் குறித்த அட்டகாசமான உரையை வழங்கி அசத்தினார்.
தனது மென்மையான குரலில் குளச்சல் மு.யூசுஃப் மொழிபெயர்ப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். (கடைசி வரை அந்த வீச்சரிவாளை மட்டும் வெளியே எடுக்கவில்லை). முனைவர் பிரபா மற்றும் முனைவர் மஞ்சுளா ஆகியோர் தோப்பில் முகமது மீரான் படைப்புகளை ஆய்வு செய்து உரை நிகழ்த்தினர். சிந்தனைச் சரம் ஆசிரியர் பீர்முகமது பாக்கவி, ஃபஹீமிய்யா சையது அபூதாஹிர் மஹ்ழரி ஆகியோர் முழு நிகழ்விலும் பங்குகொண்டு சிறப்பித்தனர்.
மொத்தத்தில் அனைவரது உரைக்கும் பிறகான கலந்துரையாடல்கள் அற்புதமாக அமைந்திருந்தன. வழக்கம்போல அரங்குக்கு வெளியேயான உரையாடல்கள் இன்னும் மெருகு சேர்த்தன. எல்லா உரையாடல்களையும் தனது புன்னகை தவழும் ஆழமான கருத்துகளால் கதைசொல்லி மீரான் மைதீன் உயிர்ப்புள்ளதாக ஆக்கினார்.
லயோலா கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஏற்பாடுகள் அனைத்தும் மிகச் சிறப்பாக இருந்தன. அருமையான உணவு, கச்சிதமான ஒருங்கிணைப்பு, நேர்த்தியான அரங்கம் என்று அனைவரையும் கைகோர்த்து நிகழ்வுகளை மெருகேற்றினார்கள். இதுபோன்ற பல்சமய உரையாடல்களின் அவசியத்தை உணர்ந்து அனைத்து கல்லூரிகளும் கருத்தரங்குகளை நிகழ்த்தினால் நிச்சயம் அது நல்லதொரு மாற்றத்தை உருவாக்கும்.குறிப்பாக இஸ்லாமிய சமுதாய பணக்காரப் பிரமுகர்களை மட்டும் அழைத்து பிரியாணி சாப்பிட்டு ஏப்பமிட்டுப் பிரியும் "இஸ்லாமிய இலக்கிய" எனும் அடைமொழியுடன் கூடிய இயக்கங்கள் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை நோக்கி நகர வேண்டும் என்பது அனைவரது ஏக்கமாகவும் இருந்தது.
அத்தனைக்கும் மேலாக நிகழ்வின் தலைப்புகளையும் கட்டுரையாளர்களையும் தேர்வு செய்து நிகழ்வின் பின்னணியில் அச்சாணியாக இருந்து சகலத்தையும் கோர்த்திணைக்கும் கண்ணியாகச் செயல்பட்ட கோம்பை அன்வர் அவர்களது பணி போற்றத்தக்க ஒன்று.
கடைசியாக சான்றிதழ் வழங்கும்போது அருட்தந்தை மரிய அருள்ராஜ் கூறினார்,"நீங்க அடிக்கடி லயோலாக்கு வரவேண்டி இருக்கும் நிஷாமன்சூர் " என்று. "கண்டிப்பாக ஐயா,கரம்கோர்த்து இயங்குவோம்" என நானும் உறுதியளித்தேன். பள்ளிப் படிப்புக்குப் பிறகு பிழைப்பின் நெருக்கடிகள் காரணமாக பதினேழு வயதில் ஜவுளித்துறை கீழ்நிலை ஊழியனாக வாழ்வைத் தொடங்கிப் பின்னர் ஆர்வம் காரணமாக தபாலில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை சமூகவியல் படித்த, கல்லூரி வாசலை மிதியாத என்னை லயோலா கல்லூரி போன்ற பாரம்பரிய பெருமைமிகு கல்விக்கூடத்தில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து உரையாட வைத்த எல்லாம்வல்ல இறைவனுக்கே எல்லாப்புகழும் புகழ்ச்சியும் என்கிற நன்றி நவில்தலுடன் கல்லூரி வளாகத்தை விட்டு நெகிழ்ந்த மனதுடன் வெளிவந்தேன்.
#அருட்தந்தை மரிய அருள்ராஜ் அவர்களுடனும்,நண்பன் மம்மதப்பாவுடனும் கல்லூரி தேவாலயத்துடனும் நான்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment